இது எதிர்பார்த்தது தான்! தரவரிசையில் கோலி, புஜாரா சரிவு!

டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா சரிவை சந்தித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா சரிவை சந்தித்துள்ளனர்.

கேப்டவுனில் நடைபெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென்.ஆ. வெற்றிப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் தாக்குப்பிடித்து 93 ரன்கள் எடுக்க, விராட் கோலி உட்பட மற்ற டாப் பேட்ஸ்மேன்கள், எதையோ மறந்து வைத்துவிட்டு வந்தது போல், ஒருவர் பின் ஒருவராக அவுட்டாகி பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். 208 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, இரண்டாம் இன்னிங்ஸில் வெறும் 135 ரன்களுக்கு சுருண்டு தோற்றுவிட்டது.

இந்த நிலையில், தற்போது ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 947 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இரண்டாம் இடத்தில் இருந்த விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி நியூசி., கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அதேபோல், புஜாராவும் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரையில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின் தள்ளி, முதன் முறையாக தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை ஜடேஜா 3வது இடத்திலும், அஷ்வின் 4வது இடத்திலும் உள்ளனர். புவனேஷ் குமார் தனது கரியர் பெஸ்ட்டாக 22வது இடத்தைப் பிடித்துள்ளார்.

×Close
×Close