சூதாட்ட புகார் எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2016,2017) ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன.
தடை முடிந்து ஐ.பி.எல் களத்துக்குத் திரும்பியுள்ள சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்தது. அந்த இரு அணிகளிலும் விளையாடிய வீரர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற அணிகளுக்காக விளையாடி வந்தனர்.
தோனி, அஷ்வின் ஆகியோர் புனே அணிக்காகவும் ரெய்னா, ஜடேஜா, மெக்குல்லம் போன்றோர் குஜராத் அணிக்காகவும் ஆடினர்.
இவர்களில் எந்த வீரரை சிஎஸ்கே தக்க வைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தச் சூழ்நிலையில், ஐ.பி.எல். அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சர்ஃபராஸ் கான்
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா / ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா
டெல்லி டேர்டெவில்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர், க்ரிஸ் மோரிஸ், ரிஷப் பண்ட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டேவிட் வார்னர், புவனேஷ் குமார்
ராஜஸ்தான் ராயல்ஸ் - ஸ்டீவன் ஸ்மித்
கிங்க்ஸ் XI பஞ்சாப் - அக்சர் படேல்
இந்த தகவலை ஐஇ தமிழ் கடந்த 2ம் தேதியே செய்தியாக வெளியிட்டு இருந்தது. சென்னை அணி தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை மீண்டும் தக்க வைக்கும் என்பதை நாம் முன்பே 'தல' தோனி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் என்ற செய்தியில் தெரிவித்து இருந்தோம்.
அதேபோல் மும்பை, ஹைதராபாத் போன்ற அணிகளிலும் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் முன்பே தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.