இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சென்னை மும்பை மற்றும் பஞ்சாப் அணியில் கேப்டன்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் ஐ.பி.எல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கிய ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய இந்த போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தோல்வியுடன் சீசனை தொடங்கினாலும், அடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக மார்ச் 25-ந் தேதி நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதன் பிறகு கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட 5 அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்துள்ள பெங்களூர் அணி தற்போது 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த அனைத்து போட்டிகளிலுமே பெங்களூரு அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லலாம். லக்னோ அணிக்கு எதிராக மட்டும் 158 ரன்கள் எடுத்தது.
அதனை தவிர்த்து தோல்வியடைந்த அனைத்து போட்டிகளிலுமே 170 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ஆனால் பந்துவீச்சில் பெங்களூர் அணி இதுவரை எதிரணியின் 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்ததே இல்லை. அதிலும் குறிப்பாக, கடைசியாக நடந்த மும்பை மற்றும் ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய நிலையில், ரன்களை வாரி வழங்கினர். மும்பை அணிக்கு எதிரான பேட்டிங்கில் 196 ரன்கள் குவித்த பெங்களூரு அணி பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியது.
பெங்களூரு அணியின் சார்பாக பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களுமே ஒரு ஓவருக்கு 11 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்தனர். இதனால் மும்பை அணி 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அப்போது பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூபிளசிஸ் பந்துவீச்சாளர்கள் குறித்து கடுமையாக சாடியிருந்தார்.
சன் ரைசஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தொடர்ந்து நேற்று சன் ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான தங்களது சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்து மிளர வைத்தது. டிராவிஸ் ஹெட் (102(41)), க்ளாசன் (67(31)) மார்க்ரம் (32 (17)) அப்துல் சமத் (37(10)) விளாசினர்.
சொந்த மண்ணில் விளையாடிய பெங்களூரு அணியின் மோசனமான பந்துவீச்சாக இந்த போட்டி அமைந்தது. பெங்களூரு அணியில் வில் ஜாக்ஸ் 3 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்திருந்தார். மற்ற அனைவருமே 4 ஓவர்களுக்கு 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். 2 விக்கெட்டுகள் வீழ்த்திய லூக்கி பெர்கூசன் 4 ஓவர்களில் 52 ரன்கள் வாரி வழங்கியிருந்தார். இந்த போட்டி டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த போட்டி, அதிக சிக்சர்கள், இரு அணிகளும் சேர்ந்து அதிக ரன்கள் என பல சாதனைகளை படைத்தது.
பெங்களூரு அணியின் சரிவுக்கு காரணம் என்ன?
பெங்களூரு அணியின் இந்த தொடர் தோல்விக்கு பந்துவீச்சு தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், லூக்கி பெர்கூசன் தவிர மற்ற அனைவருமே சரியான அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்கள். லூக்கி பெர்கூசன் கூட 38 சர்வதேச டி20 மற்றும் 39 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மற்ற அனைவருமே 10 முதல் 20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் உடையவர்கள். இந்த அனுபவம் இல்லாத பந்துவீச்சை ஐதராபாத் அணியின் அனுபவம் மிக்க பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
அதேபோல் பெங்களூரு அணியின் பந்துவீச்சில், ஏர்க்கர் பந்து வீசும் அளவுக்கு எந்த பந்துவீச்சாளரும் செயல்படவில்லை. குறிப்பாக வைசாக் விஜயகுமார் 4 ஓவர்களில் 64, டாப்லி 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு வர காரணமாக இருந்துள்ளனர். இந்த நேரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பெங்களூர் அணியில் விளையாடிய யுஸ்வேந்திர சாஹலை பெங்களூரு அணி கைவிட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
உலக தரவரிசையில், டாப் 5 டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஒருவராக இருக்கும் யுஸ்வேந்திர சாஹல் தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 12 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை கைவிட்ட பலனைத்தான் பெங்களூர் அணி இப்போது அனுபவிதக்கிறது. அதேபோல் கடந்த ஆண்டு பெங்களூர் அணியில் விளையாடிய ஹசரங்காவையும் கைவிட்டுள்ளது.
டி20 ஸ்பின்னர்ஸ் வரிசையில் முக்கிய இடத்தில் உள்ள ஹாசரங்கா தற்போது சன் ரைசஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார். முக்கிய பந்துவீச்சாளர்களை கைவிட்டு, அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியதால் பெங்களூர் அணி சறுக்கலை சந்தித்துள்ளது.
பலம் வாய்ந்த பேட்டிங்
நேற்றைய போட்டியில் 288 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணி வெற்றியை நெருங்கி வந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்களும், டூபிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்களும், கோலி 20 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியை போல் ஐதராபாத் அணியும் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் தனது அனுபவத்தை பயன்படுத்தி சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிடில் ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தினார். இந்த போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஏர்க்கர் மன்னன் நடராஜ், உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சளர் கம்மின்ஸ் ஆகியோரின் கூட்டணி ஐதராபாத் அணிக்கு வெற்றியை கொடுத்துள்ளது. தொடக்கத்தில் பெங்களூரு அணி வெற்றியை நோக்கி முன்னேறினாலும், கேப்டன் கம்மின்ஸ் தனது அனுபவத்தை பயன்படுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்திபோது பெங்களூரு அணியின் ரன் விகிதம் சரிவை சந்தித்தது. அதன்பிறகு கார்த்திக் வந்து அதிரடியாக ஆடி வெற்றியை நெருங்கினாலும். அவர் ஆட்டமிழந்தவுடன் பெங்களுரு அணியின் தோல்வி உறுதியானது.
பெங்களூரு அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு எப்படி?
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 1 வெற்றி 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. பொதுவாக அடுத்த சுற்ற வாய்ப்பை உறுதி செய்ய குறைந்தது 7 வெற்றிகள் தேவை என்பதால், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் பெங்களூரு அணி கட்டாயம் வெற்றியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து ஏப்ரல் 21-ந் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோத உள்ளது. இந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.