5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பரும் அணிப் பட்டியலில் இருக்கிறார்.
இலங்கை தொடர் முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டி, 6 ஒருநாள் போட்டி, 3 டி-20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் இந்திய டெஸ்ட் அணியை இன்று (டிசம்பர் 4) இந்திய அணியின் தேர்வுக்குழு அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான 17 பேர் கொண்ட அணிப் பட்டியலில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என 5 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்ற அடிப்படையில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜாவைத் தாண்டி 3-வது சுழற் பந்து வீச்சாளர் சேர்க்கப்படவில்லை.
அதேசமயம் பவுன்ஸ் ஆடுகளங்களில் யார் வேண்டுமானாலும் காயமடையும் வாய்ப்பு உண்டு என்பதால், விருத்திமான் சஹாவுடன் மாற்று விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேலும் அணியில் இடம் பிடித்திருக்கிறார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும், பேட்ஸ்மேன்களாக முரளி விஜய், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ரோகித் சர்மா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம் வருமாறு : விராட் கோலி (கேப்டன்), விஜய், ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, விருத்திமான் சகா, அஷ்வின், ஜடேஜா, பார்தீவ் படேல், ஹர்திக் பாண்ட்யா, முகம்மது ஷமி, இஷாந்த்ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்