ஐபிஎல் ஏலம் 2018: இது சென்னை அணியா..? வயதானவர்களின் கூடமா?

இந்தாண்டு நடைபெறவுள்ள 11 வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடந்து முடிந்துள்ளது

இந்தாண்டு நடைபெறவுள்ள 11 வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடந்து முடிந்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறன் மாறியுள்ளதோ இல்லையோ, ஐபிஎல் அணி உரிமையாளர்களின் எண்ணங்கள் மாறியிருப்பது இன்று நடந்த ஏலத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. இளம் வீரர்கள் பலரையும், நம்பவே முடியாத அளவிற்கான தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளன ஐபிஎல் அணிகள். சென்னை சூப்பர் கிங்சை தவிர.

சென்னை அணியைப் பொறுத்தவரை தோனி, ரெய்னா, ஜடேஜா ஏற்கனவே தக்க வைக்கப்பட்டுள்ளது நமது தெரிந்ததே. இன்று ஏலத்தில், ஆறு வீரர்களை சென்னை வாங்கியுள்ளது. டு பிளசிஸ், பிராவோ ஆகியோரை RTM பயன்படுத்தி மீண்டும் தக்க வைத்த சென்னை அணி, ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், கர்ண் ஷர்மா ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் பிரபலங்களே.

ஆனால், சென்னையைத் தவிர மற்ற அணிகள் இளம் வீரர்களை குறிவைத்து வாங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக் கோப்பையில் ஆடி வரும் ஷுப்மன் கில் எனும் இளம் வீரரை, 1 கோடியே 80 லட்சத்துக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 20 லட்சமாகும். அதேபோல் ராகுல் திரிபாதி எனும் வீரரை 3 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. ராகுல் டெவேட்டியா எனும் வீரரை 3 கோடிக்கும், தீபக் ஹூடா எனும் வீரரை 3 கோடியே 60 லட்சத்துக்கும் டெல்லி அணி வாங்கியுள்ளது.

டேர்சி ஷார்ட் எனும் புதுமுக வீரரை 4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 20 லட்சமாகும். அதேபோல், ஜோஃப்ரா ஆர்ச்சர் என்பவரை 7.20 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. இவரது அடிப்படை விலை 40 லட்சமே!.

இதுபோன்று பல புதிய வீரர்களை பல கோடிகள் செலவு செய்து அணிகள் வாங்கியுள்ளன. ஆனால், சென்னை புதுமுக வீரர் ஒருவரை கூட வாங்கவில்லை. சில வீரர்களை வாங்க மோதியது. ஆனால், ஒருகட்டத்தில் தொகை பெரிதாகவே பின்வாங்கிவிட்டது. சமூக தளங்களில் ரசிகர்கள், சென்னை அணி வயதான வீரர்களையே வாங்குகிறது என விமர்சித்து வருகின்றனர். பலரும் சென்னை அணி வீரர்களின் வயதை குறிப்பிட்டு ட்ரால் செய்கின்றனர்.

இருப்பினும், நாளை ஒரு நாள் ஏலம் மீதம் உள்ளதால்,  சில இளம் வீரர்களை சென்னை களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.

×Close
×Close