இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கிரிக்கெட் தொடருக்கு தயாராவது போல தெரியவில்லை இந்திய அணி.
கொல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாக தயாரிக்க இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை எதிர்கொள்ளவே இந்த திட்டம் என கூறப்பட்டது.
ஆனால், நாக்பூரில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர்களான அஷ்வின், ஜடேஜா மட்டும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இப்படிப்பட்ட ஸ்பின் பிட்ச்சை தயாரித்து, பலமே இல்லாத இலங்கை அணியை வீழ்த்தி என்ன செய்யப் போகிறது இந்திய அணி? இந்த வெற்றியால் யாருக்கு என்ன லாபம்?
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணி நிறைய வெளிநாட்டு தொடர்களில் விளையாட இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இந்திய அணி செயல்படுகிறதா? என்றால் பெரிய கேள்விக்குறிதான்.
'பிசிசிஐ-யின் சரியான திட்டமிடல் இல்லாததால், அணியின் செயல்திறன் பாதிக்கிறது' என கேப்டன் விராட் கோலி ஓப்பனாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை தான்.
தேவையேயில்லாமல், இப்போது இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான், இலங்கைக்கு சென்று இந்திய அணி நீண்ட தொடரில் விளையாடியது. அவர்கள் மண்ணிலேயே, அவர்களால் வெற்றிப் பெற முடியவில்லை. டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தம் நடந்த ஒன்பது போட்டிகளிலும் இலங்கை அணி தோற்று வாஷ் அவுட் ஆனது.
அப்படிப்பட்ட இலங்கை அணியை இந்தியாவுக்கு வரவழைத்து, புஜாரா சதம் அடிக்கிறார், முரளி விஜய் சதம் அடிக்கிறார். இவர்கள் சதம் அடித்தது நல்ல விஷயம் தான். ரசிகர்களும் ஹேப்பி அண்ணாச்சி மூடில் தான் உள்ளனர். ஆனால் எதிர்கால திட்டத்திற்கு இது உதவுமா?
தென்னாப்பிரிக்காவில் நின்று கொண்டு ஸ்பின் பந்தையை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள போகிறார்கள்? தென்னாப்பிரிக்க பவுலர்கள் கையில் இருந்து பந்து வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. இதைக் கருத்தில் கொள்ளாமல், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செயல்படுகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும், வெளிநாட்டு மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைய தயாராகி வருகிறது. சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டால், 100 தோனி, 200 கோலியை வைத்துக் கொண்டு விளையாடினாலும் இந்தியாவால் வெளிநாட்டு தொடர்களை வெல்ல முடியாது.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் ஒருநாள், டி20 தொடர்களை வெல்வது பெரிய விஷயம் இல்ல பாஸ்.. டெஸ்ட்...டெஸ்ட் மேட்ச் தான் ரியல் கிரிக்கெட். அதில், வென்று தொடரைக் கைப்பற்றுவது உண்மையான கெத்து.
புள்ளப் பூச்சி அணிகளை கொண்டு வந்து, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடர்களை வெல்வதால், ஒரு பிரயோஜனமும் இல்லை. தென்னாப்பிரிக்க தொடரில், இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றால் மகிழ்ச்சி.. ஆனால், தோல்வி அடைந்தால் மீண்டும் ஏமாறப் போவது பிசிசிஐ-யோ, கோலியோ அல்ல.... ஒவ்வொரு முறையும் நம்பி நம்பி மோசம் போகும் ரசிகர்கள் தான்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.