Advertisment

HBD Robin Singh : கரீபியனில் பிறந்த இந்திய ஆல்ரவுண்டர்... ராபின் சிங் கிரக்கெட் வரலாறு தெரியுமா?

1983-ல் டிரினிடாட் அணிக்காக விளையாடிய ராபின் சிங், அதே வருடம் தனது 19-வது வயதில் இந்தியாவில் குடியேறி சென்னையில் வசித்து வந்தார்.

author-image
D. Elayaraja
New Update
Robin Singh

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங்

இந்தியாவின் இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் பல வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். அந்த வகையில் கரீபியன் தீவில் பிறந்து இந்திய அணிக்காக முக்கிய ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் தான் ராபின் சிங்.

Advertisment

1963-ம் ஆண்டு பிரின்ஸ் டவுன், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ராம்நரைன் மற்றும் சாவித்ரி சிங் என்ற இந்திய வம்சாவளி தம்பதிக்கு பிறந்தவர் ராபிந்திர ராம்நரைன் சிங்  (ராபின் சிங்). இவரது முன்னோர்கள் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்த ராபின் சிங், 1982-83 காலக்கட்டத்தில்,  டிரினிடாட் இளைஞர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

தொடர்ந்து 1983-ம் ஆண்டு சீனியர் டிரினிடாட் அணியில் விளையாடிய அப்போதைய முன்னணி வீரர்களாக இருந்த பில் சிம்மன்ஸ், டேவிட் வில்லியம்ஸ், லாரி கோம்ஸ், ரிச்சர்ட் கேப்ரியல் உள்ளிட்ட வீரர்களுடன் இணைந்து விளையாடியுள்ளார்.

இந்தியாவில் குடியேறிய ராபின் சிங்

1983-ல் டிரினிடாட் அணிக்காக விளையாடிய ராபின் சிங், அதே வருடம் தனது 19-வது வயதில் இந்தியாவில் குடியேறி சென்னையில் வசித்து வந்தார். இங்கும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ராபின் சிங் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் பொருளாதார படிப்பில் முதுகலை பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு மாநில அணியில் இடம்பெற்ற ராபின் சிங் 1985-86 ரஞ்சி சீசனில் தமிழ்நாடு அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாட தொடங்கினார்.

ராபின் சிங் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக ஜெலித்த அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில், 1986-87 சீசனில் நடந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 33 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் கடந்து 131 ரனகள் குவித்திருந்த ராபின் சிங், வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ரயில்வே அணியை வீழ்த்தியது. அதன்பிறகு இன்றுவரை தமிழக அணி ரஞ்சி கோப்பை வென்றதில்லை.

இந்திய அணியில் அறிமுகம்

ரஞ்சிக்கோப்பை மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ராபின் சிங்-க்கு 1989-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3-வது போட்டியில் 6-வது வரிசையில் களமிறங்கிய ராபின் சிங் 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 4-வது போட்டியில் 7-வது வரிசையில் களமிறங்கி 10 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஆனால் ராபின் சிங்க்கு அடுத்து இந்திய அணியில் வாயப்பு மங்கிப்போனது.

இதனால் அடுத்து 7 ஆண்டுகள் உள்ளூர் மற்றும் வெளிநாடு லீக் போட்டிகளில் விளையாடி வந்த ராபின் சிங் 1996-ல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் டைட்டன்கோப்பைக்கான தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டி  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ராபின் களமிறங்கினார்.

Robin Singh

1997-ம் ஆண்டு இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் 9 ரன்களும், 2-வது போட்டியில் 42 ரன்களும் எடுத்த ராபின் சிங் 3-வது போட்டியில் தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை நிறைவ செய்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி சதமும் இதுவாகும். அதன்பிறகு 2001-வரை இந்திய அணியில் ஆல்ரவுண்டராக கலக்கிங ராபின் சிங் தனது ஓய்வை அறிவித்தார்.

கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் அப்டேட்

இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ஜொலித்த ராபின் சிங், 1999-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் சகவீரரான அஜய் ஜடேஜாவுடன் இணைந்து இறுதிக்கட்ட ஓவர்களில் பேட்டிங்கில் அசத்தினார். கீழ் வரிசை பேட்டிங் மற்றும் மிதமான வேகப்பந்துவீச்சு திறமைக்காக அறியப்பட்ட ராபின் சிங், ஒருநாள் போட்டிகளுக்கு சிறந்த வீரராக கருதப்பட்டார். மேலும் இந்திய அணிக்கு சிறந்த பீல்டிங்கை கொடுத்தவர் ராபின் சிங்.

இந்திய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள ராபின் சிங், 27 ரன்கள் எடுத்துள்ளார். 136 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 9 அரைசதத்துடன் 2336 ரன்களும், பந்துவீச்சில் 69 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. அதேபோல் 137 முதல்தர போட்டிகளில் விளையாடி 6997 ரன்களும், 172 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ள ராபின் சிங் 22 சதங்களும், 33 அரைசதங்களும் எடுத்துள்ளார். இதில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதே அவரின் சிறந்த பந்துவீச்சு

ஓய்வுக்கு பின் பயிற்சியாளர் வாழ்க்கை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ராபின் சிங், உடனடியாக தனது பயிற்சியாளர் வாழ்க்கையை தொடங்கினார். முதலில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக தொடங்கிய ராபின் சிங், அதன்பிறகு ஹாங்காங் தேசிய அணிக்கு பயிற்சியாளராக மாறினார். இவரது பயிற்சியின் கீழ் அந்த அணி 2004-ம் ஆண்டு ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட ராபின் சிங், கௌதம் கம்பீர், ராபின் உத்தப்பா உள்ளிட்ட பல வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். 2007-08-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராபின் சிங், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெக்கான் சார்ஜஸ் அணியின் முதல் பயிற்சியாளர் ஆவார். 2009-ல் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கிரிக்கெட் அகாடமி

தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், வங்கதேச பிரீமியர் லீக்கின், குல்னா டிவிஷன் அணிக்கு, இலங்கை பிரீமியர் லீக் கரீபியன் பிரீமியர் லீக், அமெரிகக் பெண்கள் கிரிக்கெட் அணி, யுஏஇ கிரிக்கெட் அணியின் இயக்குனர், யுஏஇ தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் என பல பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது யுஏஇ டி20 லீக் தொடரில் எம்.ஐ எமிரெட்ஸ் அணியின் மேனேஜராக உள்ளார். அதேபோல் ராபின் சிங், தனது ராபின் சிங் ஸ்போர்ஸ் அகாடமியை யுஏ.-ல் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment