புனேவில் இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் காயம் காரணமாக தோனி பங்கேற்பாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதுகுப் பகுதியில் காயம் அடைந்ததால், நேற்று பயிற்சியின் போது தோனி கலந்து கொள்ளவில்லை. சென்னை ரசிகர்களோ, ஒரு ரயில் முழுக்க படை திரண்டு, புனேவுக்கு சென்றுள்ளனர். தோனி ஆடவில்லை என்றால், அது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே. அவர்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும் தான்.
ஆனால், நம்ம தோனி, காயம் வந்தா அதை வெறித்தனமா எதிர்கொண்டு எப்படி மீண்டு வருவார் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தோனி பற்றி கூறிய சம்பவம் இது.
“2016ம் ஆண்டு வங்கதேசத்தில் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஒரு இரவு பொழுதில் ஜிம்மில் பயிற்சி செய்துக் கொண்டிருந்த தோனி பளுதூக்கும் கருவியைத் தூக்கும்போது, திடீரென தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், நிலைத்தவறி அந்த பளுதூக்கும் கருவியோடு கீழே விழுந்தார். நல்லவேளை அவர் மீது அந்த கருவி விழவில்லை. இதனால், தோனியால் நகரவே முடியவில்லை. ஊர்ந்து வந்து எச்சரிக்கை மணியை அடித்தார். உடனடியாக வந்த மருத்துவக் குழு அவரை ஸ்ட்ரெட்சரில் தூக்கி வைத்து கொண்டுச் சென்றனர்.
இதன்பின் நான் டாக்கா சென்றவுடன், பத்திரிக்கையாளர்கள் தோனி குறித்து கேள்விக் கேட்டனர். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டி நடைபெற இருந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் அவரது நிலை குறித்து அறிய அவரிடம் சென்று பேசிய போது ‘கவலை வேண்டாம் எம்எஸ்கே அண்ணா’ என்றார்.
பத்திரிக்கையாளர்களிடம் என்ன சொல்ல வேண்டும்? என கேட்டதற்கும் ‘கவலை வேண்டாம் அண்ணா’ என்றார். மாற்று வீரரை வரவழைக்கட்டுமா? என்று கேட்டதற்கும் ‘கவலை வேண்டாம்’ என்று மீண்டும் மீண்டும் அதே பதிலையே கூறினார்.
மறுநாள் காலை நான் தோனி அறைக்கு சென்ற போதும் அவர், ‘கவலை வேண்டாம்’ என்றார். நான் நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்தேன். தோனியின் ஆறுதல் வார்த்தைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், தலைமை தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீலை நான் உடனடியாக தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விளக்கினேன்.
ஆசியக் கோப்பை விதிகளின்படி 24 மணி நேரத்துக்கு முன்பு அணி வீரர்களை அறிவிக்க வேண்டும். எனவே, வேறு வழியில்லாமல் தோனிக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேலை வரவைத்தோம். அன்று மாலையே அவர் அணியுடன் இணைந்துகொண்டார்.
அன்று இரவு 11 மணி அளவில், நான் தோனியின் அறைக்கு மீண்டும் சென்றேன். அறையில் அவர் இல்லை. அப்போது எதேச்சையாக நான் மேல் மாடிக்கு சென்று பார்த்த போது, அவர் நீச்சல் குளத்தை நோக்கி நடக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தார். அப்போது நான், ‘நடக்கவே முடியாத இவரால் எப்படி விளையாட முடியும்?’ என்று நினைத்துக் கொண்டேன். உடனே தோனி என்னைப் பார்த்து, ‘இப்போதும் கவலை வேண்டாம். என்னிடம் சொல்லாமலேயே பார்த்தீவை அழைத்துவிட்டீர்கள். அதனால், நீங்கள் பாதுகாப்பு அடைந்துவிட்டீர்கள்’ என்றார். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.
போட்டி நடைபெறும் நாள் வந்தது. பேடை காலில் கட்டிக் கொண்டு அவர் பயிற்சிக்கு வந்ததைப் பார்த்து அனைவரும் ஒருகணம் அதிர்ந்தனர். அன்று மதியம் அணி அறிவிக்கப்படுவதற்குள் தோனி முழுமையாக அந்த போட்டிக்கு தயாராகிருந்தார். அவருடைய அறைக்கு என்னை அழைத்து, ‘நீங்கள் ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள்? எனக்கு ஒரு காலே போய்விட்டாலும், நான் பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடுவேன்’ என்றார். வெறித்தனத்துடன் காயத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடி, அந்த ஆட்டத்தில் அணியை வெற்றிப் பெற வைத்தவர் தோனி” என்று பிரசாத் தெரிவித்தார்.
இன்று பாகிஸ்தான் விளையாடாவிட்டாலும், போட்டியில் காயம் என்று வந்துவிட்டால், அதிலிருந்து தோனி எப்படி மீண்டு வருவார் என்பதற்கு இந்த உதாரணமே நமக்கு போதும். அவ்வளவு பெரிய வலியையே வென்று வந்த தோனி, இந்த முதுகு வலிக்கா பின்வாங்கப் போகிறார்?. தோனி விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், ‘அணி வெற்றி பெற வேண்டும்’ என்ற தாகம் தான் இந்த மனிதனின் தனித்துவம்.
‘வலி என் முதுகில் தானே தவிர கைகளில் அல்ல.. கடவுள் கைகளில் எனக்கு வலிமையைக் கொடுத்துள்ளார்’ என தோனி கடந்த போட்டியின் போது சொன்ன வார்த்தைகள் இன்று மெய்யாகட்டும்!.