எம்ஆர்எஃப் டயர்ஸ் கிரிக்கெட் ரேட்டிங் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 897 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 849 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-ஆம் இடத்தில் இருந்த இலங்கையின் ரங்கனா ஹெராத், 828 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். வேறு எந்த இந்திய பவுலரும் டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. முகமது ஷமி 23-வது இடத்தில் உள்ளார்.
அதேபோல், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் ஜோ ரூட் 885 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 880 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா சார்பில், புஜாரா 866 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 826 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். தற்போது நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 190 மற்றும் 14 ரன்கள் எடுத்ததன் மூலம் ஷிகர் தவான் 21 இடங்கள் முன்னேறி, 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில், வங்கதேசத்தின் ஷகிப்-அல்-ஹசன் 431 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 414 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அஷ்வின் 413 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுத் துறையிலும் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அவர் 12 இடங்கள் முன்னேறி, 25-வது இடத்தை முதன் முதலாக எட்டியுள்ளார். அதேபோல், டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவையிரண்டுமே, ஸ்டோக்ஸின் சிறந்த தரவரிசையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.