5-வது ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் 8 நிமிடம் 02.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தட்டிச்சென்றார்.
சவுதிஅரேபியா வீரர் தாரிக் அகமது வெள்ளிப்பதக்கமும் (8 நிமிடம் 03.98 வினாடி), ஈரானின் கிஹானி உசேன் வெண்கலப்பதக்கமும் (8 நிமிடம் 07.09 வினாடி) பெற்றனர்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சித்ரா 4 நிமிடம் 27.77 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
அதேபோல், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 70கிலோ பெல்ட் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தர்மேந்தர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த பதக்கங்களின் மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் டர்க்மெனிஸ்டன் நாடு உள்ளது. 39 தங்கல், 27 வெள்ளி மற்றும் 18 வெண்கல பதக்கங்களை குவித்து அந்நாடு முதலிடத்தில் உள்ளது.