மகளிர் கிரிக்கெட்... இந்திய வீராங்கனை தான் இப்ப நம்பர்-01

சர்வதேச மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி.

இந்தியாவில் பிரபலமான போட்டிகளில் முக்கியமானது என்றால் அது கிரிக்கெட் தான். அப்படி இருக்கையில் இந்திய ஆடவர் அணி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சச்சின் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது சாதனைகள் தான். பல்வேறு சாதனைக்கு உரியவரான சச்சின் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 463 போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களை குவித்துள்ளார். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 34,357 ரன்கள் குவித்து எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறார் சச்சின்.

இப்படி ரன் குவிப்பில் இந்திய வீரர் ஒருவர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், சர்வதேச மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையும் இந்தியருக்கே.

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி தான் அது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக்கின் சாதனையை முறியடித்துள்ளார் கோஸ்வாமி.

சர்வதேச போட்டிகளில் தனது 18-வது வயதிலேயே களம் கண்ட கோஸ்வாமி, கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோஸ்வாமி, சுமார் 120 கி.மீ வேகத்தில் பந்து வீசக் கூடியவர். இந்திய மகளிர் அணியின் கேப்டனாக 25-போட்டிகளுக்கு கோஸ்வாமி தலைமை தாங்கியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டின் ஐசிசி கிரிக்கெட்டர் விருதை கோஸ்வாமி பெற்றார். இதேபோல, 2010-ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2012-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் கோஸ்வாமிக்கு வழங்கப்பட்டது.

153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளும், 60 இருபது ஓவர் போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார் கோஸ்வாமி. ஒருநாள் பேட்டி, டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 223 போட்டிகளில் விளையடியுள்ள அவர் 271 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

×Close
×Close