சென்னை சூப்பர் கிங் அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ‘யெல்லோ ஆர்மி’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டுவரும் சிஎஸ்கே அணியை இந்த முறையும் கேப்டன் தோனியே வழிநடத்தவுள்ளார். ஐபிஎல் காய்ச்சல் ரசிகர்களுக்கு இப்போதே வந்துவிட்டது.
கடந்த முறை அணியில் சீனியர் வீரர்களே இருந்ததால் சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கப்பட்ட சிஎஸ்கே, அனுபவமே சிறந்தது என்பதையும் இறுதி ஆட்டத்தின் வெற்றி மூலம் உறுதிப்படுத்தியது.
இந்த முறை அனுபவம் வாய்ந்த வீரர்களும், இளைஞர்களும் ஒன்றே கலந்த அணியாக முன்பை விட இன்னும் வலிமையான அணியாக சிஎஸ்கே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
பிசிசிஐ விதிகளின் படி 4 வீரர்களை சிஎஸ்கே தக்க வைத்துக் கொண்டது.
அதன்படி தோனி (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6 கோடி), இங்கிலாந்தைச் சேர்ந்த மொயீன் அலி (ரூ.8 கோடி)
தக்கவைக்கப்பட்டனர்.
விக்கெட் கீப்பிங்: விக்கெட் கீப்பிங்கை வழக்கம்போல் தோனி கவனிப்பார். அம்பதி ராயுடு, என்.ஜகதீசன் ஆகியோரும் விக்கெட் கீப்பிங் செய்யும் திறன் படைத்தவர்கள்.
விக்கெட் கீப்பிங்கில் தோனி எப்போதும் சிங்கம் தான்.
பேட்டிங்: பேட்டிங்கை பொருத்தவரை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே (நியூசிலாந்து), ராபின் உத்தப்பா ஆகியோர் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, ஷிவம் துபே, கிறிஸ் ஜோர்டான் (இங்கிலாந்து), மிச்செல் சான்ட்னர் (நியூஸிலாந்து), டுவெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), டுவைன் பிரிடோரியஸ் (தென்னாப்பிரிக்கா)ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சு: பந்துவீச்சாளர்களில் மிக அதிக விலை கொடுத்து அதாவது ரூ.14 கோடிக்கு தீபக் சாஹரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அவரும் சிஎஸ்கே வருவதையே மிகவும் விரும்பினார். தனது இடத்தை உணர்ந்து அவர் சிறப்பாக விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.
யு-19 இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்கு பங்காற்றிய ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆடம் மில்னே (நியூசிலாந்து) உள்ளிட்டோர் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
பவர் பிளே ஓவரில் சிறப்பாக பந்துவீசும் திறன் படைத்தவர் தீபக் சாஹர் என்பதால் எதிரணியினருக்கும் கடும் சவாலாக இருப்பார்.

ஆல்-ரவுண்டராக பிராவோ, ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்வர். பேட்டிங்கில் ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அதிரடியாக ஆடக் கூடியவர்கள்.
பிளேயிங் லெவன் உத்தேச வீரர்கள் பட்டியல்: தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஜடேஜா, பிராவோ, மொயீன் அலி, தீபக் சாஹர், தெவோன் கான்வே, மிச்செல் சான்ட்னர், ஆடம் மில்னே.
சுரேஷ் ரெய்னா அணியில் இல்லமால் போனது தான் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
மொத்தத்தில் சிஎஸ்கே அணி 15-ஆவது ஐபிஎல் சீசனில் ஐபிஎல் பட்டத்தை வெல்வதற்காக களத்தில் சீறிப் பாயத் காத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “