சச்சின் – கோலி : ஒப்பீடு தேவையா?

பேட்ஸ்மேன்களின் ஆதிக்க சூழலில், விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை நாம் ரசிக்கலாமே தவிர, அதனை போராளிகள் நிறைந்திருந்த சச்சினின் காலத்தோடும், களத்தோடும் எப்படி ஒப்பிட முடியும்?

By: October 25, 2018, 2:44:48 PM

அன்பரசன் ஞானமணி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று 10k ரன்களை கடந்த போது, ஏதோ தங்களது கம்பெனியில் 10,000 ரூபாய் தீபாவளி போனஸ் கொடுத்தது போன்ற உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர் ரசிகர்கள்.

போனஸ் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், ‘த மேன் இன் டெரிஃபிக் ஃபார்ம்’ நேற்று 10,000 ரன்களை கடந்த போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் கொண்டாடியது. வாழ்த்துகள் விராட். நீங்கள் இந்தியாவின் சொத்து என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள்.

ஆனால், ஒரு நெருடல் கூடவே நம்மை பின்தொடர்ந்து வருவதை உணரமுடிகிறது. அதைப் பற்றி விலாவாரியாக கொஞ்சம் இந்தக் கட்டுரையில் டிஸ்கஸ் செய்துவிடுவோமே.

மேட்டர் என்னனா… கோலியா? சச்சினா? என்பது தான். நேற்று விராட் கோலி 10,000 ரன்களை கடந்தவுடன் பெரும்பாலான ட்வீட்களில் கோலி பெயர் இருந்ததை விட, சச்சின் பெயர் இருந்ததே அதிகம்.

அதாவது சச்சின் vs கோலி என்பது போல.. பலரும், ‘சச்சினின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார்’ , ‘விராட் கோலி த ஆல் டைம் பெஸ்ட்’ , என்ற ரீதியில் ட்வீட்கள் தெறிக்க விட்டனர். இதை எல்லாவற்றையும் ஓவர்டேக் செய்வது போன்று, போட்டியை ஒளிபரப்பிய சேனலே ‘Who will you rather pick in your dream XI?’ என்று வாக்கெடுப்பு நடத்தியது தான் உச்சக்கட்ட ரகம்.

அதற்கும் நம்மாளுங்க போட்ட வாக்குகளின் முடிவு இது, Sachin – 38% & Kohli – 62%.

சரி! சச்சின் பெஸ்ட்டா? கோலி பெஸ்ட்டா? என்ற ஈக்குவலைசேஷன் பேசுவதற்கு முன்பு, நாம் ஒருநாள் போட்டிகளில் சில ஸ்டேட்ஸ்களை பார்ப்போம்.

முதல் 90 ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை – 3

முதல் 90 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை – 17

இந்த இடத்திலேயே விராட் கோலி சச்சினை விட 15 சதங்கள் முன்னிலை பெற்றுவிட்டார்.

அதுமட்டுமின்றி, 205 இன்னிங்ஸில் விராட் கோலி 10,000 ரன்களை கடந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் தான் 10,000 ரன்களை கடந்தார்.

37வது ஒருநாள் சதத்தை அடித்த விராட் கோலி, அதற்காக எடுத்துக் கொண்ட மேட்சுகளின் எண்ணிக்கை 213.

இதே 37வது ஒருநாள் சதத்தை அடிக்க சச்சின் எடுத்துக் கொண்ட ஆட்டங்களின் எண்ணிக்கை 330.

127 மேட்சுகளுக்கும் முன்னதாகவே, விராட் கோலி 37 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துவிட்டார்.

சச்சின் ஆடியுள்ள மொத்த ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை – 463

சதங்கள் – 49

ரன்கள் – 18,426

ஆவரேஜ் 44.83

தற்போது(அக்.24 2018 வரை) விராட் கோலி ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை – 213.

சதங்கள் – 37

ரன்கள் – 10,076

ஆவரேஜ் – 59.62

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கை 71.

இதில், இந்தியாவில் ஆடிய போட்டியின் எண்ணிக்கை – 30

ஆஸ்திரேலியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 25

பொதுவான இடம் – 16

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் அடித்த சதங்களின் எண்ணிக்கை – 9.

இதில், இந்தியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4

ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சதம் – 1

பொதுவான இடத்தில் அடித்த சதங்கள் – 4.

அதாவது, இந்த ஒன்பது சதத்தில் 8 சதங்கள் ஆசிய கண்டத்திலேயே அடிக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்திற்கு வெளியே சச்சின் ஒரேயொரு சதத்தை மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்திருக்கிறார்.

இதில், ஃபர்ஸ்ட் பேட்டிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4

சேஸிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 5 (இதில் மூன்று சதங்களில் இந்தியா வென்றுள்ளது)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை 28. 

இதில், இந்தியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 15

ஆஸ்திரேலியாவில் ஆடிய போட்டிகளின் எண்ணிக்கை – 12

பொதுவான இடம் – 1

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடித்த சதங்களின் எண்ணிக்கை – 5.

இதில், இந்தியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 3

ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சதங்கள் – 2

மேலும் இதில்,

ஃபர்ஸ்ட் பேட்டிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 1

சேஸிங்கில் அடிக்கப்பட்ட சதங்கள் – 4 (இதில் மூன்று சதங்களில் இந்தியா வென்றுள்ளது)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் முன்வைத்த புள்ளி விவரங்கள் ஒரு சாம்பிள் மட்டும் தான். இதேபோல், ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், சச்சினை விட விராட் கோலியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அதாவது, பேட்டிங் தரத்தில் இருவரும் சமமாக இருந்தாலும், போட்டிகளின் எண்ணிக்கையை நாம் கணக்கில் கொண்டால், விராட் கோலியின் கிராஃப் உண்மையில் ஆச்சர்யப்படுத்துகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு 71 மேட்சுகளில் ஆடியுள்ள சச்சின், 9 சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால், வெறும் 28 ஆட்டத்தில் மட்டுமே ஆடியுள்ள விராட் கோலி, இப்போதே 5 சதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துவிட்டார் என்றால், 71 போட்டிகளில் விராட் கோலியின் சதங்கள் எங்கே போய் நிற்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சச்சினை விட, விராட் கோலி மிக அபாரமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பதே உண்மை. புள்ளியல் அடிப்படையில் பார்த்தால் அதுவே நிதர்சனம்.

அதேசமயம், சோயப் அக்தர், மெக்ரத், பிரட் லீ, வக்கார் யூனுஸ், முரளிதரன், வார்னே, ஆம்ப்ரோஸ், அக்ரம் போன்ற மெகா லெஜன்ட்கள் உச்சத்தில் இருந்தே போதே, சச்சின் அவர்களை திறம்பட சமாளித்து வெற்றி கண்டார் என்பதை மறந்துவிட முடியுமா?

விராட் கோலி கிரிக்கெட்டில் நுழைந்த போது, மிட்சல் ஜான்சன், மலிங்கா, ஸ்டெய்ன் போன்றோர்களே டாப் பவுலர்கள். அவர்களை எதிர்கொள்வதும் கடினம் தான். ஆனால், டி20 என்று கிரிக்கெட் ஜீனில் மாற்றம் ஏற்பட்ட பின், பவுலர்களின் சாம்ராஜ்யம் என்பது ஒவ்வொரு தினமும் அழிந்து கொண்டு வருகிறது. இன்று திசாரா பெரேராவை வைத்து இலங்கை ஈயோட்டிக் கொண்டிருக்கிறது. மிட்சல் ஸ்டார்க் எனும் ஒற்றை ஆளுமையை வைத்து ஆஸ்திரேலியா தள்ளாடி வருகிறது. இங்கிலாந்து அணியெல்லாம் ஒருநாள் போட்டிகளில் எந்த பவுலரை கொண்டு அச்சுறுத்துகிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. 480 ரன்கள் வரை ஒருநாள் ஸ்கோர் சென்றுவிட்டது.

இப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களின் ஆதிக்க சூழலில், விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை நாம் ரசிக்கலாமே தவிர, அதனை போராளிகள் நிறைந்திருந்த சச்சினின் காலத்தோடும், களத்தோடும் எப்படி ஒப்பிட முடியும்?.

அதுமட்டுமில்லை.. இந்தியாவின் அப்போதைய நிலை என்ன என்பது கிரிக்கெட்டை அணு அணுவாக அப்போதிலிருந்து ரசித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும். சச்சின் எனும் தனி வீரரை நம்பி இந்திய அணி இருந்த காலமெல்லாம் உண்டு. சச்சின் அடித்தால் போச்சு.. இல்லையேல் எல்லாம் போச்சு.. என்ற நிலைமை இருந்தது. அப்போது சச்சினின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? கோடிக் கணக்கான மக்களின் அழுத்தமிகு எதிர்பார்ப்பை தினம் தினம் தன் தோளில் சுமந்து ஆடிய சச்சினை, கோலியுடன் ஒப்பிட முடியும் என எண்ணுகிறீர்களா?

கேப்டன் எனும் புள்ளியில் விராட் கோலிக்கும் பிரஷர் இருக்கலாம். ஆனால், அதை அவர் எளிதாக ஓவர்டேக் செய்ய, ரோஹித், தவான், தோனி, பும்ரா, புவனேஷ் போன்ற வீரர்கள் துணை நிற்கின்றனர்.

கிரிக்கெட்டில், பேட்டிங் என்ற தளத்தில் மட்டும் நாம் சச்சின், கோலியை ஒப்பிட்டுவிட முடியுமா?

உளவியல்,

தகவமைப்பு,

சூழியல்

போன்ற காரணிகளை நாம் ஏன் ஒப்பிட தவறவிட்டோம்?. இவற்றையெல்லாம் நாம் கணக்கில் எடுத்தால், சச்சினை பிரைன் லாராவிடமோ, ரிக்கி பாண்டிங்கிடமோ, ராகுல் டிராவிட்டிடமோ தான் ஒப்பிட முடியும்.

வெறும் ரன்களையும், சதங்களையும் எடுத்துக் கொண்டு பேட்ஸ்மேன்களை ஒப்பீடு செய்வது என்பது முட்டாள்த்தனம் என்பதே உண்மை.

இவ்வளவும் சச்சின் புராணம் பாடுவதற்காக அல்ல… கம்பேரிசன் என்ற புராணமே தவறு என்பதை சுட்டிக் காட்டுவதற்குத் தான்!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Is comparison between sachin kohli correct

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X