எல்லோருக்கும் நம் துறை சார்ந்த ஒரு நம்பிக்கை இருக்கும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நிறத்திலான ஆடைகளை அணிந்து சென்றால் தான் அன்றைய காரியம் நிறைவேறும் என நினைப்பவர்களும் உண்டு. கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மாதிரி அனைவராலும் அறியப்படாத சில நம்பிக்கைகள் உள்ளன.
சச்சின், ஹர்பஜன் சிங், அஷ்வின், கபில் தேவ் என இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் அவர்களுக்கே உரித்தான சில நம்பிக்கைகள் உண்டு. அதனை கடைபிடித்தால் தான் போட்டியில் வெற்றிபெறுவோம் அல்லது நாம் விளையாடுவது சிறப்பாக இருக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
கபில் தேவ், அதுமாதிரி தான் நம்பும் சில வழக்கங்களை சமீபத்தில் தெரிவித்தார்.
“எல்லோருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கு. அதேமாதிரி எனக்கும் உண்டு. வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும்போது இந்தியா நன்றாக விளையாடினால், என் குடும்பத்தார் என்னை வெளியே செல்ல கூட அனுமதிக்க மாட்டார்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை எல்லோருக்குமே ஒரு நம்பிக்கை இருக்கும். அதனால் தான் இந்த விளையாட்டு இவ்வளவு பிரபலமாக இருக்கிறது”, என கபில் தேவ் தெரிவித்தார்.
”ஆரம்ப காலங்களில் நான் விளையாட செல்லும்போது, முதலில் என்னுடைய வலது காலுக்குதான் காலுறை அணிவேன். மைதானத்தில் வலது காலை எடுத்து வைத்துதான் நுழைவேன்”, என கிரிக்கெட் போட்டியின்போது தான் பின்பற்றும் சில நம்பிக்கைகளை கூறினார்.
மேலும், சிவன் டாலர்கொண்ட மெல்லிய செயினையும் போட்டிக்கு முன்னதாக அணிந்து செல்லும் வழக்கத்தை கபில்தேவ் கொண்டிருந்தார். ஆனால், அந்த செயின் விளையாடும்போது பல சிரமங்களை தந்ததால் அதனை கழற்றிவிட்டதாகவும் கபில் தேவ் தெரிவித்தார்.
”நான் அணிந்த செயின் எனக்காக ஸ்கோர்களை வாங்கித் தர போவதில்லை. கடவுள் இருந்தால் அவர் நிச்சயம் இருப்பார். அதற்காக நான் அந்த செயின் அணிந்தால் தான் எனக்கு அவர் துணைபுரிவார் என்று அர்த்தம் இல்லை”, என கபில் தேவ் கூறினார்.
”அந்த செயின் இல்லாமல் என்னால் ஸ்கோர் எடுக்க முடிகிறதா என்பதை நான் அறிய முயற்சித்தேன். அதனால், எல்லாவற்றையும் கழற்றிவிட்டேன். இப்போதெல்லாம், சில கிரிக்கெட் வீரர்கள் எல்லாவற்றையும் அணிந்துகொண்டு விளையாடும்போது அவற்றை சரிசெய்வதை பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. அவர்களுக்கு தன்னம்பிக்கை இன்னும் வரவில்லை.”, எனவும் கபில் தேவ் தெரிவித்தார்.