Umran Malik Tamil News: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருபவர் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக். ஜம்மு - காஷ்மீர் மாநில அணியில் விளையாடி வரும் இவர் ஐதராபாத் அணிக்கான மூன்று நெட் பவுலர்களில் ஒருவராகக் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இதே சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் அறிமுகமானார்.
பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில் தனது வேகத்தாக்குதலை தொடங்கி இருந்த மாலிக், 150 கிமீ வேகத்தில் தொடர்ச்சியாக ஐந்து பந்துகளை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன்பலனாக அவருக்கு 2021ம் ஆண்டு இறுதியில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நெட் பவுலர் வாய்ப்பு கிடைத்தது. இதன்பிறகு இதே ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் தர கிரிக்கெட் அறிமுகத்தை தொடங்கினார்.
அதிவேக பந்துவீச்சு - அவரின் சாதனையை அவரே முறியடிப்பு
15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருந்த நிலையில், உம்ரான் மாலிக்கை ஐதராபாத் அணி 4 கோடிகள் கொடுத்து அணியில் தக்கவைத்துக் கொண்டது. மாலிக் தற்போது நடைபெற்று வரும் லீக் ஆட்டங்களில் தனது சிறப்பான பந்துவீச்சை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி கவனம் ஈர்த்து வருகிறார். அவரின் அதிவேக பந்துவீச்சை தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் பட்டை தீட்டி வருகிறார்.
இதனால் மாலிக் மிகத்துல்லியமாக பந்துகளை வீசி மிரட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தனது அசத்தலான வேகத்தை மிக நுணுக்கமாக பயன்படுத்தி விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட 5 விக்கெட்டுகளையும் மாலிக் மட்டுமே கைப்பற்றி அசத்தினார். சுவாரஷ்யம் என்னவென்றால் அவற்றில் 4 விக்கெட்டுகள் க்ளீன் போல்ட்-அவுட் ஆகும்.
தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துகளை வீசி வரும் முதல் வேகப்பந்து வீச்சாளராகவும் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் தான் இருந்து வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் படுவேகமாக பந்துகளை வீசி மிரட்டி வந்த இவர், 20வது ஓவரின் 4வது பந்தை அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். இந்த அதிவேக பந்தை அவர் வீசியதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி அவரின் சாதனைகளை அவரே முறியடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: அதிவேக பந்துவீசி மிரட்டிய உம்ரான் மாலிக்… அவரின் சாதனையை அவரே முறியடிப்பு!
ரவி சாஸ்திரி பேட்டி
உம்ரான் மாலிக் வீசி வரும் அதிவேகப்பந்துகளை முன்னாள் வீரர்கள் பலர் உண்ணிப்பாக கவனித்து வரும் நிலையில், அவருக்கு விரைவில் இந்திய அணி வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், உம்ரான் மாலிக் பந்துவீச்சு குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உம்ரான் மாலிக்கை விரைவில் அணியில் இணைத்து, அவருக்கு சீனியர் பவுலர்களுடன் பயிற்சியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "உம்ரான் மாலிக்கிற்கு பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தை வழங்க வேண்டும். அவரை விரைவில் அணியில் இணைத்து சீனியர் பவுலர்களுடன் பயிற்சியை வழங்க வேண்டும். ஏனெனில் பும்ரா, ஷமி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் அவர் அருகில் இருந்து பழகினால் நிச்சயம் பல நுணுக்கங்களை தனது பந்து வீச்சில் கற்றுக் கொள்வார்.
மேலும், அவருக்கு இந்திய அணியில் பயிற்சி கிடைக்கும் போது அதிக தன்னம்பிக்கையும் கிடைக்கும். எனவே, அவரை விரைவில் அணியில் இணைத்து இந்திய அணியுடன் பயணிக்க வைத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய வீரராக வருவார்" என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: அதிவேக பந்துவீசி மிரட்டிய உம்ரான் மாலிக்… அவரின் சாதனையை அவரே முறியடிப்பு!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.