தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின.
‘டாஸ்’ ஜெயித்த திருச்சி கேப்டன் பாபா இந்த்ரஜித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி பாபா இந்த்ரஜித்தும், பரத்சங்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். யோகேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே பரத்சங்கர் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். மறுமுனையில் இந்த்ராஜித் 2 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்த ஆதித்யா கிரிதர் 27 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதன்பின் தான் ஆட்டம் களைக்கட்டியது. 23 வயதான பரத்சங்கர் நாலாபுறமும் பந்துகளை விளாசினார். காரைக்குடி அணியின் அனைத்து பவுலர்களையும் டேமேஜ் செய்த பரத், 19-வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பதிவான 3-வது சதம் இதுவாகும். இந்த சீசனில் எடுக்கப்பட்ட 2-வது சதமாகும். ஏற்கனவே தூத்துக்குடி வீரர் வாஷிங்டன் சுந்தர் (107 ரன்) சதம் அடித்திருந்தார்.
இதனால், திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. பரத்சங்கர் 112 ரன்களுடன் (68 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்), அகில் ஸ்ரீநாத் 37 ரன்களுடனும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) இறுதிவரை களத்தில் இருந்தனர். இருவரும் கடைசி 6 ஓவர்களில் மட்டும் 92 ரன்களை விளாசினர்.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய காரைக்குடி அணியும், ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் விஷால் வைத்யா (40 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), அனிருதா (60 ரன், 42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) இருவரும் அதிரடி காட்டி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர்.
கேப்டன் பத்ரிநாத் 10 ரன்னிலும், ஆதித்யா 16 ரன்னிலும் அவுட்டானார்கள். இருப்பினும், இறுதிக் கட்டத்தில் ஷாஜஹான் 25 பந்தில் 39 ரன்கள் குவிக்க, 18.5-வது ஓவரிலேயே, காரைக்குடி அணி 193 ரன்கள் எடுத்து வென்றது. லீக் சுற்றில் 4-வது வெற்றியை பெற்ற காரைக்குடி அணி, இதன் மூலம் ‘பிளே-ஆஃப்’ சுற்றை உறுதி செய்தது. முன்னதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/Z54-300x217.jpg)
இந்த ஆட்டத்தில் இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் 21 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். மேலும் அதிகபட்ச ‘சேசிங்’ ஸ்கோரும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.