Dinesh Karthik Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் டி-20 ஆட்டங்கள் விளையாடப்பட்ட தருணம் அது. ஒன்பது மாதங்களில் முதல் டி-20 உலகக் கோப்பையை நடந்த இருந்த தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாகவே 3 டி-20 போட்டிகளில் விளையாடி இருந்தது. இதேபோல் ஆஸ்திரேலியா 4 ஆட்டங்களில் விளையாடி இருந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் கூட இந்த ஃபார்மெட்டில் அறிமுகமாக ஆட்டத்தை விளையாடி இருந்தன.
ஆனால், இந்தியா ஒரு ஆட்டத்தில் கூட களமாடமல் இருந்தது. 2006ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் செய்த வீரேந்தர் சேவாக் தலைமையிலான இந்திய அணி 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதில் நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு இடையே இந்த டி-20 ஆட்டம் அப்போது தான் முதன்முதலாக விளையாடப்பட்டது
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் எதிர்பார்ப்புகள் அணை புரண்டு ஓட, ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. வேடிக்கைக்கும், முழக்கத்திற்கும் மத்தியில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆல்பி மோர்கல் 27 ரன்களும், ஜஸ்டின் கெம்ப் ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.
127 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில், தொடக்க வீரரான சச்சின் டெண்டுல்கர் 10 ரன்னில் அவுட் ஆனார். அணிக்கு வலுவான தொடக்கத்துடன் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மிரட்டிய கேப்டன் சேவாக் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் எம்எஸ் தோனி பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட்டுக்கு பிறகு களத்தில் இருந்த தினேஷ் மோங்கியாவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 53 பந்துகளில் 56 ரன்கள் தேவை. 7 விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும், இந்திய டக்-அவுட்டில் பதற்றம் மேலோங்கி இருந்தது. 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என ரசிகர்களுக்கு உற்சாகமளித்த மோங்கியா 38 ரன்களில் அவுட் ஆனார்.
இப்போது இந்தியாவின் வெற்றிக்கு 15 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் தினேஷ் கார்த்திக் – சுரேஷ் ரெய்னா ஜோடி விளையாடினர். ஏற்கனவே நல்ல ஃ பார்மில் இருந்த தினேஷ் பதற்றத்தை தூர விரட்டி விட்டு பவுண்டரிகளை விரட்டலாகினார். அவரது அதிரடியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றியை ருசித்தது. ஆட்டநாயகனாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். அதோடு, சர்வதேச டி-20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றார்.
ஏன் இந்த ரீவைண்ட்?
முதல் சர்வதேச டி-20 ஆட்டத்தில் இந்திய அணியை தலைநிமிரச் செய்த தினேஷ் கார்த்திக் (டிகே) 16 ஆண்டுகளுக்கு பிறகு அதே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் களமாட இருக்கிறார். 2006ல் நடந்த டி20 ஆட்டத்தின் விதிகள் மற்றும் ஃபார்மெட்கள் இன்று மாறியுள்ளது. இதேபோல் டிகே -வும் மாறி விட்டார் என்றே கூறலாம்.
கிரிக்கெட் அரங்கில் வாய்ப்பு தேடும் இளம் வீரர்களும், ஃபார்ம் அவுட் எனக் கூறப்பட்டு தேசிய அணிகளால் ஒதுக்கப்பட்ட வீரர்களுக்கும் வாழ்வு தரும் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் இருந்து வரும் நிலையில், அதன் வழியாக பயன் பெற்றவர்களில் டிகே-வும் ஒருவர். இத்தொடரில் ஃபினிஷராக வலம் வந்த அவருக்கு இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது தான் இடம் கிடைத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டிகே 16 ஆட்டங்களில் 183.88 சராசரியில் விளையாடி 330 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் (26 இன்னிங்ஸில் 399 ரன்கள் 143.05), இந்த சீசனில் அவரது ஆட்டம் பார்ப்பதற்கு ரசிக்கும் படியாகும், பவுண்டரி, சிக்ஸர்கள் அடிப்பதில் மிரட்டலாகவும் இருந்து. தவிர 37 வயதான அவர் 21 வயதான இளம் வீரரைப்போல் மட்டையைச் சுழற்றி ஆட்டம் காட்டினார். ரசிகர்கள் அனைவரும் கம் பேக் என்றால் அது இதுவல்லோ, இப்படி ஒரு தரமான கம் பேக்கை கண்டதில்லை என்று டிகே புகழ் பாடினர். ஆட்டநாயகனாக ஜொலித்த அவருக்கு, ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.
அதிரடி ஃபினிஷர்…
2006ம் ஆண்டின் முதல் டி-20 ஆட்டத்திற்கு பின் இந்திய அணி மேலும் 158 டி-20 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் டிகே 30ல் மட்டுமே விளையாடி இருக்கிறார். இது அவருக்கு பின்னர் அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா (54), ரிஷப் பந்த் (43) ஆகியோரை விடக் குறைவு ஆகும். எனினும், சில நாட்களுக்கு முன்னர் 38வது வயதில் அடியெடியெடுத்து வைத்த டிகே, இந்திய அணியில் தனக்கான தேவையை உருவாக்கியுள்ளார். ‘ஃபினிஷர்’ என்கிற ரோலையும் தனது பயோ-டேட்டாவில் சேர்த்து வைத்திருக்கும் அவர் ரன் சேர்க்க தீர தாகம் கொண்டவராக வலம் வருகிறார்.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் கிரிக்இன்ஃபோவுக்கு அவர் அளித்த பேட்டியில் “உலகக் கோப்பைக்கு நீங்கள் தொடர்ந்து முதல் நான்கு இடங்களில் பேட் செய்தவர்களை ஐந்து, ஆறு, ஏழவது இடங்களில் களமிறக்கி, அவர்கள் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது நல்லதல்ல” என்று கூறியிருந்தார்.
“ஹர்திக் (பாண்டியா) அல்லது ஜடேஜா சிறப்பாக செயல்படுவார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறீர்கள். அந்த அணிகளில் அந்த இடத்தில் பேட் செய்யும் வேறு யார் இருக்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
நீங்கள், டிகே?
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் குறிப்பிடும் நபரும் இரண்டு வெவ்வேறு சூழல்களில் இந்தியாவுக்காக தங்கள் கடைசி ஆட்டத்தை விளையாடி இருந்தனர். அப்போது டிகே, “பல ஆண்டுகளாக தோனி விளையாடிய அதே இடத்தில் விளையாட நான் மிகவும் பொருத்தமானவன் என்று நினைக்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அப்படியே கட் செய்தால், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார் டிகே. அந்த தருணத்தில் வான்கடே ஸ்டேடியம் டிகே-வின் பெயரை உச்சரிக்க சத்தம் முழக்கமாய் மாறி மைதானத்தில் ஒலிக்கப்படும் பாடலாகியது.
எழுச்சி வீரன்…
தினேஷ் கார்த்திக்கைப் பொறுத்தவரை, அவருக்கான நேரம் வர காலம் தாழ்த்தப்பட்டது. இந்திய அணியில் இடம் பெறுவதற்கு அவர் தனது ஆட்டத்தை மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. 2007ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ஜொலித்ததன் மூலம் அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆனார். 2019ல் இதேபோல் விளையாடியதால் அவர் உலகக் கோப்பைக்கான மிடில் ஆர்டர் பேட்டராக அணியில் இடம் பிடித்தார். தற்போது 2022ல், அவர் அதை மீண்டும் ஒரு ஃபினிஷராக செய்துள்ளார்.
இந்திய அணியில் ஒரு வீரராக அவர் ஒரு நிலையான இடத்தைப் பெறாமல் இருக்கலாம். ஆனால், அவர் இன்றும் ஒரு டாப் லெவல் விக்கெட் கீப்பராகவே இருக்கிறார். இணையம் இல்லா காலத்தில் பிறந்தவர்கள் இணையத்தில் புகுந்து விளையாடும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு டாஃப் கொடுப்பது போல், டிகே-வும் களத்தில் ஜொலித்து தன்மீது அனைவரது பார்வையும் விழச் செய்து, புருவரங்களை உயரச் செய்துள்ளார். அவருக்கு மட்டுமே அவரது நேரம் தெரிந்து விட்டது போலும்.
If you believe yourself, everything will fall into place! ✨
— DK (@DineshKarthik) May 22, 2022
Thank you for all the support and belief…the hard work continues… pic.twitter.com/YlnaH9YHW1
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil