நேற்று “மும்பையில் காத்திருக்கும் மிகப்பெரிய சோதனை…!” என்ற தலைப்பில் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருந்த மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். தலைப்பிற்கான அர்த்தத்திற்கு ஏற்ப துளிகூட மாற்றமின்றி போட்டி மிக பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.
பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க, பஞ்சாப் இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டுமென்ற சூழல். ஆனால், மும்பையை எதிர்ப்பதோ அவர்கள் மண்ணில்… இப்படிப்பட்ட கடுமையான நெருக்கடிக்கும் மத்தியில், மும்பை டாஸ் வென்று பஞ்சாபிடம் பேட்டிங்கை கொடுத்தது. ‘அடித்து ஆட வேண்டும்… ரன்களைக் குவிக்க வேண்டும்’ எனும் மந்திரத்தை ஓதி மேக்ஸ்வெல் அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல், ஆரம்பம் முதலே வெளுத்துக் கட்ட ஆரம்பித்தது கப்தில், சஹா இணை.
பாரபட்சம் காட்டாமல் அனைத்து பவுலர்களின் ஓவர்களையும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஹா 55 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 47 ரன்களும், கப்தில் 18 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்.
இப்படியொரு மெகா இலக்கை, ஐபிஎல்-ல் இதுவரை எந்தவொரு அணியும் சேஸிங் செய்திராத நிலையில், மும்பை மற்றொரு அதிரடி இன்னிங்சை ஸ்டார்ட் செய்தது. ஏற்கனவே, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், எந்தவித நெருக்கடியும் இன்றி, ஆரம்பம் முதலே சீராக அடித்து ஆடி விளையாடியது. தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் 59 ரன்களும், பார்திவ் படேல் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ராணா 12 ரன்னிலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா 5 ரன்னிலும் நடையைக் கட்டினர். இதற்கடுத்து களமிறங்கிய பொல்லார்ட் ஒருபக்கம் அதிரடி காட்ட, மற்றொரு பக்கம் ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 30 ரன்களை விளாசினார். (இந்தியாவுக்கு ஒரு மேட்ச் கூட இப்படி ஆடலையேப்பா!!) அவர் இருந்திருந்தால், நிச்சயம் மும்பை வென்றிருக்கும்.
ஆனால், சந்தீப் ஓவரில் பாண்ட்யா அவுட்டாக, இறுதி ஓவரில், வெற்றிப் பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய மொஹித் ஷர்மா வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இத்தனைக்கும் பொல்லார்ட் கடைசி வரை களத்தில் நின்றும் பலனில்லை. முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மேக்ஸ்வெல்லுக்கு அப்போது தான் விண்ணுலகம் சென்ற மூச்சு திரும்ப வந்தது.
பொல்லார்ட் 50 ரன்களுடனும், ஹர்பஜன் 2 ரன்களுடனும் நாட் அவுட்டாக இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் தனது பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.