இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் தான் ஹர்மான்ப்ரீத் கவுர். டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக சதம் அடித்த முதல் வீராங்கனை, 3000 ரன்களுக்கு மேல் கடந்த முதல் வீராங்கனை என பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஹர்மான்ப்ரீத் கவுர் மகளிர் தினத்தில் பிறந்தவர்.
1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி பஞ்சாப் மாநிலம் மேகாவில் பிறந்தவர் ஹர்மான்ப்ரீத் கவுர். இவரது அப்பா ஒரு கைப்பந்து மற்றும் கூடைப்பந்தாட்ட வீரர். நீதிமன்றத்தில் எழுத்தாளராக இருக்கும் அவரது தந்தை கிரிக்கெட் ஆர்வலராக இருந்துள்ளார். பள்ளி அகாடமியில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர், ஆண்கள் அணியுடன் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முதல் சர்வதேச ஒருநாள் போட்டி
தனது 20 வயதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் அறிமுகமான ஹர்மான்ப்ரீத் கவுர், 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டிகளில் 4 ஓவர்கள் பந்துவீசி 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 2 அசத்தலான கேட்சுகளை பிடித்திருந்தார். பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 57 ரன்களில் சுருண்ட நிலையில், 58 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.
அதன்பிறகு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்று முன்னணி வீராங்கனையாக வலம் வந்த ஹர்மான்ப்ரீத் கவுர், 2010-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் அரைசதத்தை கடந்தார். இந்த போட்டியில் 113 பந்துகளை சந்தித்த அவர். 9 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் துரதிஷ்டவசமாக இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
தொடர்ந்து 2013-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி சதம் கடந்து அசத்தினார். இந்த போட்டியில் கடைசிவரை களத்தில் இருந்த அவர், 109 பந்துகளில் 107 ரன்கள் குவித்திருந்தார், இதில் 8 பவுண்டரியும் 2 சிக்சரும் அடங்கும். அதேபோல் 2009-ம் ஆண்டே இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளில் அறிமுகமான ஹர்மான்ப்ரீத் கவுர் முதல் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்,
டெஸ்ட் போட்டியில் அறிமுகம்
2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹர்மான்ப்ரீத் கவுர் முதல் இன்னிங்சில், 9 ரன்களும், 2-வது இன்னிங்சில் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹர்மான்ப்ரீத் கவுர், 38 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்துள்ள அவர், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.
கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியகோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில், கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியாலும், கேப்டன் மிதாலி ராஜ், துணைக்கேப்டன் கேஸ்வாமி ஆகிய இருவருமே காயம் காரணமாக வெளியேறியதால், ஹர்மான்ப்ரீத் கவுர் இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்தித்த இந்திய அணி, முதலில் பேட் செய்து 81 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமானக பூனம் ரவுத் 25 ரன்களும், ஹர்மான்ப்ரீத் கவுர் 20 ரன்களும், ரீமா மல்ஹோத்ரா 18 ரன்களும் எடுத்தனர். 82 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 63 ரன்களில் சுருண்டது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்
2013-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்மான்ப்ரீத் கவுர், அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 103 ரன்கள் குவித்து தனது 2-வத சதத்தை பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் 6 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இந்த தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 195 ரன்களும் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
2016-ம் ஆண்டு வெளிநாட்டு பிரீமியர் லீக் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்ற ஹர்மான்ப்ரீத் கவுர், பெண்கள் பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார், தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் போட்டி உலககோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில், 115 பந்துகளை சந்தித்த ஹர்மான்ப்ரீத் கவுர், 20 பவுண்டரி 7 சிக்சருடன் 171 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்கோர் செய்த 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பினை பெற்றார். முதலிடத்தில் 188 ரன்களுடன் திப்தி ஷர்மா இருக்கிறார்.
அதே சமயம் மகளிர் உலககோப்பை தொடரில் ஹர்மான்ப்ரீத் கவுர் எடுத்த 171 ரன்கள் தான் ஒரு வீராங்கனை எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய அணிக்காக ஆல்ரவுண்டராக கலக்கிய ஹர்மான்ப்ரீத் கவுர், 124 ஒருநாள் போட்டிகளில் 3322 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 171 ரன்கள் குவித்துள்ள அவர், பந்துவீச்சில் 31 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல், 153 டி20 போட்டிகளில் விளையாடி 3112 ரன்கள் குவித்துள்ள அவர், அதிகபட்சமாக 103 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 32 விக்கெட்டுகள் வீ்ழ்த்தியுள்ளார்.
மகளிர் கிரிக்கெட் அணியில் சாதனைகள்
டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 4 கேட்சுகளை பிடித்து அதிக கேட்சுகள் பிடித்த வீராங்கனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல், டி20 போட்டிகளில் விரைவாக 3000 ரன்களை (135 போட்டி) கடந்த வீராங்கனை பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறார். டி20 போட்டிகளில் 5-வது இடத்தில் களமிறங்கிய அதிக ரன்கள் (103) குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்திலும், டி20 போட்டிகளில் 106 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதிக போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றிய வீராங்கனை என்ற பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 4வது இடத்தில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் (171) குவித்த வீராங்கனை என்ற பட்டியலில் முதலிடத்திலும், ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் 3 கேட்சுகள் பிடித்து ஒரு போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த வீராங்கனை பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். மகளிர் டி20 கிரிக்கெட் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற பட்டியலில் 161 போட்டிகளுடன் ஹர்மான்ப்ரீத் கவுர் முதலிடத்தில் உள்ளார்.
2022-ல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டியில் ஹர்மான்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. 2022 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கமும், வென்றுள்ளனர். அதேபோல் 2017-ம் ஆண்டு இந்திய அரசின் அர்ஜூனா விருதை வென்ற ஹர்மான்ப்ரீத் கவுர், 2023-ம் ஆண்டின் விஸ்டன் இதழில் இடம்பெற்ற 5 கிரிக்கெட் பிரபலங்களில் ஒருவராக இருக்கிறார். மகளிர் தினத்தில் பிறந்து (மார்ச் 8) இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்து வரும் ஹர்மான்ப்ரீத் கவுர், இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தினம் நேற்று (மார்ச் 7) என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.