2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். எனினும், இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.
R Praggnanandhaa Tamil News: ‘பிடே’ (FIDE) நடத்திய உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
Advertisment
இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. அதே போல் 2-வது சுற்று ஒன்றரை மணி நேரத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த டை-பிரேக்கரில் மாக்னஸ் கார்ல்சென் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். எனினும், இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.
இந்நிலையில், போட்டிகளை முடித்துக்கொண்ட பிரக்ஞானந்தா கடந்த 30ம் தேதி தாயகம் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து பிரக்ஞானந்தா தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் காசோலையை பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
Advertisment
Advertisements
மோடியுடன் சந்திப்பு
கடந்த 31ம் தேதி பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார். பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை தனது இல்லத்துக்கே அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.
இது குறித்து பிரக்ஞானந்தா தனது டிவிட்டர் பதிவில், "பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையான தருணம். என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்திய உங்கள் அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டு இருந்தார்.
It was a great honour to meet Hon'ble Prime Minister @narendramodi at his residence! Thank you sir for all the words of encouragement to me and my parents🙏 pic.twitter.com/dsKJGx8TRU
இந்நிலையில், பிரக்ஞானந்தா குறித்து அவர் பயணித்த இண்டிகோ விமானத்தில் இருந்து குழு நெகிழ்ச்சியான குறிப்பை வெளியிட்டுள்ளனர். “அன்புள்ள பிரக்ஞானந்தா, இன்று நீங்கள் எங்களுடன் விமானத்தில் பயணிப்பது உண்மையிலேயே எங்களுக்கு மரியாதை மற்றும் மகிழ்ச்சி. நீங்கள் நமது தேசத்தின் பெருமை. நீங்கள் நமது நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் இது போல் இன்னும் பல சாதிக்க வாழ்த்துகிறோம், பிரார்த்திக்கிறோம். நீங்கள் உண்மையிலேயே எங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம்.
உங்கள் விளையாட்டை மேம்படுத்தி உத்வேகத்துடன் இருங்கள், ”என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில் இண்டிகோ விமானத்தின் கேப்டன் மற்றும் கேபின் குழுவினரும் கையெழுத்திட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“