Advertisment

சோதனை மேல் சோதனை… கிரிக்கெட் கடவுளிடம் அழுத கோலி கூறியது என்ன?

‘What else do you want me to do?’ Kohli cries out at the cricketing gods Tamil News: கோலி இப்படி மீண்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களின் முகத்தை வாடாச் செய்தது. ஆனால், கோலியோ ஒரு படி மேலே சென்று கடும் கோபத்தை நடு மைதானத்தில் வெளிப்படுத்தினார்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Virat Kohli cries out at the cricketing gods, what did he say?

Virat Kohli (image credit: twitter.com/CricCrazyJohns)

Virat Kohli Tamil News: 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீசுவதாக அறிவித்தார்.

Advertisment

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 209 ரன்கள் சேர்த்தது. அரைசதம் அடித்த தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 29 பந்துகளில் 4 பவுண்டர்கள் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு 66 ரன்கள் எடுத்தார். மிடில்-ஆடரில் களமிறங்கி மிரட்டிய லியாம் லிவிங்ஸ்டோன் 4 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. அந்த அணி சார்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், ரிஷி தவான், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பணிச்சுமை… பதவி விலகிய கோலி…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பணிச்சுமை காரணமாக இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு விலகுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தார். முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் 2021க்கு பிறகு (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

எனினும், கோலி தான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ஒயிட்- பால் கிரிக்கெட்டில் இரண்டு கேப்டன்கள் இருப்பது நல்லதல்ல என முடிவு செய்த பிசிசிஐ தேர்வுக்குழு, கோலியிடம் இருந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை பறித்து, மூத்த வீரர் ரோகித் சர்மாவிடம் கொடுத்தது. ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக நியமிக்க்கப்பட்டிருந்த ரோகித் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே பிசிசிஐ-யின் தேர்வுக்குழு விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடரலாம் என்று தெரிவித்து இருந்தது. ஆனால், விராட் கோலி தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு பிறகு தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

கோலியின் சதம் தேடல்…

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகமான கோலி இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,043 ரன்களையும், 260 ஒருநாள் போட்டிகளில் 12,311 ரன்களையும், 97 டி20 போட்டிகளில் 3,296 ரன்களையும் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 70 சதங்களை பதிவு செய்துள்ள கோலி அவரின் 71வது சத தேடலை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதற்கான தாகத்தை கோலி தீர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த கொண்டிருக்கும் நேரத்தில், அவர் நடப்பு தொடரில் 3 முறை பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார். 12 போட்டிகளில் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் சில போட்டிகளில் சொற்ப ரன்னில் வெளியேறியதால் அவரது பேட்டிங் சராசரி 19.64 ஆக சரிந்தது. எனினும் துவண்டு விடாத கோலி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஐபிஎல் 2022 அரைசதத்தை பதிவு செய்தார்.

கிரிக்கெட் கடவுளிடம் அழுத கோலி…

publive-image

கோலியின் அரைசதம் அவரது முகத்தில் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் புன்னகையை தவழச் செய்த நிலையில், அவர் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு 20 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

ரபாடா வீசிய 3வது ஓவரை சந்தித்த கோலி ஷார்ட் லெந்த் பந்தை கட் ஷாட் ஆட முயன்று ராகுல் சஹார் வசம் கேட்ச் கொடுத்தார். இதற்கு கள நடுவர் நாட் அவுட் கொடுக்க பஞ்சாப் அணி DRS எடுத்தது. ரிவ்யூவில் பந்து பேட்டில் எட்ஜாகியது. இதனால் அவர் அவுட் என மாற்றி கொடுக்கப்பட்டது.

publive-image

கோலி இப்படி மீண்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களின் முகத்தை வாடாச் செய்தது. ஆனால், கோலியோ ஒரு படி மேலே சென்று கடும் கோபத்தை நடு மைதானத்தில் வெளிப்படுத்தினார். மேலும், தனது கைகளை தூக்கி வானத்தை பார்த்த அவர், கடவுளிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

கோலி " இதற்கு மேல் நான் என்னதான் செய்ய வேண்டும் என நீ நினைக்கிறாய், என்னை சோதிக்கிறாயே" என மனம் உடைந்து பேசினார். அப்படி கோலி பேசிய போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Sports Ipl 2022 Captain Virat Kholi Royal Challengers Bangalore Virat Kohli Ipl News Ipl Cricket Ipl Rcb
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment