குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஒருவர், பதக்கம் வென்ற அடுத்த நிமிடம் அதனை பையில் எடுத்து வைத்துக் கொண்டு, தனது தந்தையுடன் லெஸ்சி விற்க கிளம்புகிறாள் என்றால், அவள் தான் ரஜ்னி.
சண்டிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த 2வது ஜூனியர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 46 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்ற ரஜ்னியைப் பற்றித் தான் நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரஜ்னி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை ஜஸ்மர் சிங், பானிபட் நகரில் லெஸ்சி விற்பனை செய்பவர். தினம் 12 மணி நேரம் லெஸ்சி விற்று குடும்பத்தைக் காப்பாற்றும் ஜஸ்மரின் 6 பிள்ளைகளில் மூன்றவாது பிள்ளையான ரஜ்னி தான் நமது ஹீரோ.
தந்தையின் லெஸ்சியை குடித்து வளர்ந்ததாலோ என்னவோ, சிறுவயது முதலே குத்துச் சண்டையில் பேரார்வம் கொண்டிருக்கிறார் ரஜ்னி. விருப்பத்தை தன் தந்தையிடம் தெரிவிக்க, அவரும் மகளை ஊக்குவித்து வந்திருக்கிறார். அந்த ஊக்குவிப்பு தான் இன்று அவளை மிகப்பெரிய பாக்ஸராக உருவெடுக்க வைத்திருக்கிறது.
சுரிந்தர் மாலிக் எனும் பயிற்சியாளரிடம் பழைய கிளவுஸ் அணிந்து தினம் கடும் பயிற்சி மேற்கொள்ளும் ரஜ்னி, கடந்த வருடம் டெஹ்ராடூனில் நடந்த முதல் BFI ஜூனியர் நேஷனல்ஸ் குத்துச் சண்டைப் போட்டியில், 46 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று தேசிய சாம்பியன் ஆனார்.
செர்பியாவில் இந்தாண்டு நடைபெற்ற தேசிய ஜூனியர் தொடரில், ரஷியாவை சேர்ந்த வீராங்கனையை வீழ்த்தி, மேலும் ஒரு தங்கத்தை வேட்டையாடியிருக்கிறார் ரஜ்னி.
தன் குடும்பம் மட்டுமல்லாமல் ஊருக்கே பெருமை சேர்த்திருக்கும் ரஜ்னி பேசுகையில், "ஒவ்வொரு நாளும் நான் கண்விழிக்கும் முன்பே என் தந்தை வேலைக்கு சென்று விடுவார். லெஸ்சியை எடுத்துக் கொண்டு பல கிலோமீட்டர்கள் வண்டியில் சென்று விற்று வருவார். எனது ஆசைக்கு தடை போடாமல் அவர் ஒப்புக் கொண்டார். குத்துச் சண்டை செய்வதால், தினம் மூன்று வேளையும் முழு சாப்பாடு சாப்பிட வேண்டும். ஆனால், எப்போதும் எங்களால் அப்படி சாப்பிட முடியாது. எனது தாய் உஷா ராணி, மீதம்பட்ட தயிரில் நெய் செய்து எனக்கு தருவார்" என்றார் நெகிழ்ச்சியாக.
அதுமட்டுமின்றி, 'எனது ஆசையே ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமை சந்திக்க வேண்டும் என்பது தான்' என்கிறார் ரஜ்னி. "மேரி கோம் அக்கா தான் எப்போதும் எனது ரோல் மாடல். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவர் தான். ஒருநாள், நான் மற்றுமொரு தங்கம் வெல்வேன், அப்போது அவர் தான் எனக்கு அந்த மெடலை அணிவிப்பார். அந்த நாள் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மகிழ்ச்சியை எனக்கு கொடுக்கும்" என்கிறார் கண்களில் வேட்கையுடன்.
ஆல் தி பெஸ்ட் ரஜ்னி!.