டோனி ஒரு தலைசிறந்த வீரர் என்றும், கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்து அவர் மட்டுமே முடிவு செய்வார் என டோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்தார். முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரையடுத்து, டோனிக்கு ஆதரவாக விராட் கோலி கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரவி சாஸ்திரியும் குரல் கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. எனினும், இரண்டாவது டி20 போட்டியின் போது மகேந்திர சிங் டோனி பேட்டிங் செய்யும் போது சில தடுமாற்றம் கண்டார். இதனால், அவர் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இளம் வீரர்களுக்கு டோனி வாய்ப்பளிக்க வேண்டும் என முன்ளாள் கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால், அந்த சமயத்தில் யார் பேட்டிங் செய்திருந்தாலும், அதுபோன்ற நிலையை தான் சந்தித்திருப்பார்கள் என கேப்டன் விராட் கோலி, டோனிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்த நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது: மகேந்திர சிங் டோனிக்கு மோசமான நாட்கள் ஏற்படாதா என நினைக்கும் பொறாமை உள்ளம் கொண்ட பலர் இருக்கின்றனர். சிலர் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை எப்போது முடிவு வரும் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். டோனி மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர் அணியில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் டோனியும் ஒருவர். முன்னதாக தலைமை பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்திய டோனி, தற்போது அணியின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். அவர் ஒரு தலைசிறந்த வீரர் என்பதினாலேயே அடிக்கடி விவாதப் பொருளாக மாற்றப்படுகிறார் என்று கூறினார்.
மகேந்திர சிங் டோனி கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்காரணமாக டெஸ்ட்போட்டிகளில் விரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், லிமிடெட் ஓவர் போட்டிகளில் டோனிக்கு பதிலாக விருத்திமான் சாஹா அல்லது ரிஷப் பந்த் ஆகியோரை அழைக்கலாம் என குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
விளையாட்டில் எப்போதும் ஒரு வீரரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பது இயல்பானது தான். சில சமயங்களில் அனைவருக்கும் தடுமாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். டோனி மீது விமர்சனங்களை முன்வைப்பவர்கள், அவரது முந்தைய ஆட்டங்களையும் பார்த்து விமர்சனம் செய்வது தகுந்ததாக இருக்கும் என்பதே அவரது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.