Rajat Patidar Tamil News: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடந்து வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்யை எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீசவே முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 117 ரன்களும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களும், தொடக்க வீரர் விராட் கோலி 25 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 208 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அசத்தல் வெற்றி பெற்றது. மேலும் அந்த அணி 2வது தகுதிச் சுற்று ஆட்டத்திற்கும் முன்னேறியுள்ளது.
முதலாவது ஐபிஎல் சதமடித்த படிதார்…
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டு பிளெசிஸ் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டுக்கு பிறகு களமாடிய ரஜத் படிதார் தொடக்கம் முதலே சிக்ஸர், பவுண்டரிகளை ஓட விட்டார். தொடர்ந்து லக்னோவின் ரவி பிஷ்னோய் ஓவரை வெளுத்து வாங்கிய படிதார் தனது முதலாவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர், தனது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 பந்துகளில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஏலம் போகாத ரஜத் படிதார்…
ரஜத் மனோகர் படிதார் மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் அணியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். ரஜத் என்றால் பிரச்சனைகளைத் தீர்ப்பவர் (ஹனுமானின் மற்றொரு பெயர்) என்று பொருள்படும். அதனால் தான் என்னவோ அவர் பெங்களூரு அணியின் கனவை நேற்றைய ஆட்டத்தில் நிறைவேற்றியுள்ளார். ஆனால், இதற்கு முன்பாகவும் அவர் இது போன்ற இக்கட்டான சூழலில் சிக்கி இருந்த மாநில அணியின் வெற்றி கனவையும் நிறைவேற்றி வைத்ததாக அவரது மாநில அணி நண்பர் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஈஸ்வர் பாண்டே 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஜத் படிதார் கடந்த சீசனில் பெங்களூரு அணிக்காக 4 லீக் ஆட்டங்களில் விளையாடினார். இந்தாண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் அவர் தனது பெயரை பதிவு செய்த நிலையில் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. ஆனால் ஏலம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, மார்ச் மாதம், படிதாருக்கு பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அணியில் அவரை மாற்று வீரராகக் கொண்டு வருவதற்கு அணியின் நிர்வாகம் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
பின்னர், அவர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய லுவ்னித் சிசோடியாவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியில் மீண்டும் சேர்ந்து பட்டை தீட்டப்பட்ட ரஜத் படிதார் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டரில் தகதகவென ஜொலித்தார் என்றால் நிச்சயம் மிகையாகாது.
7 முதல் தர சதம்…
28 வயதான படிதார் ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் குழாய்களை உற்பத்தி செய்யும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது கிரிக்கெட் முன்னேற்றம் அடையவில்லை என்றால், அவர் வணிகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பி இருக்கின்றனர். ஆனால் படிதாருக்கு வேறு யோசனைகள் இருந்துள்ளன.
தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு பந்துவீச்சாளராகத் தொடங்கிய படிதார், 15 வயதுக்குட்பட்ட அணியில் இருந்த நாட்களில் தனது பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் அமய் குராசியாவின் வழிகாட்டுதலின் கீழ் அவர் தனது பேட்டிங் நுட்பத்தையும் அணுகுமுறையையும் மாற்றியமைத்து, ஒரு தரமான பேட்ஸ்மேனாக வளர்த்துள்ளார்.
ஒரு பேட்ஸ்மேனாக வளர்ந்து வந்த நாட்களில் அவருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் அவரை பின்னுக்கு இழுத்தது. மேலும் அதற்காக அவர் செய்துகொண்ட அறுவை சிகிச்சை அவரை பேட்டை தொடாமல் இருக்குமாறு கட்டிப்போட்டது. ஆனாலும் தனது தன்னம்பிக்கையை துளி அளவும் கைவிடாத அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதன் பயனாக சில பெரிய மற்றும் முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடவும் செய்தார்.
தற்போது நீண்ட காலமாக தனது மாநில அணியில் விளையாடி வரும் படிதார் அணியில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துள்ளார். மேலும் அவர் 7 முதல் தர சதங்களையும், மூன்று உள்நாட்டு ஒரு நாள் சதங்களையும் அடித்து அசத்தியுள்ளார். நேற்று அவர் அடித்த டி20 சதம் மூலம் அவரை கிரிக்கெட் உலகமே யார் இந்த அதிரடி வீரர்? என்று தேட ஆரம்பித்தது. அவர் தனது மாநில அணிக்கு எப்படி ஹனுமான் போல் உதவினாரோ அதேபோல் நேற்று பெங்களூரு அணிக்கும் உதவி இருக்கிறார். அவர் இனி தொடர்ந்து விளையாடும் ஆட்டங்களிலும் இப்படி உதவி ரன் மழை பொழிவார் என்று நம்பலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.