இது நியாயமா சேப்பாக்கம்? யார் பிள்ளையை யார் சுமப்பது? #IPL2018

தோனி மீது வைத்திருக்கும் காதலுக்காக ஏணி வைத்து எவ்வளவு விலை ஏற்றினாலும், டிக்கெட்டை வாங்குவதே அவனது பாணி என நினைத்துவிட்டீர்களா?

தமிழகத்தில் கிரிக்கெட் என்றால், அதை நேரில் பார்க்க, எங்கள் கால்கள் சேப்பாக்கத்தை நோக்கித் தான் நகர்ந்தாக வேண்டும். என்னதான் ரீ-பிளே, ஸ்லோ மோஷன் என டிவியில் கிரிக்கெட் பார்க்க பல சுவாரஸ்யங்கள் இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் குழந்தையாக மாறி, துள்ளிக் குதித்து, தொண்டை கிழிய ஆராவாரம் செய்வதற்காக தானே மைதானத்திற்கு வருகிறோம்.

சென்னை அணி என்பதை நாங்கள் எல்லை கடந்து நேசிக்கக் காரணம் தோனி எனும் மனிதன் தான். இந்தியாவில் எங்கேயோ உள்ள ஜார்க்கண்ட் எனும் மாநிலத்தைச் சேர்ந்த தோனியை, தமிழகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட பல காரணங்கள் உள்ளன. ஆனால், அந்த தோனி ஆடும் சென்னை அணி ஆட்டத்தை நாங்கள் நேரில் பார்க்க அடிமட்ட டிக்கெட் விலையையே 1,300 என நிர்ணயம் செய்துள்ளீர்களே? அதற்கு உங்களால் காரணம் சொல்ல முடியுமா?

மொத்தம் எட்டு அணிகள் ஐபிஎல்லில் விளையாடுகின்றன. ஆனால், அந்த எட்டு அணிகளில் குறைந்தபட்ச டிக்கெட் விலை சென்னையில் தான் அதிகம்.

குறைந்தபட்ச டிக்கெட் விலை:

சென்னை (சேப்பாக்கம்) – 1,300
மும்பை (வான்கடே) – 800
ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்) – 500
பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் – 500
கொல்கத்தா (ஈடன் கார்டன்) – 400

ஏன்? ஏன் இப்படி? சேப்பாக்கம் செல்வதை நினைத்தாலே ‘சே!’ என்று உள்ளது.

எங்கள் எதிர்பார்ப்பை நீங்கள் காசக்குகிறீர்களா? அல்லது நீங்கள் சென்னை மாநகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் 175 கோடி மதிப்பில் கட்டிய I,J,K அரங்குகளில் ரசிகர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளதற்காக, இழப்பை சரிக்கட்ட எங்கள் தலையில் அதிக விலையை சுமத்துகிறீர்களா?

இந்த மூன்று அரங்குகள் திறக்கப்பட்டால் கூடுதலாக 12,000 ரசிகர்கள் அமரலாம். மொத்தமாக 50,000 ரசிகர்கள் இங்கு அமரலாம். ஆனால், அந்த 12,000 இருக்கைகளில் நாங்கள் அமர முடியாமல் போனதற்கு யார் காரணம்? நாங்கள் காரணமா? யார் சுமையை யார் சுமப்பது?

தோனி மீது இவன் வைத்திருக்கும் காதலுக்காக, ஏணி வைத்து எவ்வளவு விலை ஏற்றினாலும், டிக்கெட்டை வாங்குவதே இவனது பாணி, என்று நினைத்துவிட்டீர்களா?

கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வெளிவராததால், திரை விமர்சனம் செய்பவர்கள் எல்லாம், காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ பிரச்சனை என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாவை ஒரே ஒரு மாதம் மக்கள் பார்க்காததன் விளைவு இது. அதையும் தாண்டி தான் அவன் கிரிக்கெட்டை நோக்கி வருகிறான்.

பொழுபோக்கு என்பது மனரீதியாக அனைவருக்கும் முக்கியமான ஒன்று. அப்படித் தான் கிரிக்கெட், சினிமா என்பதெல்லாம் எங்களுக்கு ஒரு பொழுபோக்கு. இன்று சினிமாவுக்கு வந்த நிலைமை, நாளை கிரிக்கெட்டுக்கும் வரலாம். இன்று எப்படி ரசிகன் சினிமாவை ஒரு மாதமாக மறந்து இருக்கிறானோ, அதேபோன்று அன்று ரசிகன் கிரிக்கெட்டை மறந்துவிடுவான் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

திரும்பவும் சொல்கிறேன், கிரிக்கெட் எங்களுக்கு பொழுதுபோக்கே! அதில் எங்களது ஆர்வத்தை நீங்கள் காசாக்குவதில் பிரச்சனை இல்லை. ஆனால், எங்கள் சக்திக்கும் மீறி, எங்கள் ஆர்வத்தை நீங்கள் விலை பேசுவதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதை எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொண்டால் எச்சரிக்கை! கோரிக்கையாக எடுத்துக் கொண்டால் கோரிக்கை.

×Close
×Close