Shubman Gill vs CSK Qualifier-1 IPL 2023 Tamil News: நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் 2023 குவாலிஃபையர்-1ல் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. குஜராத் அணியின் அதிரடி வீரரும், இந்திய கிரிக்கெட்டின் பட்டத்து இளவரசருமான ஷுப்மான் கில்லை எதிர்கொள்ள சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பாணியில் தயாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பிளேஆஃப் கனவை தகர்த்த கில், விராட் கோலி விளாசிய சதத்தின் சத்தத்தையும் மறைத்துவிட்டார். பெங்களுரு அணி 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்து இருந்தாலும், அதை எளிதில் எட்டிப்பிடித்து விட முடியும் என்பது போல் அவரது பேட்டிங் இருந்தது. பெங்களூரு அணி வீரர்கள் மொத்தமாகவே 3 சிக்ஸர்கள் விளாசி இருக்க, கில் மட்டும் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்து மிரட்டி இருந்தார்.

இதற்கு முந்தைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை அகமதாபாத்தில் வைத்து வெளுத்து வாங்கிய கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் விளாசி 101 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே நொறுக்கி அள்ளினார். ஒருபுறம் இந்திய கிரிக்கெட்டின் அரசனாக வலம் வரும் முன்னாள் கேப்டன் கோலி (கிங் கோலி) அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்ட, பட்டத்து இளவரசர் கில்-வும் அடுத்தடுத்து சதம் அடித்து ஆச்சரியப்படுத்தி விட்டார். கோலி அணி வீடு திரும்பிய நிலையில், கில் அணி சென்னையில் குவாலிஃபையர்-1ல் களமிறங்குகிறது.
சி.எஸ்.கே-வின் திட்டம்

சென்னை அணியின் கேப்டன் தோனி எப்போதும் திட்டங்களுடன் களமாடுபவர். அவரது திட்டம் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப மாறக்கூடியது. இதுபற்றி அவரே போட்டிக்கு பிந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார். சென்னையில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலிரண்டு ஓவர்களிலே அவர் 160 முதல் 170 ரன்கள் அணிக்கு தேவை என்பதையும், டாஸ் வெல்லும் போது மைதானத்தின் தன்மை அறிந்து தான் பேட்டிங் அல்லது பவுலிங் தேர்வு செய்வது குறித்தும் அவர் கூறியிருக்கிறார். எனவே, குஜராத் அணியுடன் அதன் தொடக்க வீரர் கில்-க்கும் கேப்டன் தோனி ஒரு ‘திட்டம்’ வைத்திருப்பார்.

சென்னை அணிக்கு கூடுதல் பலமாக அமைந்திருப்பது அதன் சொந்த மைதானம் தான். இங்கு இதுவரை சென்னை 7 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே தோல்வி பெற்றுள்ளது. அதில் 2 போட்டிகளில் மிகவும் நெருக்கமான தோல்வியாக இருந்தது. மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட சேப்பாக்கத்தில் விளையாடவில்லை. எனவே, ஆடுகளத்தின் தன்மையை கணிக்க அந்த அணியின் வீரர்களுக்கு சிரமம் ஏற்படலாம். குறிப்பாக, தொடக்க வீரரான கில்லுக்கு கூடுதல் நேரம் எடுக்கலாம். அந்த இடைவெளியை பயன்படுத்தி அவரது விக்கெட்டை சென்னை கைப்பற்ற நினைக்கலாம். அவர் தப்பும் பட்சத்தில் அடுத்தடுத்த முட்டுக் கட்டைகளை தோனி போடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
எவ்வாறாயினும், ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே… தலைவன் இருக்கிறான் மயங்காதே… ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்ற கவியரசரின் (கண்ணதாசன்) பாடல் வரிகளுக்குக் கேற்ப, ‘தல’ தோனியின் திட்டம் இந்தப் போட்டியில் வெளிப்படும். அதைக் கண்டு களிக்க காத்திருப்போம்…!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil