இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆண்கள் அணிக்கு நிகராக பல தொடர்களில் பெண்கள் அணியும் விளையாடி வரும் நிலையில் சர்வதேச அளவில் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. இந்தியாவில் 1976-ம் ஆண்டு பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும், 1978-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் விளையாடப்பட்டது.
இந்திய பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன், தமிழகத்தை சேர்ந்த சாந்தா ராங்கசாமி செயல்பட்ட நிலையில், ஒருநாள் தொடரின் முதல் கேப்டனாக மகாராஷ்டிராவின், டயானா எடுல்ஜி செயல்பட்டார். 1956-ம் ஆண்டு ஜனவரி 26-ந தேதி மும்பையில் பிறந்த டயானா எடுல்ஜி 1976-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.
இளம் வயதில் டயானா எடுல்ஜி
தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ரயில்வே காலணியில், டென்னிஸ் பந்தின் மூலம் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற டயானா எடுல்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் லாலா அமர்நாத்தின் கிரிக்கெட் அகாடமியில் தனது கிரிக்கெட் திறமைகளை வளர்த்துக்கொண்டார். தொடர்ந்து ரயில்வே அணிக்காக தனது கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார்.
அந்த நேரத்தில் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அணி தொடங்கப்பட்ட நிலையில், டயானா எடுல்ஜி இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கிரிக்கெட் போட்டிக்கு வருவதற்கு முன் டயானா எடுல்ஜி தேசிய டேபிள் டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். பேட்டிங்கில் சிறந்த திறமை கொண்ட டயானா எடுல்ஜி, பந்துவீச்சிலும் சுழற்பந்துவீச்சாளராக அசத்தியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 1976-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய டயானா எடுல்ஜி, 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பேட்டிங்கில் அவர் களமிறங்கவில்லை. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய டயானா எடுல்ஜி 17 விக்கெட்டுகள் வீ்ழ்த்தி அசத்தினார்.
ஒருநாள் போட்டியின் முதல் கேப்டன்
இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் அசத்திய டயானா எடுல்ஜி, 1978-ம் ஆண்டு இந்திய பெண்கள் ஒருநாள் போட்டி அணியின் முதல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 1978-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியர் இங்கிலாந்து நியூசிலாந்து இந்திய ஆகிய 4 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றது. டயானா எடுல்ஜி தலைமையில் தனது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 63 ரன்களில் சுருண்ட நிலையில், அதிகபட்சமாக டயானா எடுல்ஜி 18 ரன்கள் எடுத்திருந்தார். பந்துவீச்சிலும், இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய டயானா எடுல்ஜி பேட்டிங்கில் 32 ரன்கள் சேர்த்திருந்தார்.
1986 இங்கிலாந்து சுற்றுப்பயணம்
1986-ம் ஆண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணியின் கேப்டனாக சென்ற டயானா எடுல்ஜி லார்ட்ஸ் பெவிலியனுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவர் எம்.சி.சி மைதானம் குறித்து சர்ச்சையாக பேசியதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவர் களமிறங்கவில்லை.
இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், கடைசி போட்டியில் டயானா எடுல்ஜி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக திகழ்ந்த டயானா எடுல்ஜி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடையாளமாக திகழ்ந்துள்ளார்.
டயானா எடுல்ஜி புள்ளி விபரங்கள்
இந்திய அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டயானா எடுல்ஜி, ஒரு அரைசதத்துடன் 404 ரன்கள் சேர்த்துள்ள நிலையில், பந்துவீச்சில் 63 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 34 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 211 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 25 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8 ஒருநாள் போட்டிகளில் 9 கேட்சுகளை பிடித்துள்ளார்.
இந்திய அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டயானா எடுல்ஜி, அதிக டெஸ்ட் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இவர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகள் வீசிய வீராங்கனைகள் பட்டியலில் 5098 பந்துகள் வீசி முதலிடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகள் வீசியுள்ள டயானா எடுல்ஜி, அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீராங்கனைகள் பட்டியலில் 1624 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் தொடரில் ஒரு இன்னிங்சில் 3 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச் பிடித்த வீராங்கனைகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.
10-வது விக்கெட்டுக்கு சாதனை
1991-ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின், 2-வது இன்னிங்சில், இந்திய அணி 211 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்த நிலையில், 10-வது விக்கெட்டுக்கு, சந்தராவுடன் இணைந்த டயானா எடுல்ஜி 56 ரன்கள் குவித்தார். உலகளவில் இது 10 விக்கெட்டுக்கு 8-வது அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய 57 ரன்கள் குவித்து 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமை டயானா எடுல்ஜி பெற்றிருந்தாலும், இதில சில அதிகாரப்பூர் டெஸ்ட் போட்டியும் இருப்பதால், சர்வதேச அளவில் அவர் 63 விக்கெட்டுகள் வீழ்த்தியதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1993-ம் ஆண்டு டயானா எடுல்ஜி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
1983-ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்ற டயானா எடுல்ஜி 2002-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, பெற்றார். அதே ஆண்டு பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் அவரின் பங்களிப்பை பார்த்து, காஸ்ரோலால் பாராட்டப்பட்டார். நன்மைக்கான கிரிக்கெட் போட்டிகளில் முதல் விருது பெற்றவர் டயானா எடுல்ஜி. கடந்த 2017-ம் ஆண்டு பிசிசிஐ நிர்வாக குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் பிசிசிஐ தேர்வு குழுவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமை பெற்றுள்ளார். 2023-ம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட டயானா எடுல்ஜி-க்கு இன்று பிறந்த நாள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.