Advertisment

IPL 2019 Final: டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டியின் திக்.. திக்.. தருணங்கள், தோல்விக்கு பிறகு டோனி சொன்ன ஹேப்பி நியூஸ்

ஒட்டுமொத்தமாக, சிஎஸ்கே ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம்.....

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl 2019 csk vs mi final match - கடைசி பந்து மர்மம்... தோனி கொடுத்த ஹாப்பி நியூஸ்... சென்னை vs மும்பை இறுதிப் போட்டி, ஓர் பார்வை!

ipl 2019 csk vs mi final match - கடைசி பந்து மர்மம்... தோனி கொடுத்த ஹாப்பி நியூஸ்... சென்னை vs மும்பை இறுதிப் போட்டி, ஓர் பார்வை!

என்ன ஒரு இறுதிப் போட்டி!!

Advertisment

என்ன ஒரு போராட்டம்!!

என்ன ஒரு அம்பயரிங்!!

என்ன ஒரு சொதப்பல்!!

இப்படி பல 'என்ன ஒரு' போட்டுக் கொண்டே போகலாம், நேற்று(மே.12) நடைபெற்ற சென்னை vs மும்பை இறுதிப் போட்டி பற்றி.

ஹைதராபாத் உப்பல் ஸ்டேடியம் மஞ்சள், நீல நிற உடைகளை தன்னகத்தே உடுத்தி மைதானம் முழுவதும் நிரம்பியிருக்க, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தோனி டாஸ் வென்றிருந்தால் கூட, பவுலிங் தான் தேர்வு செய்திருப்பார் என்பதால், டாஸில் பெரிய ஏமாற்றம் இல்லை.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தோனி உதிர்க்கும் வார்த்தைகள், 'பவுலிங் தான் எங்கள் பலம்' என்று. அதை நேற்று மீண்டும் நிரூபித்து காட்டினர் சிஎஸ்கே-வில் பந்தை கை ஏந்துபவர்கள்.

செமி கன்சிஸ்டன்சி டி காக் மற்றும் இன் கன்சிஸ்டன்சி ரோஹித் ஷர்மா வழக்கம் போல் மும்பை ஓப்பனர்ஸ்களாக களம் கண்டனர்.

இதில் சற்று வழக்கத்துக்கு மாறாக, 2வது ஓவரில் ஷர்துள் தாகூர் ஓவரில் ஒரு சிக்ஸ், தீபக் சாஹரின் 3வது ஓவரில் மூன்று சிக்ஸ் என்று எடுத்தவுடனேயே ஐந்தாவது கியரில் டி காக் பேட்டை சுழற்ற, தோனியே ஒரு நொடி, 'நாம பேட்டிங் பண்ணி இருக்கலாமோ' என்று யோசித்திருப்பார்.

ஆனால், அந்த தருணத்தில் சிஎஸ்கே பேசர்ஸ் சிந்தித்த விதம் அபாரமானது. முதல் மூன்று ஓவர்களுக்கு ஆஃப் ஸ்டெம்ப்பிற்கு வெளியேயும், குட் லென்த்திலும் பந்து வீசியவர்கள், அதன் பிறகு ஷார்ட் பந்துகளை அதிகம் வீசத் தொங்கினர். இதில் 'தலைக்கு மேல் கிடைத்த முதல் பலன்' டி காக்.

மேலும் படிக்க - ஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்ட சி.எஸ்.கே. ! விறுவிறுப்பான இறுதிப்போட்டி ஹைலைட்ஸ்

ஷர்துள் தாகுரின் ஷார்ட் பந்தில், டாப் எட்ஜ் ஆகி, 29 ரன்களில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் ஆனார்.

அடுத்த ஓவரிலேயே, தீபக் சாஹரின் ஸ்லோ பந்தில் ரோஹித் ஏமாற, மீண்டும் தோனியின் கைகளுக்கு பந்து செல்ல விரும்ப, 15 ரன்களில் ரோஹித் வெளியேற, 5.2வது ஓவரில் மும்பை ஓப்பனர்ஸ் பெவிலியனில்.

இந்த மகத்தான ஆச்சர்ய சாகசத்தை நிகழ்த்தியது சிஎஸ்கே பேசர்ஸ் என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!.

அதன்பிறகும் மும்பையால் அவர்களுக்கான தருணத்தை உருவாக்கவே முடியவில்லை.

'இந்தியாவின் டி வில்லியர்ஸ்' சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் 'பராசக்தி எக்ஸ்பிரஸ்' இம்ரான் தாஹிர் ஓவரில் போல்டாக, விக்கெட்டை கொண்டாட ஓடிய தாஹிர், ஸ்டேடியம் தாண்டி மணிக்கு 150 கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் பதிவு செய்தது!.

விட்டில் பூச்சி மினுக் மினுக் என்று மின்னுவதைப் போல், சில கேஷுவல் பவுண்டரிகள் அடித்து, 'இந்த புள்ளப் பூச்சியை எல்லாம் அடிக்க விடுறானுங்க பாரு' என்று சிஎஸ்கே ரசிகர்களை டென்ஷனாக வைத்த இஷான் கிஷன் 23 ரன்களில் மீண்டும் தாஹிர் ஓவரில் கேட்சானார்.

இம்முறை, மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் சென்னை ஹைவேஸில் இருந்து திரும்பி உப்பல் ஸ்டேடியம் வந்து சேர்ந்தார் இம்ரான் தாஹிர்.

பிறகு, க்ருனல் பாண்ட்யாவும் 7 ரன்களில் தாகுர் ஓவரில் கேட்சாக, 15 ஓவர்கள் முடியும் போது, ஹர்திக் பாண்ட்யாவும், பொல்லார்டும் களத்தில் நிற்க, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ஒருவித பீதி உருவானது என்னமோ உண்மை! தோனிக்கும் கூட..

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹர்திக் பாண்ட்யா கொடுத்த மிக மிக எளிதான கேட்சை மிஸ்டர்.பீல்டர் ரெய்னா தவறவிட, நிசப்தமானது சிஎஸ்கே dugout. அந்த மொமன்ட், தோனியின் முகத்தில் ஏற்பட்ட விரக்தி, இதுவரை நாம் காணாத ஒன்று. போட்டி கைவிட்டு போனதாகவே அவர் நினைத்திருப்பார். அது உண்மையும் கூட. 2009 ஐபிஎல் பைனலில் யூஸுப் பதான் கேட்சை இதே ரெய்னா தவறவிட, கோப்பையை தவறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். (அந்த காட்சி கண் முன்னே வந்து போகுமா இல்லையா!!)

ஆனால், இப்போதும் சிஎஸ்கே பவுலர்ஸ் கைக் கொடுக்க, 16 ரன்களில் மேற்கொண்டு பெரிதாக சேதாரம் ஏற்படுத்தாமல் சாஹர் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார் ஹர்திக். உடனே கேமராக்கள் ரெய்னா முகத்தை மொய்க்க, அவரோ மைனசில் கூட ரியாக்ஷன் காட்டாமல் அப்படியே நிற்க, கேமராவின் 'நொறுக்கு தீனி' மிஸ்ஸானது.

இறுதி ஓவரில் பொல்லார்ட் களத்தில்... எப்படியும் மூன்று சிக்ஸர்கள் பறக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், முதல் மூன்று பந்தும் டாட். வீசியது சக ப்ரோ பிராவோ. அனைத்தும் ஆஃப் ஸ்டெம்ப்பிற்கு மிகவும் வெளியே. டென்ஷனான அந்த 7 அடி யார்டு, ஆப் ஸ்டம்ப்பை தாண்டி ஒரு கி.மீ தள்ளி நின்று, பிராவோவை வெறுப்பேற்ற அரங்கம் அதிர்ந்தது. (யோவ்.. என்ன இது சின்னப்புள்ளத்தனமா!!)

ஒரு வழியாக, கடைசி இரு பந்தில் பவுண்டரி கிடைக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

சிஎஸ்கே இன்னிங்ஸ்

நேற்று பல சிஎஸ்கே ரசிகர்கள் 10 பிபி மாத்திரைகள் போட்டும், அவர்களை ஹாஸ்பிடல் நோக்கி ஓட வைத்திருப்பது இதோ இந்த இன்னிங்ஸ் தான்.

வழக்கம் போல ஷேன் வாட்சன், டு பிளசிஸ் ஓப்பனிங் இறங்க, வழக்கம் போல் டு பிளசிஸ் அதிரடி காட்ட, வழக்கம் போல் ஷேன் வாட்சன் பொறுமை காட்ட, பிள்ளையார் சுழி நன்றாகவே போடப்பட்டது.

ஆனால்...

க்ருனல் பாண்ட்யா வீசிய நான்காவது ஓவரில் 4,6,4 என்று காட்டு காட்டிய டு பிளசிஸ், ஒரு 'தேவையில்லாத ஆணி' ஷாட்டில் ஸ்டெம்பிங் செய்யப்பட, 26 ரன்களில் வெளியேற, முதல் விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே.

ரெய்னா... ராயுடு... இந்த இரண்டு பேரும் ஃபார்ம் அவுட்டாகி பல ஜென்மங்கள் ஆகிவிட்டதால், அவர்கள் இருப்பதும் ஒன்று தான், இல்லாததும் ஒன்று தான் என்பதை பலமுறை சொல்லி நாம் பத்திரப் பதிவே செய்துவிட்டோம். அது வழக்கம் போல் இறுதிப் போட்டியிலும் நிஜமானது.

ரெய்னா 8 ரன்களில் ராகுல் சாஹர் ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, ராயுடு 1 ரன்னில் பும்ராவின் ஷார்ட் பந்தில் கீப்பர் கேட்ச் ஆனார். (இது உலக வழக்கம் தானே!! ஷாக்காக என்ன இருக்கு-னுதானே சொல்றீங்க! கரெக்டு தான்)

இதற்கு அப்புறம் நடந்தது தான் சோதனையின் உச்சக்கட்டம்.

சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி 2 ரன்களில் ரன் அவுட்!!!! நம்ப முடிகிறதா?

வேற வழியில்லை நம்பித் தான் ஆகணும். ஹர்திக் பாண்ட்யா வீசிய 12.4வது பந்தில், வாட்சன் ஒரு புல் ஷாட் அடிக்க, அது மலிங்கா கைகளில் சிக்கியது. அவரோ, பவுலர் என்டு ஸ்டெம்ப்பில் ஓவர் த்ரோ செய்ய, தோனி ரன் ஓட முயற்சிக்க, மிஸ் த்ரோவை எடுத்து துல்லியமாக இஷான் கிஷன் அடிக்க, பந்து பைல்ஸை காலி செய்தது.

ஆனால், தோனியின் பேட் ஆன் தி கிரீஸில் இருந்தது போல் தெரிந்தாலும், தேர்ட் அம்பயர் அவுட் கொடுக்க, இறுதிப் போட்டியில், தோனி ரன் அவுட்டாகி வெளியேறுகிறார் என்பதை ஜீரணிக்கவே முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

இதற்கு இடையே ஷேன் வாட்சனுக்கு இரண்டு கேட்சுகள் தவறவிடப்பட்டு, தப்பிப் பிழைத்து ஆடிக் கொண்டிருக்க, 'பொறுத்தது போகும் பொங்கியெழு வாட்சா' என்று கியரை மாற்றினார். அதற்கு பிறகும் 2 கேட்சுகள் வாட்சனுக்கு விடப்பட க்ருனல் பாண்ட்யா ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார்.

மீண்டும் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் கைகளுக்கு வருவது போல் தெரிந்தது. அப்படி இப்படி என்று கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட, ஏற்கனவே பவர் பிளேயில் மலிங்காவை பிரித்து மேய்ந்த வாட்சனுக்கு மீண்டும் மலிங்காவையே நம்பி கொண்டுவந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

வாட்சன், ஜடேஜா களத்தில்...

முதல் பந்தில் 1, இரண்டாவது பந்தில் 1, மூன்றாவது பந்தில் 2 என அப்போது வரை ஆட்டம் சிஎஸ்கே வசம் இருந்தது. ஆனால், நான்காவது பந்தில், டீப் பாயிண்டில் அடித்த வாட்சன், முதல் ரன்னை வெற்றிகரமாக ஓட, இரண்டாவது ரன்னை எடுக்கலாமா வேண்டாமா என்ற பெரிய குழப்பத்தில் சிக்கி யோசித்து, சரி ஓடலாம்! என்று அவ்வளவு பெரிய உடம்பை தூக்கிக் கொண்டு ஓடி வருவதற்குள் ரன் அவுட் செய்யப்பட, இதுக்கு மேல் என்னத்த சொல்ல... 59 பந்துகளில் 80 ரன்களில் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியேறினார் வாட்சன்.

ஐந்தாவது பந்தில் தாகுர் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு தேவை மீண்டும் ஒரு 2.

மலிங்கா ஸ்லோ ஆப் கட்டர் வீச, ஷர்துள் தாகுர் எல்பிடபிள்யூ ஆக, ஏற்கனவே ரிவியூ எடுத்த ரெய்னா வீணடிக்க, அந்த வாய்ப்பும் இல்லாமல் தோற்றுப் போனது சென்னை சூப்பர் கிங்ஸ்!.

கடைசி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் போராடி தோற்றது என்று சொன்னாலும், எப்போதோ முடிந்திருக்க வேண்டிய ஆட்டம் இது. தொடக்கத்திலேயே வாட்சனுக்கு கேட்சுகள் விடப்பட, மிடில் ஓவர் மற்றும் இறுதிக் கட்டம் என மீண்டும் மீண்டும் அவருக்கு தொடர்ந்து கேட்சுகளை விட்டு தவறிழைத்தது மும்பை.

ஆனால், அவையனைத்தும் மலிங்கா எனும் அனுபவத்தில் அடிப்பட்டு போக, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!.

இந்த ஐபிஎல் தொடரில், அணிகள் நன்றாக விளையாடியதோ என்னவோ, அம்பயர்கள் மிக அற்புதமாக விளையாடினார்கள். இறுதிப் போட்டியிலும் அந்த அவலம் தொடர்ந்தது. களத்தில் அவர்கள் முழித்து இருக்கிறார்களா, அல்லது அசதியில் தூங்குகிறார்களா என்பதை பார்க்க வேண்டியது அவசியம். இது ரன் அவுட்டே கிடையாது என்று டிவியில் பார்க்கும் ரசிகர்களே சொல்லிக் கொண்டிருக்க, அவர்களோ மொக்கை ரன் அவுட் அப்பீல்களுக்கு எல்லாம் தேர்ட் அம்பயருக்கு கைக் காட்டுகிறார்கள்.

மலிங்கா வீசிய கடைசி பந்து நோ-பாலா என்பதை கள நடுவர் சோதிக்காதது ஏன்? அப்படி சோதித்து இருந்தாலும், அதை பார்வையாளர்களுக்கு காட்டாதது ஏன்?

என்னமோ போடா மாதவா!!

ஒட்டுமொத்தமாக, சிஎஸ்கே ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம்.....

யெஸ்.. தோனி அடுத்த சீசனிலும் ஆடப் போகிறார்!!

Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment