ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில், 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சீனியர் பவுலர் லசித் மலிங்காவிற்கு மீண்டும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாத மலிங்கா, உடல் பெருத்து காணப்பட்டார். அடிக்கடி காயத்தாலும் அவதிப்பட்டதால், அவரால் பழையபடி சிறப்பாக பந்துவீச முடியவில்லை. ஐபிஎல் தொடரிலேயே, அவரது ஆட்டம் சுத்தமாக செல்லுபடியாகாமல், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இதனால், 35 வயதான மலிங்காவால் இனிமேல் இலங்கை அணியில் இடம் பிடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏறக்குறைய, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுற்றதாகவே பார்க்கப்பட்டது.
இருப்பினும், கடந்த மாதம் பேட்டியளித்த இலங்கை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா, "இன்னமும், மலிங்காவை நாங்கள் பரிசீலனையில் வைத்திருக்கிறோம். உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், மீண்டும் அவரால் இலங்கை அணியில் இடம் பிடிக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார். அப்போது கூட, எதோ சம்பிரதாயத்துக்கு பேசுகிறார் என்று தான் நினைக்கத் தோன்றியது.
இதை பொய்யாக்கும் விதத்தில், நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், மலிங்காவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். ஆனால், அவராகவே ஓய்வு முடிவை அறிவிக்கும் திட்டமாகவே, இறுதியாக அவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
கடைசியாக அவர் விளையாடிய 10 போட்டிகளும் டி20 வகையறா தான். இதில், ஜூலை மாதம் நடைபெற்ற குளோபல் டி20 தொடரில், அவர் ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
போட்டிகள் - 6
வீசிய ஓவர்கள் - 24.0
மெய்டன் - 0
விக்கெட்டுகள் - 13
பெஸ்ட் - 3/11
ஆவரேஜ் - 11.84
எகானமி - 6.41
இந்த ரெக்கார்ட்ஸ் பார்த்தால் உங்களுக்கு புரிந்திருக்கும். இத்தொடரில் மலிங்காவின் செயல்பாடு சிறப்பாகவே அமைந்தது. இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியதில் 3வது இடத்தைப் பிடித்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகளை மலிங்கா இம்ப்ரெஸ் செய்ய இத்தொடர் முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால், இதைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற SLC T20 எனும் உள்ளூர் டி20 தொடரில் மலிங்காவின் செயல்பாடு மெகா சொதப்பலாக அமைந்துள்ளது.
போட்டிகள் - 6
வீசிய ஓவர்கள் - 24.0
மெய்டன் - 0
விக்கெட்டுகள் - 3
பெஸ்ட் - 1/30
ஆவரேஜ் - 69.00
எகானமி - 8.62
இந்த Stats இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு ஏமாற்றம் அளித்தாலும், மலிங்காவிற்கு ஆசிய கோப்பை எனும் மிகப்பெரிய பொறுப்புள்ள தொடரில் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதை பார்க்கும் பொழுது, மலிங்கா ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. பொதுவாக, பெரிய ஜாம்பவான்கள் காலாவதியான பிறகும் அணியில் நீடித்தால், ரொம்ப நாள் சேர்க்காமல் இருந்தாலும், திடீரென ஒரு தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அது அவரது Farewell தொடராக அமையும். அந்த குறிப்பிட்ட வீரர், அத்தொடருக்கு முன்போ, பின்னரோ அல்லது தொடர் நடந்து கொண்டிருக்கும் போதோ 'நான் ஓய்வு பெறுகிறேன்' என்று அறிவிப்பார். இதுதான் உலக வழக்கம்.
அதைப் போலவே இப்போது மலிங்கா விஷயத்திலும் நடப்பதாகவே தெரிகிறது. 35 வயதான மலிங்கா கனடா டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், உள்ளூர் டி20 தொடரில் படு மோசமாக விளையாடியிருக்கிறார். இப்படி, அப்படி என்று இருப்பதால், இதோடு 'அவர் விளையாடியது போதும்' என்று முடிவெடுத்து, அவர் வாயாலேயே ஓய்வு பெறப் போவதாக அறிவிக்க வைக்கவே, இப்படியொரு ஆசிய கோப்பை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.
அதுமட்டுமின்றி, நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு பேட்டியளித்த மலிங்கா, "எனது சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். மனரீதியாகவும் நான் கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட்டேன். எனவே, விரைவில் ஓய்வுத் திட்டத்தை அறிவிக்கலாம் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.