IPL 2022 Playoffs qualification scenario in tamil: 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது தொடர் கிளைமேக்சான பிளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கியுள்ள நிலையில், கடைசி ரவுண்டான 14வது போட்டிகள் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. முன்னதாக, கடந்த புதன் கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
நேற்றை லீக் ஆட்டத்தில் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவை எதிர்கொண்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தை பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெங்களூரு அணி குஜராத் நிர்ணயித்த 169 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை 18.4 வது ஓவரில் எட்டியது.
மேலும், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இதனால் 16 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்திற்கு பெங்களூரு அணி முன்னேறியுள்ளது. எனினும் அந்த அணியின் ரன் ரேட் -0.253 ஆக உள்ளது. ஆனால், 5வது இடத்தில் உள்ள டெல்லி அணியின் ரன் ரேட் +0.254 ஆக உள்ளது.
பெங்களூருவின் அடுத்த சுற்று வாய்ப்பு எப்படி?
லக்னோ அணியிடம் தோல்வி கண்ட கொல்கத்தா அணி 3வது அணியாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ஏற்கனவே மும்பை, சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளன.
இந்நிலையில், பெங்களூரு அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்த பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐராபாத் அணிகளின் போட்ட போட்டி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், 5வது இடத்தில் உள்ள டெல்லி அணி பெங்களூருவின் பிளே ஆஃப் சுற்று கனவுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஏனென்றால் டெல்லி அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் உள்ளது.
நாளை சனிக்கிழமை நடைபெற உள்ள இந்த லீக் ஆட்டத்தில் டெல்லி மும்பையை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் பலத்த அடி வாங்கியுள்ள 5 முறை சாம்பியன் மும்பை அணி 10 தோல்விகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும், கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 2ல் தோல்வி 3ல் வெற்றியை பெற்றுள்ளது. எனவே, மும்பை அணி தனது லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெறவே முயலும். ஆனால், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் உள்ள டெல்லி அணி மும்பை வீழ்த்தவே வரிந்து கட்டும்.
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுபெற்றுள்ள அந்த அணி 16 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியான சென்னை அணி 9 தோல்வி கண்டு நடப்பு தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் பட்டியலில் 9வது இடத்தில் உள்ள அந்த அணி ஆறுதல் வெற்றியுடன் விடைபெற வியூகம் வகுக்கும்.
நாளை மறுநாள் (மே 22) நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்றை ஆட்டத்தில் பெங்களூரு அணியின் வெற்றியால் இவ்விரு அணிகளின் பிளே ஆஃப் கனவும் தகர்ந்து விட்டது. இதனால், கடைசி லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை பெறவே இவ்விரு அணிகளும் தீவிரம் காட்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil