இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இந்த தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 15-விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அதோடு, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர் தரவரிசை
- ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்(732)
- தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாகீர் (718)
- ஆஸ்திரேலிய வீரர் மிட்ச்செல் ஸ்டார்க்(701)
- இந்திய வீரர் ஜஸ்பிரிட் பும்ரா(687)
- தென்ஆப்ரிக்க வீரர் கசிகோ ரபடா(685)
பும்ராவைத் தவிர்த்து மற்ற இந்திய வீரர்களும் பந்வீச்சு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி, இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் 10-வது இடத்தை பிடித்துள்ளார். ஹர்த்திக் பாண்டியாக இரண்டு இடங்கள் முன்னேறி 61-வது இடத்திலும், குல்திப் யாதவ் 21 இடங்கள் முன்னேறி 89-வது இடத்திலும், சாஹல் 55 இடங்கள் முன்னேற்றம் கண்டு 99-வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இலங்கைக்கு அணிக்கு எதிராக ஒருநாள்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடிய கோலி, 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசம் உட்பட 330 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறார் விராட் கோலி. முன்னதாக கடந்த 1998-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 887 புள்ளிகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, பேட்டிங் தரவரிசையில் மற்ற இந்திய வீரர்களான ரோகித் சர்மா 9-வது இடத்திலும், மகேந்திர சிங் டோனி 11-வது இடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணி சந்தித்த படுதோல்வியினால், 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது. நேரடியாக தகுதிபெற முடியாத அணிகள், உலக்கோப்பை தகுதி சுற்று போட்டியின் மூலம் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.