ஜப்பானில் உள்ள காகமிகஹாராவில் பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் 2017 நடைபெற்று வருகிறது. இன்று(அக்.,28) நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியா - சிங்கப்பூர் அணிகள் மோதின.
இதில், இந்திய வீராங்கனைகளின் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு முன்பாக சிங்கப்பூர் வீராங்கனைகள் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். மிகவும் சிறப்பாக ஆடிய இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். இதனால் 10-0 என இந்திய அணி சிங்கப்பூரை துவம்சம் செய்தது.
நவ்நீத் கவுர் (3-வது மற்றும் 41-வது நிமிடம்), ராணி (15-வது மற்றும் 18-வது நிமிடம்), நவ்ஜோத் கவுர் (30-வது மற்றும் 50-வது நிமிடம்), லால்ரேம்சியாமி (18-வது நிமிடம்), தீப் கிரேஸ் எக்கா (25-வது நிமிடம்), குர்ஜித் கவுர் (41-வது நிமிடம்) மற்றும் சோனிகா (45-வது நிமிடம்) ஆகிய இந்திய வீராங்கனைகள் கோல்களை அடித்தனர்.
இந்தியாவின் கோல் மழையை தடுக்க முடியாமல் சிங்கப்பூர் அணியின் கோல் கீப்பர் ஃபெலிசா லாய் பரிதவிப்பாய் நின்றதை பார்த்த போது இந்திய ரசிகர்களுக்கே சோகமாக தான் இருந்தது. இருப்பினும், இந்திய அணியின் முதல் கோல் வாய்ப்பை அவர் தடுத்து இருந்தார். ஆனால், அதன்பின், அவரால் எந்த கோலையும் தடுக்க முடியவில்லை.
முதல் கால் பகுதியில் இரண்டு கோல்கள் அடித்த இந்தியா, 2-வது கால் பகுதியில் நான்கு கோல்கள் அடித்தது. 3-வது கால் பகுதியில் மூன்று கோல்களும், 4-வது மற்றும் கடைசி கால் பகுதியில் ஒரு கோலும் அடிக்க, 10-0 என பிரம்மாண்டமாக வெற்றிப் பெற்றது இந்திய மகளிர் அணி.
முன்னதாக, இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில், மலேசியாவை சீனா 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது.