சென்னை vs பஞ்சாப்: தோல்விக்கு காரணம் தோனியா? கோச்சா?

இது ஒரு தவறான முடிவு-ன்னு தோனிக்கும் தெரியும்

அன்பரசன் ஞானமணி

நேற்று இரவு எட்டு மணிக்கு நடந்த ஐபிஎல் போட்டியில், ஒரு ஆச்சர்யம் நடந்தது என்றால், அது ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கிய சம்பவம் தான். இருங்க.. இருங்க… தோனியின் மாஸ் இன்னிங்ஸ் பற்றிய விஷயத்துக்கு வரேன்… ஆனா, ரெய்னா இல்லாம நேற்று சிஎஸ்கே களமிறங்கியது வரலாற்றில் முதல் முறை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 158 போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா, காயம் காரணமாக நேற்று தனது முதல் மேட்சை மிஸ் செய்து, டக் அவுட்டில் அமர்ந்து இருந்ததை பார்க்கவே கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனா, நம்மை விட அதிகம் ஃபீல் ஆனது ரெய்னா தான் போல. முகத்தில் அத்தனை சோகம்.

அடுத்த ஆச்சர்யம், தோனியின் சரவெடி….! சரவெடி தான், அதிரடி தான்! இதெல்லாம் முன்னாடியே தல காட்டிடாப்புல.. ஆனா, ரொம்ப நாளைக்கு அப்புறம்… இல்ல, இல்ல… ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஒரு மெகா இன்னிங்சை தோனி கொடுத்துள்ளது தான் ஆச்சர்யம். 44 பந்தில் 79 ரன்கள். 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் 179.

ஆனா, இது எல்லாத்தையும் விட, தோனி பண்ணின அதகளம் என்ன தெரியுமா? 36 பந்தில் 85 ரன்கள் எடுக்க வேண்டும் சிஎஸ்கே. ரொம்ப ரொம்ப அசாத்தியமான சேஸிங் இது. ஆனால், இத ‘எட்ஜ் ஆஃப் த சீட்’ வரை கொண்டு வந்தவர் தோனி. அதுவும் 36 வயதில்..

இந்த உலகத்துல எவ்வளவோ அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கலாம். அதுவும், ஐபிஎல் ஆரம்பிச்சதற்கு அப்புறம், தடுக்கி விழுந்தா ஒரு அதிரடி பேட்ஸ்மேன் நிக்குறாங்க. எல்லாரும் சிக்ஸ் அடிக்குறாங்க. ஆனா, தோனி மாதிரி ஒரு அபூர்வ அதிரடி வீரர் கிடைப்பது அரிது-னு சொல்லமாட்டேன்.. கடினம்.. ஏன் தெரியுமா? இவர் ஃபினிஷர். உலகத்தின் தலை சிறந்த ஃபினிஷர். நேற்றைய மேட்ச்சுல தோனியால சக்சஸ் ஃபினிஷிங் பண்ண முடியாம போயிருக்கலாம். ஆனா, நேற்று பஞ்சாப் ஜெயித்ததை விட, தோனியின் ஆட்டத்தை மெச்சியவர்களே அதிகம். அதுதான் தோனி. இதுக்குமேல, தோனி பற்றி எழுத விரும்பல… ஏன்னா… தல பண்ணாத சாதனையும் இல்ல, அதை புகழ்ந்து எழுதாத கைகளும் இல்ல.

அதேசமயம், நேற்றைய மேட்ச்சுல சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதற்கு முக்கிய காரணம்-னு இதை சொல்ல முடியாது. ஆனா, ஒரு விஷயத்தைப் பற்றி நாம கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

பிராவோவுக்கு முன்னாடி ஜடேஜாவை களம் இறக்கியது ஏன்?

கொஞ்சம் ஜீரணிக்க முடியல… ஜடேஜாவ குறை சொல்ல வரல.. ராயுடு அவுட்டாகும் போது, சென்னையின் ஸ்கோர் 14 ஓவர்ல 113-4. வெற்றிக்கு தேவையான ரன்கள் 85. இப்படியொரு சூழ்நிலையில பிராவோ-வ உட்கார வச்சு, ஜடேஜாவை ஏன் களம் இறக்கணும்? ஜடேஜா லெஃப்ட் ஹேண்டர் என்பதாலயா? இடது கை பேட்ஸ்மேன்களால் பவுலர்களை டெஸ்ட்ராய் பண்ண முடியும் என்பதை ஏத்துக்குறேன். ஆனா, ஜடேஜா…?  ஏங்க… அவரு எப்போ அதிரடியா அடிப்பாரு-னு அவருக்கே தெரியாதுங்க!.

ஜடேஜாவை பற்றி இன்னமும் தோனியும் சரி…. சிஎஸ்கே நிர்வாகமும் சரி… ஒரு சரியான முடிவுக்கு ஏன் வரலன்னு தெரியல. ஒன்னு புரிஞ்சுகோங்க… ‘If You Play Good Cricket, a lot of bad things get hidden’. இது ஆல் ரவுண்டர் கபில் தேவ் சொன்னது. இந்த பழமொழி இந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பலமாக பொருந்தும். பேட்டிங்கில் இதுநாள் வரை, தன்னை மிகப்பெரிய ஸ்டாராக முன்னிறுத்த முடியாமல் தடுமாறும் ஜடேஜா, பீல்டிங் மற்றும் பவுலிங்கை வைத்து, தனது தவறை மறைத்து வருகிறார் அல்லது சரிக்கட்டி வருகிறார்.

அவர் அணியில் நீடிப்பதற்கு காரணமே பீல்டிங் மற்றும் பவுலிங் தான். லோ ஆர்டரில் இறங்குவதால், அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை என்று கூறுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதுங்க. வாய்ப்பு கிடைச்சா போதும், பட்டைய கிளப்பிடலாம்-னு கியூவில் நிக்குறாங்க கிரிக்கெட் வீரர்கள். இப்படியொரு போட்டி சூழலில், அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டாமா?. இந்தியன் டீமுல எத்தனை மேட்ச்சுல, தோனி தனக்கு முன்னாடி ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து இருப்பார். அதில், ஒரு மெகா இன்னிங்ஸ் கூட இவர் ஆடலையே!. 2014ல் நியூசிலாந்துக்கு எதிரா ஆக்லாந்தில் நடந்த ஒன்டே மேட்ச்சுல, இறுதிக் கட்டத்துல 45 பந்துல 66 ரன்கள் அடிச்சாருங்க.. அதுக்கு அப்புறம், இத்தனை வருஷத்துல, ஒரு மேட்சுல கூட, அந்த மாதிரி அதிரடியா அவர் அடிச்சு பார்த்ததில்லை. குறிப்பா, ஸ்பின் பால் போட்டால் தான் அதிகம் சிக்ஸ் அடிப்பேன். ஃபாஸ்ட்-ல அடிக்க சிரமப்படுவேன்-னா என்னங்க பண்ண முடியும்?

நேற்று ஜடேஜாவை முன்னாடி இறக்குனது தவறான முடிவு-ன்னு தோனிக்கும் தெரியும். அதனால் தான், மேட்ச் முடிந்த பிறகு தோனி பேசுறப்ப, ‘வெளியில் கோச் ஸ்டீபன் பிளமிங் தான் உள்ளார். அதனால், பிராவோவிற்கு பதில் ஜடேஜாவை களமிறக்கும் முடிவை அவர் தான் எடுக்க வேண்டியதாகிப் போனது’ என்றார்.

மறுபடியும் சொல்றேன்… ஜடேஜாவை குறை சொல்வது நமது நோக்கமல்ல.. ஆனா, மூச்ச கொடுத்து தோனி அடிச்ச மேட்ச்சுல, பிராவோ நாட் அவுட்டா இருந்தும் அவருக்கு ஒரு பால் மட்டும் பேட் செய்ய வாய்ப்பு கிடச்சத நெனச்சா தான் வருத்தமா இருக்கு.

ஆனால், ஒன்னு. ‘நான் இன்னும் அடங்கல’ என்பதை நேற்று தோனி உலகிற்கு உரக்க காட்டியிருப்பது, ஐபிஎல் அணிகளுக்கு மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்குமான ஒரு எச்சரிக்கை தான்!.

×Close
×Close