உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் என்று ஷார்ட் அன்ட் ஸ்வீட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
வரும் ஜூலை 19ம் தேதி மும்பையில் நடைபெறும் பிசிசிஐ-யின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தோனி இத்தொடரில் பங்கேற்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 2020ல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடர் வரை தோனி ஆடுவார் என்ற செய்தியும், தோனி ஓய்வு முடிவில் உறுதியாக இருக்கிறார். பிசிசிஐயும் அவரது ஓய்வை எதிர்பார்க்கிறது என்ற ரீதியிலான தகவலும், பறவையின் இரு சிறகுகளை போல பேலன்ஸாக ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.
அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அணியில் யார் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஹாட்டாக உள்ளது. கேப்டன் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்பது ஏறக்குறைய உறுதி. அதேபோன்று, இந்தியாவின் ஸ்பின் ட்வின்ஸ்களான குல்தீப் - சாஹல் கூட்டணிக்கு ஓய்வு அளிக்கவும் பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆகையால் இத்தொடரில் ஸ்பின் டிபார்ட்மென்ட்டில் புதிய மாற்றங்கள் இருக்கலாம்.
தற்போது இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகிய வீரர்களில் பெரும்பாலானோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மாயன்க் மார்கண்டே, க்ருனால் பாண்ட்யா, நவ்தீப் சைனி, ஆவேஷ் கான் ஆகியோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம். அதேபோல், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் ஷங்கருக்கு பதில் அழைக்கப்பட்ட மாயங்க் அகர்வாலுக்கும் வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படலாம். சில காரணங்களால் ப்ரித்வி ஷாவுக்கு அணியில் இடமில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என தெரிகிறது. அதேசமயம், மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
வேகப்பந்து வீச்சில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசி அசத்திய நவ்தீப் சைனி, ஆவேஷ் கான் மற்றும் கலீல் அஹ்மதுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் தோனி?
இந்திய அணியின் சகாப்தம் மகேந்திர சிங் தோனி இத்தொடருக்கு தேர்வாக வாய்ப்பு மிக மிக குறைவு என்றே தெரிகிறது. அவர் நிரந்தர ஓய்வுப் பெறுவாரா இல்லையா என்பது அடுத்தக் கட்ட விஷயம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரை பொறுத்தவரை அவர் தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றே தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு தேர்வாக வாய்ப்புள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
ரோஹித் ஷர்மா(c), மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி/மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்ட்யா, தீபக் சாஹர், ராகுல் சாஹர்/மாயங்க் மார்கண்டே, நவ்தீப் சைனி, ஆவேஷ் கான், கலீல் அஹ்மது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.