கொல்கத்தாவில் நேற்று நடந்த 3வது ஐபிஎல் லீக் போட்டியில், முதன் முதலாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. ஆரம்பமே, தினேஷுக்கு சரியான எதிரணி கேப்டனுடன் மோதல். அந்த சுவாரஸ்யத்துடன் போட்டியை பார்க்க ஆரம்பித்தோம்.
டாஸ் வென்ற தினேஷ் கார்த்திக், பீல்டிங்கை தேர்வு செய்தார். (சென்னை - மும்பை மோதிய முதல் போட்டியில் இருந்து, இந்தப் போட்டி வரை தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் டாஸ் வென்ற கேப்டன்கள் பீல்டிங்கையே தேர்வு செய்துள்ளனர்).
இதன்படி கோலி படை களமிறங்கியது. பிரண்டன் மெக்குல்லம், டி காக், விராட் கோலி, ஏ பி டி வில்லியர்ஸ் என்ற அவர்களது முதல் நான்கு வீரர்களை பார்த்தபோதே, லைட்டா தல கிறு கிறு வென இருந்தது. மெக்குல்லம் 27 பந்தில் 43 ரன்களும், டி காக் 4 ரன்னிலும் அவுட்டானார்கள். பின் 'ஏ பி டி விராட்' கூட்டணி இணைந்து, கொல்கத்தா பந்துவீச்சை அடித்து நொறுக்க ஆரம்பித்தது.
மிட்சல் ஜான்சன், குல்தீப் யாதவ், சுனில் நரைன் என பாகுபாடின்றி இருவரும் பிரித்து மேய்ந்தனர். எப்படி இவர்களை சமாளிப்பது என பவுலர்கள் யோசிக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக், 'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்' என்ற தோனியின் விளம்பர வரிகள் பின்னால் ஒலிக்க, ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு ஓவர் மட்டும் வீசியிருந்த பேட்ஸ்மேன் நிதிஷ் ராணாவை பவுலிங் செய்ய அழைத்தார்.
என்ன ஆச்சர்யம்! அந்த ஒரே ஓவரில், டி வில்லியர்ஸ், கோலி இருவரையும் அடுத்தடுத்த பந்தில் அவுட்டாக்கினார் ராணா. டி வில்லியர்ஸ் கேட்ச் கொடுக்க, அடுத்த பந்தில் விராட் போல்டானது தான் ஆச்சர்யத்தின் உச்சம்!. கேப்டனாக தினேஷ் கார்த்திக்கின் இந்த மூவ் 'ரியலி கிரேட்'!. இப்போது ராணா கரியரில் இரண்டு விக்கெட்டுகள்.
ஆனால், இதே கேப்டனாக கடைசி ஓவரை வினய் குமாரிடம் கொடுத்து ஏமாந்தார் தினேஷ். கடைசி ஓவரில் மட்டும் 16 ரன்கள். விளாசியவர் மந்தீப் சிங். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.
இதன்பின், 'வாணவேடிக்கை' குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த கொல்கத்தா ஒப்பனர்கள் சுனில் நரைன் மற்றும் கிரிஸ் லின் களமிறங்கினர். அதில் ஒருவர் (லின்) புஸ்ஸாகிப் போக (5 ரன்கள்), மற்றொருவர் (சுனில் நரைன்) 19 பந்தில் 50 ரன்களை வெடித்து விட்டுச் சென்றது. ஆர்சிபி பவுலர்களோ கருகிய நிலையில்!.
எப்படியோ அதன் பின் தெளிந்து, ராபின் உத்தப்பாவை 13 ரன்னில் பெவிலியன் அனுப்பிய ஆர்சிபி பவுலர்கள், ராணாவை 34 ரன்னில் அவுட்டாக்கினார்கள். இருப்பினும், சுனில் நரைன் ஏற்படுத்திய தாக்கம், பின் கள வீரர்களுக்கு உண்டாகவிருந்த பெரும் பாரத்தை குறைத்தது. இதனால், 18.5வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து வென்றது கொல்கத்தா. ரவிச்சந்திரன் அஷ்வினைத் தொடர்ந்து, தினேஷ் கார்த்திக்கும் கேப்டனாக ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்தார். அதுமட்டுமின்றி கடைசி வரை களத்தில் நின்று 29 பந்தில் 35 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டு தான் வந்தார்.
என்ன ஒரேயொரு வருத்தம், 4 ஓவர்கள் வீசிய வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார்.
விராட் கோலிக்கு ஒரு வேண்டுகோள்
வாஷிங்டன் சுந்தர் வெறும் பவுலர் என்று நினைத்து விடாதீர். அவருக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால் அடுத்த சுனில் நரைன் அவர் தான். அவர் அடியை நீங்கள் பார்த்ததில்லையே! TNPL மேட்ச்-ஐ கொஞ்சம் யூடியூபில் போட்டு, வாஷிங்டன் சுந்தர் சிக்சர்ஸ்-னு போட்டுப் பாருங்க. ஒரு சிக்ஸ் தென்காசி பக்கம் போனா, இனொன்னு தஞ்சாவூர் பக்கம் போகும். அப்புறம் உங்க இஷ்டம்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.