இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் 20 ஓவர் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் 10-வது சீசனின் பிராண்ட் மதிப்பு ரூ.34,000 கோடியை தொட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், சியர் கேர்ள்ஸ், ஆட்டம், பாட்டம், மக்கள் கூட்டம் என கொண்டாட்டமாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், 10-வது சீசனை கடந்து இன்னும் பிரமாண்டமாய் வளர்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் சில மணிநேரங்களே நடக்கும் இந்த திரில்லர் விளையாட்டுக்குள் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. இந்தியாவிலேயே அதிக பணம் விளையாட்டில் முதலீடு செய்யப்படுவது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் தான் என்று சொல்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த விளையாட்டில் தொழிலதிபர்கள் ஆர்வமும், ஆதிக்கமும் செலுத்துகிறார்கள்.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 10-வது சீசனின் பிராண்ட் மதிப்பு தற்போது கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் 10-வது சீசனின் ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பு ரூ.34,000 கோடியை தொட்டுள்ளது.
ஒட்டுமொத்த வியாபாரத்தின் மூலம், கடந்த ஆண்டு ரூ.27,000 கோடியாக இருந்த ஐபில் நிறுவன பிராண்ட் மதிப்பு, 10-வது சீசனில் 26 சதவீதம் உயர்ந்து ரூ.34,000 கோடியை எட்டியுள்ளது.
உலகளாவிய மதிப்பீடு மற்றும் பெருநிறுவன நிதி ஆலோசனை நிறுவனமான டஃப் அண்ட் பெல்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மேற்கூறிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்நிறுவனத்தின் சிஏஜிஆர் எனப்படும் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (compound annual growth rate) மூன்று ஆண்டுகளில் 13.9 சதவீதத்தை கண்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, ஐபிஎல்-ன் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் அனைத்து உரிமையாளர்களின் (franchises) பிராண்ட் மதிப்பு அளப்பரிய வளர்ச்சியை கண்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் உள்ள தனிப்பட்ட விஷயங்கள் குறித்து குறிப்பிட்ட டஃப் அண்ட் பெல்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் குப்தா, "ஐபிஎல் உரிமையாளர்களின் பிராண்ட் மதிப்பை விட ஐபிஎல்-ன் பிராண்ட் மதிப்பு பெரியது. ஆனால், உலகளாவிய சூழல் வேறு மாதிரியாக உள்ளது. இங்க்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் போட்டிகளில் விளையாடும் மான்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பிராண்ட் மதிப்பு, இங்க்லீஷ் பிரீமியர் லீக்-ன் பிராண்ட் மதிப்பை விட அதிகம். அதனை பார்க்கும் போது, இங்கு வேறு மாதிரியான சூழல் உள்ளது" என சுட்டிக் காட்டியுள்ளார்.
ஐபிஎல் உரிமையாளர்களின் பிராண்ட் மதிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. பட்டியலில், 106 மில்லியன் டாலர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்திலும், 99 மில்லியன் டாலர்களுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாமிடத்திலும், 88 மில்லியன் டாலர்களுடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்றாமிடத்திலும் உள்ளது.
ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விற்பனை, பிரான்சைசிஸ் உரிமைக்கான ஏலம், ஸ்பான்ஸர்ஷிப் ஆகியவை மூலம் ஐபிஎல் நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கிறது. அதில், வருமானம் ஒளிப்பரப்பு உரிமை மற்றும் ஸ்பான்ஸர்ஷிப் உரிமை மூலமாக 70 சதவீதம் வருவதாக கூறப்படுகிறது.
2016-17-ஆம் ஆண்டுகளுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமையை விவோ செல்போன் நிறுவனம் பெற்றுள்ளது. டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமையை ரூ.2,200 கோடிக்கு அந்நிறுவனம் பெற்றுள்ளதால் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான உயர்வு காணப்படுவதால், விளம்பரதாரர்களும் இதில் அதிகளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஐபிஎல் 10-வது சீசன் நிறைவடைந்ததையடுத்து, ஒட்டுமொத்தமாக 400 மில்லியன் நிலையான பார்வையாளர்களை அப்போட்டி கொண்டுள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள், கிராமப்புறங்களில் இருந்து சுமார் 45 சதவீத பார்வையாளர்களை கொண்டுள்ளது. இது ஒரு லாபகரமான தளத்தை விளம்பரதாரர்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது.
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு, சமூக வலைத்தளம், பிரபலங்கள், விளையாட்டில் காட்டப்படும் செயல்திறன், சந்தைப்படுத்துதல், முன்னணி வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளிடம் இருந்து பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.