Jasprit Bumrah Replacement - T20 World Cup 2022 Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
Advertisment
இந்த தொடருக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் 14 வீரர்கள் இன்று ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடிக்க போவது யார்? என்று பிசிசிஐ தற்போது வரை தெரிவிக்கவில்லை. ஆஸ்திரேலியா சென்றடைந்ததும் அது பற்றி தகவல் வெளியாகும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார்.
பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்தாலும், அவரின் இடத்தை நிரப்பக்கூடிய சில வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணி வசம் உள்ளது. அதில் 3 முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Advertisment
Advertisements
1) முகமது ஷமி:
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முன்னணி வீரராக வலம் வரும் முகமது ஷமி, கடந்த டி20 உலகக் கோப்பையில் பும்ராவுடன் இணைந்து வலுவான வேகத் தாக்குதலை தொடுத்திருந்தார். அவரது துல்லியமான வேகப்பந்துவீச்சு இந்திய அணிக்கு நிச்சயம் உதவும். தவிர, ஷமி ஆஸ்திரேலிய சூழலில் அதிகம் அனுபவம் கொண்டவர். அவர் வீசும் பவுன்சர்களும், ஸ்லோயர் பந்துகளும் இந்திய அணி கூடுதலாக விக்கெட்டுகளை சாய்க்க உதவும்.
முன்னதாக, கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளான அவர் தற்போது குணமடைந்துவிட்டார். அவர் பும்ராவுக்கு பதில் அணியில் இடம் பிடிப்பாரா என்பது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கையில் தான் உள்ளது.
2) தீபக் சாஹர்:
ஷமியைத் தவிர, ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக வேறு யாரேனும் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருந்தால், அது தீபக் சாஹராக இருக்கலாம். ஸ்விங் பந்துவீச்சாளரான இவர் சமீப போட்டிகளில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் சில தருணங்களில் புத்திசாலித்தனமாக பந்துவீசி அசத்தி இருந்தார்.
தீபக் சாஹர் இந்திய அணியில் காத்திருப்பு வீரராக இருக்கிறார். மேலும், அவர் நல்ல ஃபிட்னஸிலும் உள்ளார். எனவே, அவரையும் பும்ராவுக்கு பதிலாக ஒரு மாற்று வீரராக அணி நிர்வாகம் கருதலாம்.
3) முகமது சிராஜ்:
டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் மாற்றாக ஆராயக்கூடிய மூன்றாவது விருப்ப வீரராக முகமது சிராஜ் இருக்கிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் காயமடைந்த பும்ராவுக்கு பதில் அவர் சேர்க்கப்பட்டார்.
பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் பெயரிடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், அவரை முழுமையாக விலக்கிவிட முடியாது. அதிகாரப்பூர்வ மாற்றாக ஷமி அல்லது சாஹர் முதன்மை அணிக்கு அழைக்கப்பட்டால், சிராஜ் காத்திருப்பு வீரர்கள் பட்டியல் சேர்க்கப்படலாம்.