உண்மையில் தோனி அணிக்கு தேவையா? ஓர் அலசல்

இந்த ஐபிஎல்-ல், எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக அடிக்க முடியாத புவனேஷ் குமார் பந்தினை தோனி மட்டுமே பிரித்து மேய்ந்தார் என்பது உண்மைதான். ஆனால்....

தோனி ரசிகர்கள் மத்தியில் தற்போது ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருவது, ‘ஹர்பஜன் எப்படி தோனியைப் பற்றி இதுபோன்று பேசலாம்?’ என்பதே. அப்படி என்ன கேட்டார் ஹர்பஜன் என்று பார்த்தோமேயானால், ‘நானும், கம்பீரும் அணியில் (சாம்பியன்ஸ் லீக்) சேர்க்கப்படவில்லை? நான் பார்த்த வரையில், தோனியால் இப்போது முன்புபோல் அதிரடியாக அடிக்க முடியவில்லை. ஆனால், அவருக்கே தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கம்பீர் இந்த ஐபிஎல் தொடரில் ரன்கள் குவித்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன்?’… இதுதான் ஹர்பஜன் முன்வைக்கும் வாதம்.

தோனியின் தற்போதையை நிலை:

ஹர்பஜன் சொல்வதை நாம் ஒரேடியாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால்…. ஆனால், அவர் சொன்ன ஒரு விஷயம் உண்மையாக இருப்பதை மறுக்க முடியாது. அது தோனியின் பேட்டிங் பற்றியது. அதிரடி ஆட்டங்களுக்கு பஞ்சமில்லாத நடந்து முடிந்த ஐபிஎல் தொடரையை இதற்கு சான்றாக எடுத்துக் கொள்வோம்.

இத்தொடரில் தோனிக்கு பெரும்பான்மையான போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் ஜொலித்தது என்னவோ மிகச் சில ஆட்டங்களில் தான். அதிகம் சிக்ஸர் அடித்தால் தான் அவர் பழைய அதிரடி ஃபார்மோடு இன்றும் உள்ளார் என கூறுவதில் நியாயம் இருக்க முடியாது. அதேசமயம், அவரது ஆட்டத்தை நாம் உற்று நோக்கினோம் என்றால், அவர் தனது பழைய அதிரடி ஆட்ட முறையில் தடுமாறுவது தெரியும். குறிப்பாக, ஆரம்ப காலக் கட்டம் முதல், தோனியை இன்ச் இன்ச்சாக ரசித்துவரும் ரசிகர்களால் அதனை நிச்சயம் உணர முடியும்.

தனக்கு ஏதுவாக வரும் பந்துகளை மட்டுமே அடிக்க நினைக்கிறாரே தவிர, வேறு விதமான ஷாட்களை அவர் முயற்சித்து பார்த்ததாக தெரியவில்லை.  குறிப்பாக ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷார்ட்களை அவர் முயற்சிக்கவேயில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை தோனி தான் விளக்க வேண்டும். “I don’t study cricket too much. Whatever I have learned or experienced is through cricket I’ve played on the field, and whatever little I have watched” என்று தோனி சொன்னதையும் நாம் மறக்கவில்லை. அதற்காக, என்னை சுற்றி விமர்சனங்கள் எழும்போதும் கூட, நான் அதைத் தான் ஃபாலோ செய்வேன் என்று நினைப்பதால் தான் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த ஐபிஎல்-ல், எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக அடிக்க முடியாத புவனேஷ் குமார் பந்தினை தோனி மட்டுமே பிரித்து மேய்ந்தார் என்பது உண்மைதான். ஆனால் புவனேஷ், தோனிக்கு ஏதுவான லைனில் பந்துவீசியதால் தான் அவை சிக்ஸர்களுக்கு பறந்தன. ‘ப்ளே ஆஃப்’ போட்டியின் போது தோனிக்கு இறுதி ஓவரை வீசிய பும்ரா, கடைசி இரு பந்துகளை யார்க்கர்களாக வீசி ‘டாட்’ பால் ஆக்கினார். அது போன்று, புவனேஷ் வித்தியாசமாக மாற்றி வீசியிருந்தால், தோனி இந்தளவிற்கு அவரை டேமேஜ் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!.

பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு வயது ஆகும் போது, அவர்களது ஆட்டங்களில் திறன் குறைவது இயல்பு தான். இது அனைத்து துறையினருக்கும் கூட பொருந்தும். ஆனால், அந்த திறன் குறைந்தவரில் ஒருவருக்கு மட்டுமே ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது? என்பதே ஹர்பஜனின் கேள்வி. அவருடைய இடத்தில் இருந்து பார்க்கும் போதும், ஒரு நடுநிலையானவனாக பார்க்கும் போதும் ஹர்பஜனின் இந்த கேள்வி சரியே…!

இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் ஆடும் அணிகளுடன் ஒப்பிடும் போது, தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பராக உள்ளார். விக்கெட் கீப்பிங்கில் அவரது வேகமும், விவேகமும் இன்றும் அசரடிக்கின்றன. அதுமட்டுமல்ல.. விக்கெட்டுகள் இடையே அவர் ஓடும் வேகத்திற்கு, இளம் வீரர்களாலேயே ஈடு கொடுக்க முடியவில்லை. அதுபோன்று, டி20 போட்டிகளில் கேப்டனாக பிரகாசிக்க தடுமாறும் கோலிக்கு, நிச்சயம் சிறந்த ஆலோசகராகவும், இக்கட்டான நேரத்தில் முடிவுகள் எடுப்பது குறித்த அந்த நேர்த்தியை சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும் தோனி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்த காரணங்களால் தான் தோனிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் சிக்ஸர் அடிக்கலாம். ஆனால், எல்லோராலும், எப்போதும் தோனி போன்று இறுதிக் கட்டத்தில் வெற்றியை அப்படியே கொண்டுவந்து விட முடியாது. அதேசமயம், ‘ஹெலிகாப்டர்’ல் இருந்து தோனி இறங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இறங்கிய அவர், தானாக வீட்டிற்கு செல்வதற்கு முன், மற்றொரு வீரனை பிசிசிஐ கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

×Close
×Close