J Anbazhagan Death: கலைஞர் கருணாநிதியின் மனசாட்சியாக திகழ்ந்தவர், மறைந்த ஜெ.அன்பழகன். இருவருமே அதி தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். கலைஞரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து, கடந்த உலகக் கோப்பைத் தொடரின்போது ஐஇ தமிழுக்கு ஜெ.அன்பழகன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறோம்...
கலைஞர் கருணாநிதியை வீட்டிலோ, அலுவலகத்திலோ தினமும் ஒரு முறையாவது சந்திக்கிற நபராக இருந்தவர், ஜெ.அன்பழகன். சென்னையில் திமுக.வின் முன்னணி தலைவரான அவர், உலகக் கோப்பை போட்டி நெருங்கும் சூழலில் கலைஞரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து நெகிழ்வுடன் சில தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்...
‘தலைவர் (கலைஞர்) வாழ்க்கையில் ரொம்ப ரசிச்ச விளையாட்டு, கிரிக்கெட். அவருக்கு எந்த நாடுன்னுலாம் கிடையாது. கிரிக்கெட்ல யாரு நல்லா விளையாடுனாலும் ரசிப்பார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் என்றால், சும்மா வேடிக்கை பார்ப்பது அல்ல. அதைத் தாண்டி வீரர்களைப் பற்றி தலைவர் தெரிந்து வைத்திருந்தார். எல்லா நாட்டு வீரர்கள் பெயரையும் நினைவில் வச்சுச் சொல்வார்.
ஒரு தடவை பழைய மேட்ச் ஒன்றை டி.வி.யில பார்த்துகிட்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிரீனிட்ஜும், ஹெயின்ஸும் ஆடிகிட்டிருந்தாங்க. பக்கத்துல இருந்தவங்க, ‘இவருதான் வேர்ல்ட் கப்ல இந்தியாவின் பல்வீந்தர் சந்துவின் பந்தை வெல் லெஃப்ட் விட்டு போல்ட் ஆனவர்’னு கிரீனிட்ஜை சொன்னாங்க. ஹெயின்ஸ் பேரு சட்டுன்னு யாருக்கும் தெரியல. உடனே தலைவர், ‘இவர்தான் ஹெயின்ஸ்’னார். சமயத்துல புது பிளேயர்ஸ் பெயர் தெரியலைன்னா, கேட்டுக்குவாரு.
கடைசி காலங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்ததால், முழு மேட்ச்சையும்கூட பார்ப்பார். இந்தியா ஆடினால், பயங்கர சப்போர்ட்டா பேசுவார். இந்தியா ‘வின்’ பண்ணும்யானு சொல்வார். பக்கத்துல இருந்து பார்த்தவங்களுக்கு இது தெரியும்.
நல்ல உடல் நிலையில் இருந்தப்போ, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்கப் போயிருக்கார். கடைசியா 2006 காலகட்டத்தில் முதல்வராக இருந்தபோது போய் பார்த்தார். ஐபிஎல் மேட்ச், டெஸ்ட் மேச்சையும் கூட பார்ப்பார். சில நேரங்களில் வேறு ஏதாவது அழைப்புகள் வந்தாலும், ‘கொஞ்சம் பொறுய்யா. வாரேன்’ன்னு மேட்ச்சை பார்த்துட்டு வருவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் ஆர்வலர்.
கட்சியில இருக்கிற எல்லாருக்கும் கிரிக்கெட் தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சி நிர்வாகிகளிடம், யாருக்கு கிரிக்கெட் தெரியும்னு பார்த்து அவங்ககிட்ட மட்டும் அதப் பற்றிப் பேசுவாரு. நான் பள்ளியில் கிரிக்கெட் அணியில் இருந்தேன். அதனால கிரிக்கெட் ஆர்வம் இயல்பா தொடருது. யார ஓபனிங் இறக்கினா நல்லாருக்கும், யாரு ஒன் டவுன் இறங்கணும், யாரு மிடில் ஆர்டருக்கு சூட் ஆவாங்கன்னு என்னால சொல்ல முடியும்.
+ ‘கொஞ்சம் பொறுய்யா. வாரேன்’ன்னு மேட்ச்சை பார்த்துட்டு வருவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் ஆர்வலர்.
+ தன் பேரன் ஆதித்யா (கனிமொழி மகன்) கூட கிரிக்கெட் பற்றி அதிகமா பேசுவாரு.
+ கபில்தேவையும், டெண்டுல்கரையும் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அழைச்சுப் பேசுவார்.
கிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் உண்டுன்னு அவருக்கு தெரியும். ‘என்னய்யா, இன்னைக்கு இவங்க சரியா ஆடுவாங்களா? நீ என்ன சொல்ற’ன்னு ஆரம்பிப்பார். நான் யார் பெயரையாவது சொல்லி, ‘அவரு அடிச்சாத்தான் மேட்ச் மாறும்’னு சொல்வேன். அதற்கு அவரும், யார் பெயரையாவது குறிப்பிட்டு பேசுவார். அல்லது குறிப்பாக, ‘இல்லையா... டெண்டுல்கர் இன்னைக்கு அடிப்பாருய்யா’என்பார்.
அப்புறம் டெண்டுல்கர் அடிக்காவிட்டால், ‘எல்லா மேட்ச்லயும் ஆட முடியாதுப்பா’ என்பார். சென்னையில் மேட்ச் நடந்தப்போ டெண்டுல்கரும், டோனியும் தலைவரை சந்திச்சுருங்காங்க. தலைவர் வீட்டுல அந்த போட்டோ இருக்கு.
தன் பேரன் ஆதித்யா (கனிமொழி மகன்) கூட கிரிக்கெட் பற்றி அதிகமா பேசுவாரு. மூணு வருஷத்துக்கு முன்ன அந்தப் பையன் சிறுவனா இருந்தாலும்கூட, எல்லாப் பிளேயர்ஸ் பெயர்களையும் சொல்வான்.
கபில்தேவையும், டெண்டுல்கரையும் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அழைச்சுப் பேசுவார். தமிழக வீரர் ஒருவர் வேர்ல்ட் கப் ஜெயிச்ச அணியில் இருந்தது, கேப்டனாக இருந்தது எல்லாமே அவர் மேல பிரியத்துக்கு காரணம்.
இன்னைக்கும் தலைவர் மேல ஸ்ரீகாந்துக்கு பெரிய மரியாதை உண்டு. ஐந்து வருஷத்துக்கு முன்னால, கலைஞர் பிறந்த நாளையொட்டி நான் ஒரு கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்துனேன். அதுக்கு ஸ்ரீகாந்தை வீட்டில் சென்று கூப்பிட்டதும், ‘நான் கண்டிப்பா வர்றேன். இதுல அரசியல் இல்லை. கிரிக்கெட்டுக்கு அவர் (கலைஞர்) நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கிறார்’னு சொல்லிட்டு வந்தார்.
கிரிக்கெட்டை பார்க்கும்போதும், தலைவர் நினைவுகளை தவிர்க்க முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.