பெர்த்தில் நடந்து வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆனால், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் நாதன் லயன் வீசிய முதல் ஓவரின் 4வது பந்திலேயே அவுட்டானார். அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி, தனது 25வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
அதன் பிறகு ஹனுமா விஹாரி 20 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 36 ரன்களுடனும் அவுட்டாக, இந்தியா 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 111 ரன்களில் இழந்து, லீட் பெற நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டுள்ளனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.
ஆனால், அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட், கிரிக்கெட்டின் மாண்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை, கோலி டிரைவ் ஆட முயன்றார். ஆனால் அவரது பேட்டை முத்தமிட்ட பந்து, 2வது ஸ்லிப்பில் நின்றுக் கொண்டிருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் கைகளில் தஞ்சமடைந்தது. அவரும் அவுட் அப்பீல் செய்ய, கள அம்பயர் அவுட் கொடுத்தார்.
ஆனால், விராட் கோலி அந்த கேட்சில் சந்தேகம் எழுப்ப, 3வது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்டது. வீடியோ ரீப்ளேயில் பந்து தரையில் பட்டு கையில் சிக்கியதை தெளிவாக காட்டியது. இமேஜ் பெரிதாகப்பட்டு காட்டப்பட்ட போதும் தரையில் பட்ட பிறகுதான் கைக்குச் சென்றது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a105-300x217.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a106-300x217.jpg)
இருப்பினும், 3வது நடுவர் நீஜல் லாங் அவுட் கொடுக்க, கோலி உட்பட ஒட்டுமொத்த ரசிகர்களும் ஷாக்கானார்கள். சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக வழங்குவது தான் பொதுவான நடைமுறை. ஏனெனில், ஒரு பேட்ஸ்மேன் அவுட் கொடுக்கப்பட்டு, எல்லைக் கோட்டை தாண்டிவிட்டால், எக்காரணத்தை முன்னிட்டும் அவர் மீண்டும் பேட் செய்ய வர முடியாது. ஒருமுறை அவுட் என்றால் அவுட் தான். ஆனால், அந்த பவுலர்கள் அதற்கு பிறகு எத்தனை முறை வேண்டுமானாலும், அதே பேட்ஸ்மேனுக்கு பந்துவீசி, அவரை அவுட்டாக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் சந்தேகம் இருந்தால், பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
ஆனால், இன்று விராட் கோலி அவுட் இல்லை என்று தெரிந்தும், தேர்ட் அம்பயர் அவுட் அளித்து வெளியேற்றிருக்கும் நிகழ்வு அபத்தமானது என்றால் மிகையாகாது.
வெறுப்பில் சென்ற கோலி, ஹெல்மெட்டை தூக்கி எறிந்து விட்டு பெவிலியன் திரும்பினார்.
பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள், பீல்டிங்கில் மோசடி செய்ததற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. 2008ல் சிட்னி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் சவுரவ் கங்குலிக்கு இதே போன்று கேட்சா இல்லையா என்ற சர்ச்சையின் போது, கேப்டன் ரிக்கி பாண்டிங்கே கங்குலிக்கு அவுட் கொடுத்த கொடுமை அரங்கேறியிருக்கிறது. பிரையன் லாராவுக்கு ஸ்டீவ் வாஹ் தரையில் பட்டு கேட்ச் எடுத்து அவுட் வாங்கியுள்ளார்.
இப்போது, விராட் கோலிக்கும் அப்படியொரு பேட் மொமன்ட்ஸ்-ஐ பரிசளித்துள்ளது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம். அவுட் ஆகாமல், விராட் கோலி வெளியேற்றப்படுகிறார் என்ற சங்கடம் கொஞ்சம் கூட இல்லை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு.
2011ல், இங்கிலாந்து தொடரின் போது, இயான் பெல் தவறாக ரன் அவுட் கொடுக்கப்பட்டார் என்பதை அறிந்த இந்திய கேப்டன் தோனி, அவரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார் என்பது வரலாறு!.