Chennai super kings (CSK) Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை நடக்கவுள்ள முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றியை ருசிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற வெள்ளிக்கிழமை நடக்கும் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வி கண்ட அணியுடன் மோதுகிறது.
அடுத்த சீசன் ஆயத்தம்…
நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்குப் பிறகு கட்டமைத்துக்கொண்ட அணி தாங்கள் திட்டமிட்டபடி செயல்படவில்லை. அந்த அணியின் தொடர் தோல்விகள் கேப்டன் ஜடேஜாவின் கேப்டன்சியை அசைத்துப் பார்த்தது. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாக்குபிடிக்காத அவர் தனது பதவியை அணியை நீண்டகாலமாக வழிநடத்திய முன்னாள் கேப்டன் தோனியிடமே ஒப்படைத்தார். பின்னர் தோனி தலைமையேற்ற அணி கடந்த சீசன் போல் ஒரு 'கம் பேக்' கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க, வழக்கம் போல் வெற்றி தோல்வியுடன் தொடரின் லீக் ஆட்டங்களை முடித்து கொண்டது.
சென்னை அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய போது ரசிகர்களிடம் பல கேள்விகள் தொற்றிக்கொண்டிருந்தது. அதில் குறிப்பிடும் படியானதாக ஜடேஜா பற்றியும், தோனியின் கேப்டன்சி பற்றியும், அணியின் எதிர்கால திட்டங்களை பற்றியுமாகத் தான் இருக்கும். ஜடேஜா - சிஎஸ்கே இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்தனர். ஆனால், சென்னை அணி ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரரை அப்படியே கழற்றி விடாது என்பது தான் எதார்த்தம். மேலும், இந்த பிரச்னையை முன்னாள் சென்னை வீரர் ரெய்னாவுடன் சில ஒப்பிட்டு பேசுகிறார்கள். அப்படி ஊதி தள்ளும் அளவிற்கு இது பெரும் பிரச்சனையா? என்றால் அதில் கேள்விகள் தான் எழுகின்றன.
2018ம் ஆண்டில் நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு களமாடிய அல்லது கட்டமைக்கப்பட்ட சென்னை அணியை "டாடி'ஸ்" ஆர்மி (30 வயதை கடந்த வீரர்கள் உள்ள அணி) என்று கலாய்த்தனர். ஆனால், அந்த டாடி ஆர்மியில் இருந்த வாட்சன் (117) சன்ரைசர்ஸ் ஐதராபாத்க்கு எதிரான இறுதிப்போட்டியில் இடித்தஇடிக்கு வான்கடே ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல ஆட்டத்தை நேரலையில் ரசித்தவர்களுமே சாட்சி.
எனினும், இதுபோன்ற அணியை எதிர்வரும் தொடர்களில் கட்டமைத்து விடக்கூடாது என்றும் சுதாரித்துக்கொண்ட சென்னை அணி நிர்வாகம் இந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் மூத்த மற்றும் இளம் வீரர்களை கொண்ட ஒரு கலவையான அணியாக மறுகட்டமைத்தது. தொடரின் பெரும் பகுதியில் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் எதிர்பார்த்த வண்ணம் அந்த வீரர்களின் ஆட்டம் அமையவில்லை. ஒரு ஆட்டத்தில் பேட்டிங் சிறப்பாக அமைத்தால் பந்துவீச்சு எடுபடாமல் போய்விடுகிறது. ஒரு ஆட்டத்தில் பலமான பந்துவீச்சு அமைத்தால் நட்சத்திர வீரர்கள் ஜொலிக்கமால் படுமோசமாக ஆட்டமிழந்து வெளியேறி விடுவதாக இருந்தது.
இதனால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத சென்னை அணி தற்போது எங்கே கோட்டை விட்டோம் என்பதை கண்டறிய நடப்பு தொடரில் நடந்த ஆட்டங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. மேலும், அடுத்த சீசனில் அணிக்கு 'செட்' ஆகும் மூத்த மற்றும் இளம் வீரர்கள் யார்? என்பதை களை எடுக்கவும் தொடங்கியுள்ளது. அதோடு 'செட்' ஆக வீரர்களை கழற்றி விடவும் திட்டங்களை வகுத்து வருகிறது.
யார் யாரைக் கழற்றி விடும் சென்னை?
16வது ஐபிஎல் (2023) கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்திய மண்ணில் தான் நடைபெறும் என்று அடித்து கூறப்படுகிறது. அப்படி அமைந்ததால், சொந்த மைதானத்தில் 50% லீக் ஆட்டங்கள் நடந்தாக வேண்டும். வழக்கம் போல் சென்னை அணி சேப்பாக்கத்தில் மீண்டும் களமாடும். சேப்பாக்க மைதானம் என்றாலே சுழலுக்கு சிறப்பாக ஒத்துழைக்கும். இதனால் ஆடும் லெவனில் இரண்டு முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தோனி முன்னுரிமை கொடுப்பார். அவ்வகையில் சென்னை அணி மகேஷ் தீக்ஷனாவை கைவசம் வைத்துள்ளது. மற்றொரு வீரருக்கு ஜடேஜா அல்லது மொயீன் அலி இருப்பார்கள்.
வேகப்பந்துவீச்சிற்கு, காயம் காரணமாக ஓய்வில் உள்ள தீபக் சாஹர் மற்றும் ஆடம் மில்னே அடுத்தாண்டு அணியில் இணைவர். இவர்களுக்கு பேக்-அப் வீரர்களாக சிமர்ஜீத் சிங் மற்றும் முகேஷ் சவுத்ரி இருக்கிறார்கள். இந்த இரு வீரர்களின் பந்துவீச்சு தோனிக்கு மிகவும் பிடிப்போனதால் அவர்களுக்கு அணியில் இடம் கன்பாஃர்ம்.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் 3.60 கோடி ரூபாய்க்கு வாங்கிய கிறிஸ் ஜோர்டான் மற்றும் ரூபாய் 20 லட்சத்திற்கு வாங்கிய துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை கழற்றி விட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 33 வயதான கிறிஸ் ஜோர்டான் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரன்களை வரிகொடுத்து இருந்தார். சென்னை அணி வெற்றியை ருசிக்க வேண்டிய ஆட்டம் இவரின் மோசமான பந்துவீச்சால் பறிகொடுத்து தோல்வியுற்றது.
தற்போது ஒரு இங்கிலாந்து வீரரை கழற்றி விடும் திட்டத்தில் உள்ள சென்னை அணி மற்றொரு இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்க்கு குறித்து வைத்துள்ளது. அவர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஏலத்தில் களமிறங்க உள்ள நிலையில், அவரை வசப்படுத்த சென்னை அணி முரட்டுத்தனமான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிகிறது.
பிராவோவின் பேக்-அப் வீரராக இருந்த ஜோர்டானை சென்னை அணி கழற்றி விட பல காரணங்கள் இருந்தாலும் அவர் தோனியை ஈர்க்கமால் போனது முக்கிய காரணமாக இருக்கலாம். அவரது இடத்தை நிரப்பும் வகையிலான டுவைன் பிரிட்டோரியஸின் செயல்பாடு ஒருவேளை அவருக்கு பிடித்துப் போய் இருக்கலாம். எனினும், அடுத்த ஏலத்திற்கு முன்னதாக நடைபெறும் சர்வதேச ஆட்டங்களில் ஜோர்டான் ஜொலிக்கும் பட்சத்தில் அவர் பக்கம் அணியின் பார்வை மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது.
இதேபோல் 27வயதான துஷார் தேஷ்பாண்டேவின் இருப்பும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு ஓவரில் 10 ரன்களுக்கு மேல் அள்ளிக்கொடுக்கும் இந்த வள்ளலை சென்னை அணி ஏற்கனவே புள்ளி வைத்து விட்டது. ஆதாலால் அவரது இடத்தில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அணியின் அடுத்த சீசன் தொடக்க ஜோடி யார்?
ஐபிஎல் தொடர் வரலாற்றில் பலமான தொடக்க பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக வலம் வந்த சென்னை அணி நடப்பு சீசனில் பெரும் பின்னடைவை சந்தித்தது. மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேயை சென்னை அணி வசப்படுத்திய நிலையில், அவரை ஆஹா, ஓஹோ என்றெல்லாம் கூறி பலரும் கட்டுரை தீட்டினார்கள். ஆனால், அவரோ களமாடி முதல் ஆட்டத்தில் 3 ரன்னுடன் நடையைக் கட்டி ஏமாற்றி இருந்தார். ஆனால், பிராவோவுக்கு காயம் ஏற்படவே இவருக்கு மீண்டும் தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்பட்டது.
கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட கான்வே ஹாட்ரிக் அரைசதம் அடித்தார். அவரின் 3 ஆட்டங்களில் ஸ்கோர் 85, 56, 87 என்று இருந்தது. ஆனால், அடுத்து நடந்த லீக் ஆட்டங்களில் சொதப்பிய அவர் பின்னர் களமாடி 3 ஆட்டங்களில் 0, 5, 16 என சொற்ப ரன்னில் அவுட் ஆகி இருந்தார். இருப்பினும், கான்வே சென்னை அணி தேடி வந்த தொடக்க ஜோடிக்கான தேடலை முடிவு கொண்டு வந்துள்ளார் என்றே கூறலாம்.
இதற்கிடையில், சென்னை அணி தொடக்க வீரராக ராபின் உத்தப்பாவை களமிறக்கி இருந்தது. தனக்களித்த வாய்ப்பை கடந்த சீசனில் சிறப்பாக பயன்படுத்தி இருந்த உத்தப்பா, இந்த சீசனிலும் அதே வேகத்தை காட்டி இருந்தார். அவர் ஜொலித்த ஆட்டத்தில் ருதுராஜ் கைக்வாட்க்கு கையும் வரவில்லை, காலும் வரவில்லை. 3 ஆட்டங்கள் கடந்தால்தான் அவர் ஃபார்மிற்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில் 5வது ஆட்டத்தில் தான் அவர் ஃபார்மிற்கே வந்தார். ஆனால், ருத்து 25 வயது நிரம்பிய இளம் வீரர். அவரை சென்னை அணி மீண்டும் ஒருமுறை பட்டை தீட்டி விடும் என்பதில் ஐயமில்லை.
ராபின் உத்தப்பாவை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த வீரராக இருந்தாலும், அவரின் வயது 36. தவிர, நடப்பு சீசனில் நடந்த கடைசி 5 ஆட்டங்களில் அவரின் ஸ்கோர் 3, 30, 1, 1, 0, 1 என்று உள்ளது. எனவே, சென்னை அணி ஒரு வலுவான ஜோடியை கட்டமைக்க ராபின் உத்தப்பாவை தியாகம் செய்யலாம் என்று தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.