ஊர்வன.. தாவுவன… பறப்பன…! இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த கிரேட் ஜாண்டி ரோட்ஸ்!

அந்த கேட்சை பற்றி சிலாகித்த நண்பன், 'அப்படியே பாஞ்சு வந்து ஜாண்டி ரோட்ஸ் மாதிரி பிடிச்சாண்டா' என்றான். யுவராஜ் பிடித்ததே ஜாண்டியின் கேட்ச் என்பதை ஏனோ அவன் அறிந்திருக்கவில்லை

By: July 25, 2019, 11:48:06 AM

2002ல் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி…

தாதா சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை துரத்தி ஆடி வந்த தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 38.1 ஓவரில் 194-1. கைக்கு எட்டிய தூரத்தில் வெற்றி. அப்போது சதம் விளாசி மிரட்டிக் கொண்டிருந்த, கிப்ஸ் காயம் காரணமாக 116 ரன்களில் வெளியேற, ஜாண்டி ரோட்ஸ் களமிறங்குகிறார். ஹர்பஜன் பந்தில், 1 ரன்னில் ஜாண்டி ஃப்ளிக் செய்த பந்தை, எங்கிருந்தோ பறந்து வந்த யுவராஜ் சிங், அபாரமாக ஒற்றைக் கையில் பாய்ந்து அந்த கேட்சைப் பிடிக்கிறார். அங்கிருந்து தொடர் விக்கெட்டுகள் சரிய, 251 ரன்களில் அடங்கிப் போனது தென்னாப்பிரிக்கா. அந்த ஒற்றை டைவ் கேட்சில் ஒட்டுமொத்த ஆட்டமும் மாறியது.

மறுநாள், பள்ளியில் அந்த கேட்சை பற்றி சிலாகித்த நண்பன், ‘அப்படியே பாஞ்சு வந்து ஜாண்டி ரோட்ஸ் மாதிரி பிடிச்சாண்டா’ என்றான். யுவராஜ் பிடித்ததே ஜாண்டியின் கேட்ச் என்பதை ஏனோ அவன் அறிந்திருக்கவில்லை.

பீல்டிங்கில் அப்படிப்பட்ட தனி டிரென்ட் செட்டை உருவாக்கி வைத்திருந்தவர் ஜாண்டி ரோட்ஸ்.

Jonty Rhodes Jonty Rhodes

தரையோடு தவழ, இந்திய ஃபீல்டர்கள் யோசித்த களத்தில், ஆதர்சன நாயகனாக இருந்து யுவராஜ் சிங், முகமது கைஃப் போன்ற ஃபீல்டர்கள் இந்தியாவுக்கு உருவாக காரணமாக இருந்தவர் ஜாண்டி ரோட்ஸ், இப்போது அதே இந்திய அணிக்கு பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரோட்ஸ், “ஆம், நான் இந்தியாவின் புதிய பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். என் மனைவியும், நானும் இந்தியாவை நேசிக்கிறோம். எங்களுக்கு இந்த நாடு ஏற்கனவே நிறைய கொடுத்து விட்டது. எனது இரு பிள்ளைகளும் இந்தியாவில் தான் பிறந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி தான், உலகில் அதிக பிஸியான டீம். ஆகையால், நான் மிகவும் மதிக்கும் நாட்டிற்கு பிஸியாக சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மாபெரும் வாய்ப்பாக அமையும்” என்றார்.

இந்தியாவில் பிறந்த தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்து, இந்திய நாட்டின் மீதான தன் அன்பை வெளிப்படுத்திய ஜாண்டி ரோட்ஸ், இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளித்தால், அதிகபட்ச ரிசல்ட் கிடைக்கும் என்பது உறுதி!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Jonty rhodes applies for indian cricket team fielding coach

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X