ஒரே இரவில் ஹீரோவான தினேஷ் கார்த்திக்! ஐபிஎல்-ல் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் என்ன?

இந்தியா முழுவதும் அவர் ஹீரோவானதன் வெளிப்பாடாகத் தான் சஹாவின் இன்றைய மெகா அதிரடியையும், பேட்டியையும் பார்க்க முடிகிறது

By: Updated: March 26, 2018, 11:35:57 AM

ANBARASAN GNANAMANI

‘நான் திரும்பி வருவேன்னு எதிர்பார்க்கல-ல…. அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கல-ல…’ எனும் டயலாக் கிரிக்கெட்டை பொறுத்தவரை, தற்போது தினேஷ் கார்த்திக்கிற்கு மட்டுமே மிகச் சரியாக பொருந்தும். நடந்து முடிந்த முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில், இவர் ஆற்றிய வினை அப்படி.

இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராகவே, கடந்த 10 – 13 ஆண்டுகளாக அணியில் கோலோச்சி வருபவர் மகேந்திர சிங் தோனி. 36 வயதான தோனிக்கு கிரிக்கெட்டில் ஆயுட்காலம் 2019 உலகக் கோப்பை வரை என்பதே பெரும்பாலான எக்ஸ்பெர்ட்களின் கருத்து. பிசிசிஐ-ன் விருப்பமும் கூட. ஆக, கிட்டத்தட்ட இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தோனி தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஆனால், அதற்கு பின்?

இந்திய அணியைப் பொறுத்தவரை, லெஜண்ட் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு சீசனில் எப்படியும் தோன்றி விடுவார்கள். தற்போது கோலி அதற்கு உதாரணம். ஆனால், தோனியை தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ எனும் ஏரியா இப்போது வரை காலியாகவே உள்ளது.

தோனிக்கு பிறகு இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? இதற்கு இன்று வரை பிசிசிஐ பதில் கண்டறியவில்லை. ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வி.கீ.பே நம்பிக்கை அளித்தாலும், அவர்கள் சர்வதேச அளவில் இன்னும் தங்களை பெரிதாக நிரூபிக்கவில்லை. அதிலும், சஞ்சு சாம்சனுக்கு ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு தந்தது பிசிசிஐ. ஆனால், இதுவரை 66 ஐபிஎல் போட்டிகளில் ஆடி, தன்னை சிறப்பாக நிரூபித்து இருக்கிறார் சஞ்சு.

டெஸ்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று 4 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் டெஸ்ட் தொடர்களின் போது தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது இந்திய அணி. சஹாவை வைத்து தான் இந்தியா, டெஸ்ட்டில் ஆடிவருகிறது. சமயத்தில் பார்த்திவ் படேலை பிசிசிஐ சேர்க்கும் போது, 90-ஸ் கிட்ஸுக்கு ‘ஒரு நிமிஷம் தலையே சுத்திடும்’. 2003 உலகக் கோப்பையில் இந்திய அணியில் (விளையாடிய?) பார்த்திவ் படேல், 2018ல் இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பரா? என்று தோன்றும்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி விளையாடாத போது, தினேஷ் கார்த்திக் கைகளில் கிளவுஸ் கொடுத்தது பிசிசிஐ. இரைக்கு காத்துக் கொண்டிருக்கும் கொக்கு போல் அதை கச்சிதமாக தினேஷ் பயன்படுத்திக் கொள்ள, அது இப்போது தோனியின் பின் சீட் ரேஸில் இருப்பவர்களுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில், பின் சீட் ரேஸ் மிகக் கடுமையாக இருக்கும் என்பது நமது கணிப்பு.

32 வயதான தினேஷ் கார்த்திக், 33 வயதான ரிதிமான் சஹா, 23 வயதான சஞ்சு சாம்சன்… இவ்வளவு ஏன், 20 வயதான ரிஷப் பண்ட் என இவர்கள் அனைவருக்கும் இடையே, வரும் ஐபிஎல் தொடரில் கடும் போட்டிகள் இருக்க வாய்ப்புள்ளது. அதற்கு மிகப்பெரிய சான்று தான், இன்று(மார்ச் 24) கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் 20 பந்தில் சஹா சதம் விளாசியிருக்கும் நிகழ்வு. இப்போட்டிக்குப் பிறகு, சஹா கூறியிருப்பது மேலும் ஹைலைட். ‘ஐபிஎல்-ல் பல விதமான ஷார்ட்களை முயற்சி செய்யப் போகிறேன். எனது புதிய அத்தியாத்தை அங்கு பார்ப்பீர்கள்’ என்று கூறியிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்கின் மேட்ச் வின்னிங் பெர்பாமன்ஸ் மற்றும், ஒரே நாள் இரவில் இந்தியா முழுவதும் அவர் ஹீரோவானதன் வெளிப்பாடாகத் தான் சஹாவின் இன்றைய மெகா அதிரடியையும், பேட்டியையும் பார்க்க முடிகிறது.

இந்திய அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என சில இந்திய முன்னாள் வீரர்கள் கூறிய போது, கேரி கிறிஸ்டன் சொன்ன வார்த்தைகள் இவை. ‘முதலில் நீங்கள் தோனிக்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை காட்டுங்கள். அதன்பிறகு, தோனியை நீக்குவது பற்றி பேசுங்கள்!’.

இது நிதர்சன உண்மை. இந்த நிமிடம் வரை, தோனிக்கு மாற்று இங்கு யாரும் இல்லை. அல்லது அடையாளம் காணப்படவில்லை. ஆனால், தினேஷ் கார்த்திக்கின் கடந்த வார ஆட்டம், அந்த நிலைமையை மாற்றுவதற்கு, பிசிசிஐ மனதில் விதையைத் தூவியதோ என்னவோ… தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக உள்ளவர்களை உசுப்பேத்தியுள்ளது. தோனியின் வயதும், விரைவில் அவர் ஓய்வு பெறலாம் என்ற கணிப்பும் அவர்களை மேலும் மெனக்கெட வைத்துள்ளது.

ஆகையால், ஐபிஎல் தொடரில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தில் வழக்கத்தைவிட அதிக ஆக்ரோஷம் வெளிப்படப் போகிறது என்பதே நமது உறுதியான கருத்து!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl special article

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X