பெரிதான எதிர்பார்ப்பு ஏதும் இன்றி, இன்று டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை டெல்லி அணி ஏற்கனவே இழந்திருப்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு இல்லை என கூறலாம். ஆனால், முக்கால்வாசி தொடர் முடிந்த பிறகு, வீறு கொண்டு எழுந்திருக்கும் டெல்லி டேர் டெவில்ஸின ஆட்டத்தை பார்க்கவே ரசிகர்கள் டிவி முன்னர் ஆஜராகின்றனர்.
ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, விஜய் ஷங்கர் என அந்த அணியில் மையம் கொண்டிருக்கும் எதிர்கால இந்திய தூண்களின் அனல் பறக்கும் அதிரடி ஆட்டத்தை பார்க்க அனைவரும் விரும்புகின்றனர். 12 போட்டிகளில் ஆடி மூன்றில் மட்டும் வென்று, தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளனர். நடப்பு சீசனில், டெல்லி மோசமாக செயல்பட்டிருந்தாலும், மேற்குறிப்பிட்ட வீரர்கள் அடுத்த ஆண்டும் இதே அணியில் நீடிப்பார்கள் எனில், நிச்சயம் இன்னும் பெரிய அளவில் அவர்கள் சாதிப்பார்கள்.
அதேசமயம், எதிரணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்று விட்டது. இதனால், இப்போட்டியில் அவர்களுக்கு எந்த பிரஷரும் கிடையாது. ஆனால், 'பிளே ஆஃப்பிற்கு தகுதிப் பெற வேண்டும் என விளையாடக்கூடாது. விளையாடும் நாளன்று, வெற்றிப் பெற வேண்டும் என்பதில் மட்டும் சிந்தனை இருக்க வேண்டும். வேறு எதையும் பற்றி யோசிக்கக் கூடாது' என்ற கேப்டன் தோனியின் கூற்றுப்படி, சென்னை அணி இப்போட்டியை வெல்வதில் குறியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதலிடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் அணியை விட நெட் ரன் ரேட் அதிகமாக இருப்பதால், இப்போட்டியை வெல்லும் பட்சத்தில் மீண்டும் சென்னை முதலிடத்துக்கு முன்னேறலாம்.
ராயுடு, வாட்சன், ரெய்னா, தோனி என ஒருவர் தவறவிட்டால், இன்னொருவர் அணியை தாங்கிப் பிடிப்பது என மாறி மாறி சிறப்பாக விளையாடுவதால், பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது சிஎஸ்கே.
ஆக, இன்றைய போட்டியின் முடிவுகளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இருந்தாலும், நிச்சயம் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால், ஒரு விஷயம். மேட்ச் பிக்ஸிங் புகாரில் இரண்டு ஆண்டு தடை பெற்று, மீண்டும் வந்திருக்கும் சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, ஒவ்வொரு ஆண்டு பிளே ஆஃப் சென்ற அணி என்ற பெருமையை தக்க வைத்து கெத்து காட்டியிருக்கிறது. 'மேட்ச் பிக்ஸிங் செஞ்சு தான் இத்தனை வருஷம் ஜெயிச்சீங்களா?' என்று கேள்வி கேட்டவர்கள் எல்லாம், வாயை அடைத்துக் கொண்டு சைலண்டாக உட்கார்ந்து இருக்கிறார்கள்.
அதிலும், தோனியின் மரண ஃபார்மை பார்த்து விக்கித்து போயுள்ளனர். அது சென்னை ரசிகர்களுக்கே பெரிய சர்ப்ரைஸ் தான். தோனியின் அடியை பார்த்து, ஐபிஎல் மட்டுமல்ல... எப்போது இந்திய டீமில் இருந்து ரிட்டையர்டு? என்று கேட்டவர்கள் வடக்கு பக்கம் தெறித்து ஓடியிருப்பதாக தகவல்!.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மீதமிருக்கும் இரு போட்டியிலும் வென்று, முதல் இடத்தைப் பிடித்து மாஸ் காட்டினால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்னும் கெத்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் போட்டியின் Live Cricket Score Card-ஐ உடனுக்குடன் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம். தொடர்ந்து ஐஇதமிழுடன் இணைந்திருங்கள்.