IPL 2023 Playoff Qualification Scenarios Explained Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், அகமதாபாத்தில் நேற்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு தொடங்கிய 62வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறி இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய தொடக்க வீரர் சுப்மன் கில் 101 ரன்களும், சாய் சுதர்சன் 47 ரன்களும் எடுத்தனர்.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 189 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஐதராபாத் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 34 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை குஜராத் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியில், முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா தலா 4 விக்கெட்டுகளையும், யாஷ் தயாள் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பிளேஆஃப்-க்கு முன்னேறிய குஜராத்
இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றியை ருசித்த குஜராத் அணி நடப்பு சீசனில் முதல் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. மேலும் அந்த அணி லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறுவதையும் உறுதி செய்துள்ளது.
தற்போது குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில் 9 வெற்றிகள் மூலம் 18 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. மீதமுள்ள ஒரு போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிறது ஞாயிற்றுகிழமை (மே.21) இரவு 7:30 மணிக்கு பெங்களுருவில் நடக்கிறது. இப்போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து முதலிடத்திலே நீடிக்கும். தோல்வி பெற்றால் கூட அந்த அணி குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை பெறும்.
மற்ற அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி? எத்தனை புள்ளிகள் தேவை?
ஐ.பி.எல் 2023 பிளேஆஃப் சுற்றில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும். பிளேஆஃப்களில் குவாலிஃபையர் 1, எலிமினேட்டர், குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் நடக்கும். இந்த பிளேஆஃப்-க்கு தகுதி பெற, ஒரு அணி புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வர வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற்றிருந்தால், நெட் ரன் ரேட் (NRR) முக்கிய பங்கு வகிக்கும்.
புள்ளிகள் பட்டியலில் தற்போது குஜராத் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்கு முன்னேற மற்ற அணிகளுக்கு பொதுவாக 16 முதல் 18 புள்ளிகள் வரை தேவைப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற சனிக்கிழமை (மே.20) மாலை 3:30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றியைப் பதிவு செய்தால் 17 புள்ளிகளைப் பெறும். அதன் மூலம் சென்னை அணி லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களுக்குள் நீடிக்கும்.
இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதுகின்றன. அதாவது, சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், லக்னோ மற்றும் மும்பை அணிகளில் ஒரு அணி மட்டுமே சென்னையை முந்தும். ஆனால், சென்னை டெல்லியிடம் தோல்வி கண்டால், அந்த அணி 15 புள்ளிகளுடன் முடிக்கும். அதனால், பெரும் பின்னடைவை சென்னை சந்திக்கும்.
சென்னை அணி டெல்லியிடம் தோற்கும் பட்சத்தில், சென்னையை மும்பை முந்திச் செல்ல, அவர்களின் கடைசி இரண்டு ஆட்டங்களில் (லக்னோ, ஐதராபாத்) ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். லக்னோ அணி அவர்களின் மீதமுள்ள 2 போட்டிகளில் (மும்பை, கொல்கத்தா) ஒன்றில் வென்றால், சென்னையுடன் சமமான புள்ளிகளை பெறுவார்கள். அப்போது நெட் ரன் ரேட் (NRR) முக்கிய பங்கு வகிக்கும்.
இதேபோல், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் அவர்களின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற முடிந்தால், அந்த அணிகளும் சென்னையை முந்த முடியும். 2 போட்டிகளில் ஒன்றில் மட்டும் இரு அணிகளும் வெற்றி பெற்றால், சென்னையை நெருக்கும் வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை.
மும்பை இந்தியன்ஸ் (12 போட்டிகள், 14 புள்ளிகள்)
நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை குஜராத் வீழ்த்தியதன் மூலம் மும்பை அணியின் பிளேஆஃப்-க்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனாலும், இந்த வாய்ப்பில் மும்பை தொடர மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
மும்பை அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை லக்னோவிலும், வருகிற ஞாயிற்றுகிழமை (மே.21) நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி அதன் சொந்த மைதானத்திலும் (மும்பையில்) எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை வெற்றி பெற்றால், அந்த அணி 18 புள்ளிகளுக்கு முடிக்கும். அதன் மூலம் முதல்-இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்பை பெறும்.
இதில் ஒரு போட்டியில் மும்பை தோல்வி பெற்று, சென்னை அவர்களின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், 16 புள்ளிகளுடன் மும்பை அணி முடிக்கும். அதாவது, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுடன் மும்பை சம புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் (NRR) முக்கிய பங்கு வகிக்கும்.
இதேபோல், சென்னை அணி டெல்லியை வென்று, லக்னோ அணி அவர்களின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் (மும்பை, கொல்கத்தாவுக்கு எதிராக), அவர்கள் மும்பை அணியை முந்தி விடுவார்கள். மேலும், சென்னையுடன் சமமான புள்ளிகளை பெறுவார்கள். அதனால், மும்பை அணி 4வது இடத்தில் இருக்க பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளின் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும்.
பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் அவர்களின் 2 போட்டியில் ஒன்றில் தோல்வி பெற்றால், மும்பை அணி 2ல் ஒன்றில் தோல்வி பெற்றாலும் 4வது இடம் கிடைத்து விடும்.ஆனால், மும்பை தங்களின் 2 போட்டிகளிலும் தோல்வி பெற்றால், லக்னோ அணி மும்பையை முந்திவிடும். மேலும், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் 2 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் அல்லது தலா ஒரு வெற்றி பெற்றால் கூட மும்பையை பின்னுக்கு தள்ளிவிடும்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீதமுள்ள போட்டிகள்
மே 16: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
மே 21: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (12 போட்டிகள், 13 புள்ளிகள்)
லக்னோ அணி பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன்மூலம் அவர்கள் 17 புள்ளிகளை எட்ட முடியும். மேலும், சென்னை டெல்லியிடம் தோற்று, மும்பை மீதமுள்ள 2 போட்டியில் ஒன்றில் தோற்றால், லக்னோ அணியால் முதல் இரண்டு இடங்களுக்குள் வர முடியும்.
சென்னை அணி டெல்லியிடம் வெற்றி பெற்றால் கூட, லக்னோ அணியால் முதல் இரண்டு இடங்களுக்குள் வர முடியும். எனினும், அந்த ஆட்டங்களில் அவர்கள் நல்ல ரன்ரேட்டில் வெற்றியை ருசிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை லக்னோ மும்பையிடம் தோற்று, ஐதராபாத் அணியிடம் வெற்றி பெற்றால், அதன் பலன் சென்னை - மும்பை அணிகளுக்கு கிடைக்கும்.
லக்னோ அணி மீதமுள்ள ஒரு போட்டியில் தோல்வி பெற்றால் கூட, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு பிளேஆஃப் வாய்ப்பை அதிகரிக்க செய்யும். மேலும், அவர்களின் தங்களின் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கூடுதல் ஊக்கத்தை பெறுவார்கள்.
லக்னோ மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி கண்டால், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட 13 புள்ளிகளுடன் வீட்டிற்கு நடையை கட்ட வேண்டியதுதான்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிற்கான மீதமுள்ள போட்டிகள்:
மே 16 (இன்று) - மும்பை இந்தியன்ஸ்
மே 20 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (12 போட்டிகள், 12 புள்ளிகள்)
நடப்பு சீசனில் பிளேஆஃப்-க்கு முன்னேற பெங்களூரு அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். பெங்களூரு அணி மும்பை மற்றும் லக்னோ அணிகள் மீதமுள்ள 2 போட்டியிலும் தோற்க வேண்டும் எனவும், சென்னை அதன் கடைசி லீக் போட்டியில் தோற்க வேண்டும் எனவும் நம்பிக்கையில் இருக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் பெங்களூரு புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறும். சென்னை டெல்லியை வீழ்த்தினால், பெங்களூருவுக்கு டாப் 2 வாய்ப்பு இல்லை.
அவ்வாறான நிலையில், மும்பை மற்றும் லக்னோ அணிகள் மீதமுள்ள 2 போட்டியிலும் தோற்க வேண்டும் என பெங்களூரு நினைக்கும். அவர்கள் தங்களின் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று விட்டால், பெங்களுரு அணி 3வது இடத்திற்கு குறி வைக்கும். அதேவேளையில், பஞ்சாப் அணி மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்று, மும்பை மற்றும் லக்னோ அணிகள் மீதமுள்ள 2 போட்டியிலும் தோற்றால், பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவும். அப்போது நெட் ரன் ரேட் (NRR) முக்கிய பங்கு வகிக்கும்.
மும்பை குறைந்தது ஒரு ஆட்டத்திலாவது வென்றால், பெங்களூரு அணி 2 வெற்றிகளுடன், நெட் ரன்ரேட் அடிப்படையில் அந்த இடத்தைப் பிடிக்கும். இதேபோல், லக்னோ அவர்களின் ஆட்டங்களில் ஒன்றை இழந்து, பெங்களூரு அணி இரண்டையும் வென்றால், அவர்கள் புள்ளிகள் அடைப்படையில் லக்னோவை முந்தலாம்.
பெங்களுரு அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும், லக்னோ 2 போட்டிகளிலும் தோல்வியடையும் என்றும், பஞ்சாப் குறைந்தது ஒரு ஆட்டத்திலாவது தோல்வியடையும் என்றும், சென்னை கடைசி ஆட்டத்தில் தோல்வியடையும் என்றும் அவர்கள் நம்புவார்கள்.
பெங்களுரு அணி மீதமுள்ள 2 போட்டியிலும் தோல்வி கண்டால், எந்த அணியையும் எதிர்பார்க்காமல் வீட்டிற்கு உடனடியாக கிளம்பலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு மீதமுள்ள போட்டிகள்
மே 18: சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மே 21: குஜராத் டைட்டன்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
பெங்களூரு அணியைப் போல பஞ்சாப் அணியும் 2 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அந்த அணி பெங்களூரு, மும்பை மற்றும் லக்னோ அணிகள் மீதமுள்ள 2 போட்டியில் குறைந்ததது ஒன்றில் தோற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதேவேளையில், சென்னையின் தோல்வி பஞ்சாப் அணிக்கு கூடுதல் நன்மை பயக்கும்.
சென்னை தனது கடைசி ஆட்டத்தில் தோற்றால், பஞ்சாப் அணி முதல் இரண்டு இடங்களைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. சென்னை அணி வெற்றி பெற்றால், பஞ்சாப் அணி முதல் இரண்டு இடங்களைப் பெறுவது கேள்விக்குறியாகி விடும். பின்னர் 3வது மற்றும் 4வது இடத்தை குறிக்க வைக்கும்.
அதற்காக, இன்று மும்பை அணியிடம் லக்னோ லக்னோ தோற்க வேண்டும் என்றும், மும்பை தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்க வேண்டும் என்றும் பஞ்சாப் அணியினர் எதிர்பார்ப்பார்கள். இதேபோல், தங்களது போட்டியாளரான பெங்களூரு குறைந்தது ஒரு போட்டியில் தோற்க வேண்டும். அப்படி நடந்த பஞ்சாப் அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு கிடைத்து விடும்.
ஆனால், பஞ்சாப் அணி அவர்களின் 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்து, பெங்களூரு இரண்டில் வெற்றி பெற்றால், பஞ்சாப் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு கடினமாக இருக்கும். அப்படி நடந்தால், லக்னோ மற்றும் பெங்களுரு அணிகள் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடை வேண்டும்.
பஞ்சாப் கிங்ஸிற்கான மீதமுள்ள போட்டிகள்:
மே 17: டெல்லி கேபிடல்ஸ்
மே 19: ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?
நடப்பு சீசனில் 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப்-க்கு நுழைய 8 சதவீத வாய்ப்பு உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் (மே 19) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகள் அளவில் தோல்வி பெற வேண்டும். அப்படி நிகழும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீதமுள்ள போட்டி:
மே 19: பஞ்சாப் கிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (13 போட்டிகள், 12 புள்ளிகள்) பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 4 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான் அணியைப் போல கொல்கத்தாவுக்கு முன்னணி அணிகளின் படுதோல்வியை எதிர்பார்க்கும். லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் அப்படியான சம்பவங்கள் நிகழும் வாய்ப்புகள் மிக மிக குறைவு.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கான மீதமுள்ள போட்டி:
மே 20: vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
டெல்லி மற்றும் ஐதராபாத் (12 போட்டிகள், 8 புள்ளிகள்) அணிகள் பிளேஆஃப் போட்டிக்கு வெளியே உள்ளன. ஆனால் அவர்களின் கடைசி இரண்டு ஆட்டங்களில் வெற்றிகள் எதிரணிகள் பிளேஆஃப்-க்கு தகுதி பெறும் வாய்ப்புகளை குறைக்கும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மீதமுள்ள போட்டிகள்
மே 18: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மே 21: மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு மீதமுள்ள போட்டிகள்
மே 17: பஞ்சாப் கிங்ஸ்
மே 20: சென்னை சூப்பர் கிங்ஸ்
பிளேஆஃப் நடக்கும் இடங்கள்
ஐபிஎல் 2023 தொடரின் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிகள் மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. தகுதிச் சுற்று 1 மே 23-ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மே 24-ஆம் தேதி எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறும்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.