ipl 2022 playoffs Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கிளைமேக்சான பிளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கி விட்டது. இத்தொடருக்கான கடைசி ரவுண்டான 14வது போட்டிகள் நேற்று முதல் தொடங்கி உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதியதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமாடி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் வீழ்த்திய நிலையில், லக்னோ அணி தற்போது 18 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. லக்னோவிடம் தோல்வி கண்ட கொல்கத்தா அணி 3வது அணியாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ஏற்கனவே மும்பை, சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை சுவைக்கும் பட்சத்தில் 2வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
4வது இடத்திற்கு நடக்கும் போட்ட போட்டி
இந்த பட்டியலில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளுடன் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளன. இதேபோல் தலா 12 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளன. இந்த 4 அணிகளும் 4வது இடத்தை பிடிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று இப்போது பார்க்கலாம்.
பஞ்சாப் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
பஞ்சாப் அணி பிளே ஆஃப்க்கு முன்னேற கொல்கத்தா லக்னோ அணியிடம் தோற்க வேண்டும். இது நேற்றைய ஆட்டத்தில் நடந்தேறிவிட்டது. தற்போது, பெங்களூரு அணி குஜராத்துடன் தோற்க வேண்டும். இதேபோல் டெல்லி அணியை மும்பை வீழ்த்தியாக வேண்டும்.
மேலும், பஞ்சாப் அணி அதன் கடைசி ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வெல்ல வேண்டும்.
ஐதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
ஐதராபாத் பிளே ஆஃப்க்கு செல்ல குஜராத் அணியிடம் பெங்களூரு தோற்க வேண்டும். மும்பை டெல்லியை 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். மேலும், ஐதராபாத் அதன் கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தோற்கடிக்க வேண்டும்.
பெங்களூரு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அந்த அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய வெற்றி தேவை. மேலும் டெல்லி அணி அதன் கடைசி ஆட்டத்தில் (மும்பை அணியிடன்) தோற்க வேண்டும்.
டெல்லி பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
வருகிற சனிக்கிழமையன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி மும்பையை வீழ்த்தினால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும். ஒருவேளை, தோல்வியடையும் பட்சத்தில் பெங்களூரு அணி குஜராத்திடம் தோற்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil