India vs zimbabwe squad 2022 Tamil News: ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது.
அந்த அணியில் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்றும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா பாதிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. அதன் காரணமாக அவர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட உள்ளதாக பிசிசிஐ அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
கேப்டன் ராகுல் – பின்னணி என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கருதப்படும் “குட்டி கோலி” என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்படும் கே எல் ராகுல் தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் கேப்டனாக மறுபிரவேசம் கொடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும், தற்போது முழு உடல் தகுதியை எட்டிய ராகுல் பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்றும் பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது.
கடந்த மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்தினார். அவரது தலைமையிலான அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வாஷ் அவுட் செய்து, தொடரை 3 – 0 என்கிற கணக்கில் கைப்பற்றியது. இதனால், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரையும் தவான் தலைமையிலான அணி கைப்பற்றி அசத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முழு உடற்தகுதியை எட்டிய கேஎல் ராகுல் திடீரென அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில், ராகுல் அவசர அவசரமாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதற்கும், கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கும் சில காரணங்கள் உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வரும் கேஎல் ராகுல் கடந்த இரண்டரை மாதங்களாக எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. எனவே, அவருக்கு பயிற்சி வேண்டும் என்பதாலும், அவரின் பழைய ஃபார்மை மீட்கவும் ஜிம்பாப்வே தொடரில் பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதேபோல், அண்மையில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வே அணி வென்று மிரட்டியுள்ளது. எனவே, பலமிக்க அணியாக உருவெடுத்துள்ள அந்த அணியை சமாளிக்க திறமையான இந்திய தேவை.
மேலும், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஆடும் இந்திய அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற எந்த வீரருக்கும் அவ்வளவு அனுபவம் இல்லை. இதனால் இந்திய அணிக்கு பெரும் சரிவு ஏற்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரித்தனர். இதைக் கருத்தில் கொண்ட இந்திய அணி நிர்வாகம், அணியை பலப்படுத்தும் விதமாக கேஎல் ராகுலுக்கு அவசர அவசரமாக வாய்ப்பு வழங்கியுள்ளது.

தவிர, காயத்தில் இருந்து மீண்டுள்ள ராகுல் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் துணைக்கேப்டனாகவும் செயல்பட இருக்கிறார். இப்போட்டி டி-20 ஃபார்மெட்டில் நடக்கவுள்ள நிலையில், இதே அணி அக்டோபரில் நடக்கும் டி-20 உலகக் கோப்பையிலும் களமிறங்க வாய்ப்புள்ளது. அந்த அணியிலும் ராகுல் முக்கிய வீரராக இருப்பார். இதையனைத்தையும் கணக்குபோட்டுள்ள பிசிசிஐ அவரை இந்த தொடருக்கான அணியின் கேப்டனாக நியமித்துள்ளது.
ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.
NEWS – KL Rahul cleared to play; set to lead Team India in Zimbabwe.
— BCCI (@BCCI) August 11, 2022
More details here – https://t.co/GVOcksqKHS #TeamIndia pic.twitter.com/1SdIJYu6hv
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil