Virat Kohli – Babar Azam Tamil News: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக வலம் வருபவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இதேபோல், பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரராக இருப்பவர் கேப்டன் பாபர் அசாம். இந்த இரு வீரர்களுமே தங்களது சொந்த நாட்டு தேசிய அணிக்காக களமாடி, உலக கிரிக்கெட் அரங்கில் பல மகத்தான சாதனைகளை படைத்துள்ளனர். மேலும், முன்னாள் வீரர்கள் பலரின் சாதனைகளை முறியடித்துள்ளனர்.
இதனால், இந்த இரு வீரர்களும் அடிக்கடி ஒப்பிட்டு பேசப்படுவது வழக்கம். இவ்விருவரில், கோலி 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே சமயம், பாபர் 2015ல் அறிமுகமானார். வயது அடிப்படையில் கோலி பாபரை விட 6 வருடங்கள் மூத்த வீரர். பாபர் இளம் வீரராக இருந்தாலும், அவரின் பேட்டிங் பாணி, ஷாட் தேர்வுகள், மேட்ச் வின்னிங் ஆட்டம் அனைத்தும் கோலியின் ஸ்டைலில் இருந்தது. குறிப்பாக, டி-20-யில் அவரது நுட்பமான ஆட்டத்திற்கு, கோலியைத் தான் பிரதிபலிக்கிறார் என்று பலரும் குறிப்பிட்டனர்.

கோலி தனது ஆரம்ப ஆண்டுகளில் அவரது திறமையின் உச்சத்தில் இருந்தார். மூர்க்கத்தனமான, பந்துகளை சிதறடிப்பவராக, பவுலர்களுக்கு பயம் காட்டுபவராக என களத்தில் நாளுக்கு நாள் பிரமிப்பூட்டினார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் கோலியின் மோசமான பார்ம், அவரை விரும்பியோரின் உதட்டை கூட வசை பாட வைத்தது.
இதற்கிடையில், பாபர் தனது பேட்டிங் பாணியில் தனக்கென ஒரு முத்திரையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்க தொடங்கினார். கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கை கட்டுரையின் முடிவுரையை எழுதுகிறார் என்று பலரும் ஊகித்து கருத்து தெரிவித்த தருணத்தில், ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் தனது சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 71-வது சத தாகத்தையும் ஒரு வழியாய் தீர்த்துக்கொண்டார் கோலி.

ஏற்கனவே, அவர் தற்காலிக ஃபார்ம் அவுட்டில் இருந்த போது, நட்சத்திர வீரராக ஜொலித்த பாபருடன் அவ்வப்போது ஒப்பிடப்பட்ட நிலையில், தற்போது அவரின் எழுச்சி பாபருடன் அடிக்கடி ஒப்பிட தூண்டியுள்ளது. எனவே, ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் அவர்களின் தரவுகளை கையில் வைத்துக்கொண்டு அடிக்கடி ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
கோலி – பாபர் வைரல் பதிவு
இந்நிலையில், இந்த இரு வீரர்கள் பற்றிய சமீபத்திய பதிவு ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், இருவரின் சிறுவயது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள், இருவரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டு வீரர்களும் புகைப்படங்களில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்றும், ஒரே மாதிரியான நிறத்தில் சட்டைகளை அணிந்துள்ளனர் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பதிவில், “பாபர் – கோலி இருவரும் ஒரே சட்டைகளை அணிந்துள்ளனர், அது எப்படி?” என்று கருத்து தெரிவித்து, ஒரே மாதிரியான ஃபிளானல் சட்டைகளை அணிந்திருந்த இரண்டு வீரர்களின் குழந்தைப் பருவ புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பதிவு இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
How come, both babar & kohli are wearing the same shirts 😭
— Masab Aqeel Janjua (@MasabAqeelreal) September 27, 2022
That bowl cut 🥰 pic.twitter.com/85PYXR6tyA
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil