இந்தியா vs தென்னாப்பிரிக்கா 5வது ஒருநாள் போட்டி: போர்ட் எலிசபெத் சொல்லும் சோக வரலாறு!

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி, போர்ட் எலிசபெத் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி, போர்ட் எலிசபெத் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில், நாளை போர்ட் எலிசபெத் நகரில் ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. தொடரில் 3-1 என இந்தியா முன்னிலை வகிப்பதால், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றால் கூட முதன்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடலாம். அதேசமயம், டி வில்லியர்ஸின் வருகை, நான்காவது போட்டியில் அபார வெற்றி என்று தென்.ஆ. தற்போது பாசிட்டிவ் மோடில் உள்ளது.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்பது சற்றே கவலைத் தரக் கூடிய ஒரு தகவலாகும். அதாவது, இதுவரை இந்த மைதானத்தில் இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், தென்னப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் நான்கு முறை மோதியுள்ளது.

குறிப்பாக, இதே மைதானத்தில் 2001ம் ஆண்டு கென்ய அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்றுள்ளது. கென்யா நிர்ணயித்த 247 எனும் இலக்கை எட்ட முடியாமல், கங்குலி தலைமையிலான இந்திய அணி 176 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. கடைசியாக, இங்கு 2011ம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றுள்ளது.

இந்த மோசமான சாதனைகளை நாளை கோலி தலைமையிலான இந்திய படை தகர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

×Close
×Close