ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ்! முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்!

ஐபிஎல் 2018 தொடருக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது

ஐபிஎல் 2018 தொடருக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

11வது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏப்ரல் 7ம் தேதி ஆரம்பிக்கும் இந்த ஐபிஎல் திருவிழா, மே மாதம் 27ம் தேதியன்று நிறைவு பெறுகிறது. இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்திலேயே நடைபெற உள்ளது.
லீக் போட்டிகள் மே 20ம் தேதியோடு முடிவடைகிறது. அன்றைய தினம், கடைசி லீக் போட்டியில் சென்னையும், பஞ்சாபும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. மே 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

குறிப்பாக, முன்பு போட்டி நேரங்களை மாற்றிய ஐபிஎல் ஆட்சிமன்ற குழு, இப்போது அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. அதாவது, இதற்கு முன் வரை, ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடந்தால் மாலை 4 மணிக்கு முதல் போட்டியும், இரவு 8 மணிக்கு இரண்டாவது போட்டியும் தொடங்கும். ஒரேயொரு போட்டி நடக்கும் பட்சத்தில், அப்போட்டி இரவு 8 மணிக்கே தொடங்கும்.

ஆனால், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை கொண்டுள்ள ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம், இரவு போட்டியை 8 மணிக்கு தொடங்குவதால், போட்டி முடிய நள்ளிரவு ஆகிவிடுகிறது. இதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவதாக ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதில், முதல் போட்டியை மாலை 5.30 மணிக்கும், இரண்டாவது போட்டியை 7 மணிக்கு தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனை, ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லாவும் உறுதி செய்தார்.

இதையடுத்து, இந்த நேர மாற்றத்தால் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளை பார்க்கும் நிலை ஏற்படும். இதனால், போட்டிகளை முழுமையாக ரசிக்க முடியாது என ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டி முடியவே 8.30 ஆகிவிடும். இதில், இரண்டாவது போட்டியை 7 மணிக்கே ஆரம்பித்தால், எப்படி பார்க்க முடியும்? எனவே பழைய நேரத்திலேயே போட்டிகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இரண்டு போட்டிகளையும் பார்ப்பதற்கு ஏற்ப எங்களிடம் நிறைய சேனல்கள் உள்ளது. ஆகவே, அதை குறித்து கவலைப்படத் தேவையில்லை என ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவை சமரசம் செய்தது.

இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணையில், ஆட்ட நேரங்கள் மீண்டும் பழைய முறைக்கே மாற்றப்பட்டுள்ளது. முதல் போட்டி 4 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணிக்குமே தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

×Close
×Close